fbpx
Archive for month

January, 2024

தேடி வரும் தெய்வ உதவி! | God’s help in disguise
motivational speaker in tamil nadu
  • January 22, 2024

முக்காலமும் உணர்ந்த துறவி அவர். கடவுளைத் தொடர்ந்து தியானித்ததால், பெரும் வலிமை பெற்றிருந்தார். அவர் உருகித் தியானித்தால், கடவுளே நேரில் வந்து நிற்குமளவு சக்தி படைத்தவர். ஆற்றங்கரையோரம் ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்தார். அவர்மேல் சுற்றுப்பட்டு கிராம மக்கள் மிகுந்த பாசத்துடன் இருந்தனர். ‘சாமியின் வரவால், கிராமமே செழிப்பாக இருக்கிறது!’ என்பது அவர்களின் நம்பிக்கை. ஒருநாள், அவர் நித்திரையில் இருந்தபோது, ஆசிரமக் கதவு தடதடவென தட்டப்பட்டது. நித்திரை கலைந்த கோபத்தில் கதவைத் திறந்தவர், ஒரு மாடு மேய்ப்பவன் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தார். ‘என்ன சங்கதி.?’ என்றார். “சாமீ…ஆத்துல வெள்ளம் வருதுங்க..! அதான் தகவல் சொல்லலாம்னு வந்தேன்!” என்றான்.

கோபுத்தில் இருந்த சாமி, ‘அதையேன் என்னிடம் சொல்கிறாய்…உனக்குப் பயமாக இருந்தால், ஓடி ஒளிந்து தப்பித்துக் கொள்!” என்று சொன்னபடி சுதவைச் சாத்திவிட்டு நித்திரையைத் தொடர்ந்தார். சிறிது நேரத்தில் படுக்கை ஈரமானது. கண்ணைத் திறந்த துறவி, ஆசிரமத்தின் உள்ளே நீர் புகுந்திருப்பதைக் கண்ணுற்று

எழுந்து உட்கார்ந்தார். நீரின் வேகம் அதிகரித்தது. நீரின் வேகத்தில் ஆசிரமத்தின் மண் சுவர்கள் ஆட்டம் கண்டு விழ ஆரம்பித்தன. எழுந்து நின்ற துறவியின் மார்பளவு நீர் சூழ்ந்தது. இறைவனை எண்ணித் தவம் செய்யலானார். அப்போது, பதற்றமான குரலில் அவரை அழைத்தபடி வந்தான் ஒரு படகோட்டி. “சாமீ சீக்கிரம் ஏறிக்கங்க… அணைக்கட்டு -உடைஞ்சிடுச்சாம். ஊர்ல ஒருத்தரும் தப்பிக்க முடியாதுன்ற நிலை. நீங்க எங்களுக்கு முக்கியம். ஏறிக்கங்க சாமீ தப்பிச்சுடலாம்!” என்றான். அற்பப் பதராக அவனைப் பார்த்த துறவி, “நீ யாரடா என்னைத் தப்பிக்க வைப்பதற்கு! கடவுளின் அருள் பெற்றவன் நான். என்னைக் காக்க ஆண்டவன் இருக்கிறான்!” என்றபடி தியானத்தைத் தொடர்ந்தார். கழுத்தைத் தாண்டிய நீர் மூச்சை முடக்கத் தொடங்கியது. அருகில் இருந்த மரத்தின் மேல் ஏறிக் கொண்டு தியானத்தைத் தொடர்ந்தார்.

காதருகில் ராட்சத கொசுவின் ரீங்காரம் கேட்டது. கண்விழித்துப் பார்த்தார். ஒரு கயிறு தொங்கியது. கயிற்றின் மறுமுனையை அண்ணாந்து பார்த்தார். ஒரு ஹெலிகாப்டர், ராணுவ உதவியாளர்கள் ‘கமான் கயிறைப் பிடிச்சு மேலே வாங்க!” என்றார்கள் ராணுவ வீரர்கள். கயிறைத் தள்ளிவிட்டு கடவுளைத் தியானிக்கத் தொடங்கினார்.வெள்ளம் மேலும் அதிகரித்து, துறவியைக் கபளீகரம் செய்தது.

அவரது ஆன்மா மேலுலகம் சென்றபோது,அவர் கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டார். “எங்கேய்யா அந்தக் கடவுள். அவனை எத்தனை வருஷம் தியானிச்சிருப்பேன். நன்றி கெட்ட கடவுள். கடைசி நிமிடத்தில் தியானித்தும் காட்சி தந்து என்னைக் காப்பாற்றாத அவனெல்லாம் நிஜமாகவே கடவுள்தானா.? நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும்படி நான்கு வார்த்தை கேட்கணும்.. எங்கேய்யா அந்தாளு.!” என்று ஏக வசனத்தில் கொந்தளித்தார். எதிர்ப்பட்டார் கடவுள். வழக்கமாக ஒரு கும்பிடு போடும் துறவி, இம்முறை வணங்கவில்லை. மாறாக, “அதான் உயிரை எடுத்துட்டியே! ஏமாத்தி கழுத்தறுத்திட்டியே!” என்றார் கோபமாக.

