fbpx
Archive for month

April, 2024

விமர்சனத்தை விலக்குங்கள்! | Avoid criticism!
motivational speaker in tamil nadu
  • April 25, 2024

தோற்றபின் ஒருவரது தோல்வி மட்டுமல்ல… எல்லாமே விமர்சிக்கப்படுகிறது.

தோல்வி அடைந்தால் மாற்ற வேண்டியது வழிகளைத்தானே தவிர, இலக்குகளை அல்ல.!

ஒரு காரியத்தை ஆண் பார்க்கிற பார்வையும் பெண் பார்க்கிற பார்வையும் வேறுபடும். இது பல குடும்பங்களில் நடக்கிற சங்கதிதான் என்றாலும், சும்மா ஒருமுறை அசைபோட்டுப் பார்ப்போம். ஒரு ஆண் குடும்பத்தைக்கூட இரண்டாம்பட்சமாக எண்ணி,கடுமையாக உழைத்தால், “பொண்டாட்டியைக் கண்டுக்க மாட்டேங்கறான்”னு மட்டம் தட்டுவாங்க. இதுவே, பொண்டாட்டியைக் கவனிச்சுக்கிட்டா… “சம்பாதிக்கிறானோ இல்லையோ, அவளையே சுத்திச் சுத்தி வரான். வேலை வெட்டி இல்லாத பய”ன்னு கட்டம் கட்டுவாங்க..

ஒரு பொண்ணைப் பார்த்து அழகா இருக்கேன்னு சொன்னா அது ஈவ் டீசிங்டன்னு கௌப்பி விடுவாங்க. கண்டுக்காமப் போனா ‘அழகை ரசிக்கத் தெரியாத ஜடம்.!ன்னு அடிச்சு விடுவாங்க. பொண்டாட்டியைக் கேட்டுச் சொல்றேன்னு சொன்னா, “சுயமா முடிவெடுக்கத் தெரியாத முட்டாள்!ம்பாங்க. சரின்னு நாமளே ஒரு முடிவு எடுத்தா, “தான் ஆம்பிளைங்கற அகங்காரம்”ன்னு திட்டுவாங்க.

பொண்டாட்டிக்கு ஏதாவது பிடிச்சது வாங்கிட்டுப் போய் கொடுத்தா ‘என்னத்துக்கு இப்போ காக்கா பிடிக்கிறீங்க.?” அப்படின்னு ஒரு நக்கல். ஒன்னும் வாங்கிட்டுப் போகலேன்னா “ஒரு முழம் பூவுக்கு விதியத்துப் போயிட்டேனே.!” ன்னு மூக்கை சிந்திக்கிட்டு விக்கல்.

ஒரு குறிக்கோளோடு உழைச்சா, ‘ வேலையைக் கட்டிகிட்டு மாரடிக்க வேண்டியதுதானே. எதுக்கு உங்களுக்கு பொண்டாட்டி..? ன்னு ஏசல். சரின்னு சினிமாவுக்கு அழைச்சுட்டுப் போனா, “அந்த ஹீரோ மாதிரி ஒரு லட்சியம் வேணுமுங்க மனுஷனுக்கு. எப்படி உழைச்சு முன்னேறி கார், பங்களா வாங்கினான் பாத்தீங்களா.?” ன்னு பூசல்..

இப்படி, ஒவ்வொருவரின் பார்வையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். மற்றவர்களது வெற்றி ஃபார்முலாவை நமக்கும் அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. நமக்கு எது சரி என்று படுகிறதோ, அதை திடமான மனதோடு, திட்டமிட்ட உறுதியோடு செய்துவிட்டுப் போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான். அதன் பலன் தன்னால் வந்துவிட்டுப் போகிறது.

‘நடப்பதை நிறுத்தினால், உன்னைக் கடந்து போய்விடுவார்கள்… என்ற சீனப்பழமொழியையும், ‘உன் வாழ்நாளில் இன்னும் ஒரு நாள் முடிந்துவிட்டது… என்பதை அறிவிப்பதற்காகவே அதிகாலையில் கூவுகிறது சேவல்’ என்ற ஈரானியப் பழமொழியையும் உள்வாங்கிக் கொண்டு, இந்த நாளில் என்ன சாதிக்கிறோம் என்பதை மட்டுமே மனதில் நிறுத்திக் கொண்டு உழையுங்கள். தோல்வி என்ற ஒன்றுநீங்கள் இருக்கும் திசைப்பக்கம் கூட எட்டிப் பார்க்காது என்பதை எழுதி வைத்துக் கொள்ளலாம்.

– இராம்குமார் சிங்காரம், Motivational speaker in tamil nadu