June, 2026
இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உச்சத்தைத் தொடுவது இயலவே இயலாத காரியம் என்று, மனித இனம் 1953-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை நம்பியிருந்தது.
எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 29,035 அடி. பலர், பலமுறை முயற்சித்தும் தோல்வியையே தழுவினர்.
இருந்த போதிலும், 1953-ஆம் ஆண்டு மே மாதம் 29-ஆம் தேதி, நியூசிலாந்தைச் சேர்ந்த எட்மண்ட் ஹிலாரியும் (EDMUND HILLARY), நேபாள நாட்டைச் சேர்ந்த டென்சிங் நார்கேயும் (TENZING NORGAY) இணைந்து முதன் முதலாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி, அதன் உச்சத்தைத் தொட்டனர்.
அதன் பிறகு, கடந்த 70 ஆண்டுகளில் ஏறக்குறைய 7 ஆயிரம் பேர் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சத்தைத் தொட்டு விட்டார்கள். தற்போது, ஆண்டுதோறும் சராசரியாக 800 முதல் 1000 பேர், சர்வ சாதாரணமாக அந்தச் சாதனையை நிகழ்த்தி வருகிறார்கள்.
இயலாது என்று எண்ணுகிற எதுவுமே சாத்தியமாகும் என்பதற்கு இது ஒரு உதாரணம். இதற்கு முக்கியத் தேவை ‘முடியும் என்ற நம்பிக்கையும், தொடர் உழைப்பும்’ தான்.
எட்மண்ட் ஹிலாரி கூட 1951, 1952 ஆகிய ஆண்டுகளில் எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏற முயன்று தோல்வியுற்று தாயகம் திரும்பினார். பல முயற்சிகளுக்குப் பிறகே, அவர் சிகரத்தின் உச்சத்தைத் தொட்டார்.
எட்மண்ட் ஹிலாரிக்கு மட்டுமல்ல….. நம் எல்லோருக்கும் இது பொருந்தும்.
IAS (UPSC) தேர்வு, IIT JEE தேர்வு, NEET தேர்வு, UGC தேர்வு தொடங்கி நிலவுக்கு சாட்டிலைட் அனுப்புவது வரை அனைத்தும், ஆரம்பத்தில் இயலாததாய் தோன்றினாலும், காலம் செல்லச் செல்ல சுலபமாய் மாறிவிடும்.
அந்த மாற்றத்திற்குத் தேவை, முடியும் என்ற நம்பிக்கையும், தொடர் முயற்சியுமே !
– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker in chennai