“பக்தா! நான் உனக்கு உதவியதை மறந்து நீ இப்படி ஏசலாகாது…” என்றார். “என்னத்த… உதவியிருந்தா, நாம் ஏன் இங்கே நின்னு பேசறோம்.?” என்றார் துறவி. “என்ன பக்தா இப்படிக் கூறிவிட்டாய்… மாடு மேய்ப்பவன் உன்னை எச்சரித்தானே! அவன் நான் அனுப்பியவனே! படகே இல்லாத ஊரில் ஒரு படகோட்டி வந்ததெப்படி… அவனும் எனது தூதனே! அதையெல்லாம் விடு. மரத்தில் பறவை போல ஒண்டியிருந்த உன்னைச் சரியாக அடையாளம் கண்டு கயிறு வீசியதே ஒரு ஹெலிகாப்டர்! அது உனக்காக மட்டுமே அனுப்பப்பட்ட கடைசி உதவி. நான்தான் உனக்காக அனுப்பி வைத்தேன். கடவுள் மானிடர்களுக்காக எப்போதும் மேலோக காஸ்ட்யூமிலேயே வரமாட்டார். சகமனிதர்கள்

மூலம்தான் வருவார்…வாய்ப்பு தருவார். அதைப் புரிந்து கொள்ளாத நீ எப்படி முக்காலமும் உணர்ந்த துறவி என்று பெயரெடுத்தாயோ.?” என்று ஏளனமாகக் கேட்டார். நொந்து நூலான துறவி, கடவுளின் காலைப் பிடித்துக் கதறினார்.

கதையிலிருந்து வெளியே வருவோம். வாய்ப்புகளும் கடவுள் போலத்தான். பொற்காசுகள் கூரையிலிருந்து கொட்டாது. வாயில் கதவைப் புதிய வாய்ப்புகளைத் தரும் மனிதர்கள் மூலம்தான் தட்டும். அவற்றைச் சரியாகப் புரிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம். உங்களை நோக்கி வரும் ஒவ்வொரு புதிய வாய்ப்பையும் உடனடியாக நிராகரிக்காமல் ஆழ்ந்து சிந்தித்துப் பிறகு ஏற்றுக் கொள்வது பற்றித் தீர்மானியுங்கள். ஒரு செல்வந்தரைப் பொருத்தவரை, கதவைத் தட்டும் ஒவ்வொருவரின் முகமும் ஒரு பிளாங்க் செக் போலவே இருக்கும். இதில் எவ்வளவு தொகை எழுதலாம் என்பதே அவரது சிந்தனையாக இருக்கும். அதனால்தான் அவரிடம் செல்வம் சேர்கிறது என்பதை உணருங்கள்.

 

– இராம்குமார் சிங்காரம், Motivational speaker in tamil nadu

தேர்வுக்குப் பின் பாடம்!
motivational speaker in tamil nadu
  • January 17, 2024

அதிகம் பேசாதவனை, உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள பின்னடைவைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உள்ள வெற்றி வாய்ப்பினைப் பார்க்கிறான். எதற்கு இப்படி இரண்டு பஞ்ச் டயலாக் என்று பார்க்கிறீர்களா… வெற்றியாளர்களுக்குத் தேவையான அடிப்படை இது. மார்க்கெட்டிங் துறை இதற்கு நல்ல உதாரணம். புதிதாக புரோட்டா மெஷின் ஒன்றை தென்னிந்தியாவில் அறிமுகம் செய்தார்கள். மைதா மாவு நமது இயல்பான உணவு அல்ல. ஆனால், மாதமொருமுறையாவது அனைவரும் புரோட்டா சாப்பிடுகிறார்கள். அதை மென்மையாக வடிவமைக்கப் பலருக்கும் கைவரவில்லை என்பதால், இந்த மெஷினை மக்கள் விரும்புவார்கள் என்பது நிறுவனத்தின் நோக்கம்.

