உலகிலேயே கொடிய நோய் என்று ஒன்று இருக்குமானால், அது ‘சுயபச்சாதாபம் தான். அதாவது, நாமே நம் மீது பரிதாபப்பட்டு, புலம்பிக்கொண்டே இருப்பது. நம் கண் முன்னாலேயே நாம் வீழ்வதற்கு வழி வகுக்கக் கூடியது, இந்த சுயபச்சாதாபம்.
“நான் அழகாக இல்லை”
“நான் குட்டையாக / குண்டாக இருக்கிறேன்”
“எனக்கு உறவினர்கள் உதவவில்லை”
“எனக்கு இந்த நோய் இருக்கிறது”
“என்னிடம் போதுமான பணம் இல்லை”
“என் மீது யாரும் அன்பு செலுத்துவதில்லை”
“என்னை ஒரு பொருட்டாக எவரும் மதிப்பதில்லை”
இப்படி எல்லாம் உங்கள் மீது நீங்களே இரக்கம் கொண்டிருந்தீர்களேயானால் நீங்கள் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது.
உங்களிடத்தில் ஏதோ ஒன்று குறைவாக இருந்தால், வேறொன்று அதிகமாக இருக்கும். இது உலக நியதி ! அந்த வேறொன்று என்ன என்பதைக் கண்டறியுங்கள். அதில் கவனம் செலுத்துங்கள். அதை மூலதனமாக வைத்து முன்னேறப் பழகுங்கள். இதைத்தான் வெற்றியாளர்கள் செய்கிறார்கள்.
பிராங்ளின் டி ரூஸ்வெல்ட் (FRANKLIN D ROOSEVELT) பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அமெரிக்காவின் 32 ஆவது அதிபர் அவர். 1882 முதல் 1945 வரை வாழ்ந்தவர். போலியோ நோயால் பாதிக்கப்பட்டு கை, கால்கள் செயல் இழந்தவர். இருந்த போதிலும் 1933 முதல் இறக்கும் நாள் வரை – அதாவது 1945 வரை, சுமார் 13 ஆண்டுகள் அமெரிக்க அதிபராக இருந்தவர். மிகப்பெரிய பொருளாதார மந்த நிலையையும், உலகப் போர்களையும் எதிர்கொண்டு – அந்த பாதிப்புகளில் இருந்து அமெரிக்க தேசத்தை மீட்டுக் கொண்டு வந்த பெருமைக்குரியவர். அவர் உருவாக்கிய நேஷனல் பவுண்டேஷன் பார் இன்ஃபண்டைல் பாராலிசஸ் (NATIONAL FOUNDATION FOR INFANTILE PARALYSIS) என்ற அமைப்பு தான் பின்னாளில் போலியோ தடுப்பு சொட்டு மருந்தைக் கண்டுபிடித்து உலகிற்கு வழங்கியது.
தெரிந்து கொள்ளுங்கள்…. ஒரு நாளும் ரூஸ்வெல்ட் தன்னுடைய இயலாமையை எண்ணி வருந்தியதே கிடையாது.
உங்களுக்கு நடிகை சுதா சந்திரனைத் தெரியாமல் இருக்க முடியாது. கால்கள் ஊனமுற்ற நிலையிலும், மிகச் சிறந்த பரதநாட்டிய நங்கையாகவும், சிறந்த திரைப்பட நடிகையாகவும் விளங்கியவர்.
அவர் ஒருபோதும் கால் ஊனத்தைப் பற்றி புலம்பியது கிடையாது…. ஏன் ? அலட்டிக் கொண்டது கூட கிடையாது.
உடல் ஊனத்தையே கடந்து, இவர்களெல்லாம் வெற்றி பெற்றிருக்கிறபோது, உங்களால் ஏன் – சாதாரண மன ஊனத்தை வெற்றி கொள்ள இயலாது?
உங்கள் முன் இருப்பது ஒரே கேள்வி தான்….. புலம்பிக்கொண்டே இன்றைய பொழுதை எதிர் கொள்ளப் போகிறீர்களா? அல்லது சிரித்த முகத்தோடு இருப்பதை வைத்து பறப்பதைப் பிடிக்கப் போகிறீர்களா ?
– இராம்குமார் சிங்காரம், Motivational speaker in tamil nadu