இதை மக்கள் தேடி வந்து வாங்க மாட்டார்கள் என்பதால், மக்களைத் தேடிச் சென்று விற்பதே சிறந்தது என்று நிறுவனம் முடிவெடுத்தது. பலரையும் நேர்முகத் தேர்வுக்கு அழைத்து, சிறப்புப் பயிற்சி கொடுத்து அதிகமாக விற்பவருக்கு சூப்பர் பரிசு அறிவிப்பும் செய்து சந்தைக்கு அனுப்பியது நிர்வாகம். வீடு, வீடாகச் சென்று சென்னை முழுவதும் விற்றனர் விற்பனைப் பிரதிநிதிகள் வடக்கத்தியர்கள் வாழும் பகுதியைக் குறிவைத்துக் கேட்டுப் பெற்றனர் சில விற்பனைப் பிரதிநிதிகள். குறிப்பிட்ட 30 எண்ட் நாட்கள் கடந்தன.

அனைவரது விற்பனை நிலவரமும் கிடைத்தபோது நிர்வாகம் அதிர்ந்தது. காரணம், அநேகமாக எல்லோருமே ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மெஷின்கள் விற்றிருந்தனர். ஒருவர் மட்டும் நூறைத் தாண்டி விற்றிருந்தார். அவருக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் விற்ற மெஷின்களின் எண்ணிக்கை பதினைந்து எனவே, அவர் ஒருவரே அமோக வெற்றி பெற்றிருந்தார் ‘துடிப்பான அந்த இளைஞரை மேடைக்கு அழைக்கிறோம்’ என்று அறிவிப்புச் செய்தபோது, மேடையேறியவர், நாற்பது வயதைக் கடந்த ஒருவர் பாராட்டுக்கு நன்றி! என்ற ஒற்றை வார்த்தை சொல்லிவிட்டு தளர்ந்த நடையோடு தன் இருப்பிடத்துக்குத் திரும்பிவிட்டார். அவரை வற்புறுத்தி மேடையேற்றி, ‘என்ன ரகசியம் அது. எப்படி சாதித்தீர்கள்? என்று கேட்டனர்.

அவர் மென்மையாகச் சொன்னார். “அது உழைப்பின் ரகசியம். திட்டமிட்ட உழைப்பு அது பலரைப் போலவேதான் நானும் வீடு வீடாகக் கதவைத் தட்டினேன் பத்துக்கு ஒன்பது பேர் வாங்கவில்லை. அவர்களில் சிலர் கதவையே திறக்கவில்லை. சிலர் கதவைத் திறந்தும் காது கொடுக்கவில்லை. சிலர் காது கொடுத்தும் வாங்க ஆர்வம் காட்டவில்லை. ஆனால், பத்தில் ஒருவர் வாங்குவதை தினமும் உணர்ந்தேன். எனவே, ஒன்பது பேர் நிராகரிக்கிறார்களே என்று சோர்ந்து விடாமல், பத்துக்கு ஒன்று உறுதி. இன்னும் ஒன்பது சுதவுகள் எட்டு கதவுகள் என்று நிராகரித்தவர்களையும் உத்தாமாகவே ஏற்றுக் கொண்டேன். எனது கணக்குத் தப்பவில்லை. பத்தில் அந்த ஒருவர் யார் என்பது மட்டுமே எனது தேடலாக இருந்தது.

தினமும் 50 வீடுகள் என்று இலக்கு நிர்ணயித்து செயல்பட்டதால், நாள் ஒன்றுக்கு சராசரியகா 4 முதல் 5 விற்பனையை நிகழ்த்த முடிந்தது. திட்டமிட்ட பணி… சோர்வடையா முயற்சி அதிக சந்திப்புகள்… தொடர்ந்த செயல்பாடு! இதுவே எனது வெற்றி ஃபார்முலா?” என்றார் அவர். அவருடன் பணியாற்றிய பலரும், “ஒருநாளைக்கு பத்து வீடுகள் என்று இலக்கு நிர்ணயித்தோம். பலர் ஐந்தாவது வீடு அல்லது எட்டாவது வீட்டோடு தங்கள் கதவு தட்டுதலை நிறுத்திக் கொண்டதால், நாங்கள் சோர்ந்து போனோம். ‘இன்று நாள் சரியில்லை… நாளை முயற்சிப்போம்!’ என்று அதிர்ஷ்டத்தை நம்பினோம்!” என்பதை ஒப்புக் கொண்டனர்.

அதிகம் செயல்பட்ட அவரை அந்த நிறுவனமும், ஊழியர்களும் கைகூப்பி வணங்கிப் பாராட்டினர். தன் செயலால் மதிப்பைக் கூட்டிக் கொண்டு, கூட்டத்தைக் கவர்ந்திழுப்பவராக மாறினார். திட்டமிடலுடன் பணியாற்றிய அந்த ஊழியர்.

உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது என்பது புரிகிறதா?

 

– இராம்குமார் சிங்காரம், Tamil Motivational speaker