தொழிலில் வெற்றி பெறுவதற்கு, மாறி வரும் மக்களின் தேவைகளைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
முன்பெல்லாம் தங்கும் விடுதிகளை, பேருந்து நிலையத்திற்கு அருகிலோ, புகைவண்டி நிலையத்திற்கு அருகிலோ, விமான நிலையத்திற்கு அருகிலோ அல்லது சுற்றுலாத் தலங்களுக்கு அருகிலோ தான் நடத்துவார்கள். அங்கெல்லாம் போட்டி அதிகரித்து வியாபாரம் குறையத் தொடங்கியது.
எனவே, இப்போது தங்கும் விடுதிகளை மருத்துவமனைகளுக்கு அருகில் நடத்தத் தொடங்கி விட்டார்கள்.
சென்னை, ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள கிரீம்ஸ் சாலையில், பல்வேறு தங்கும் விடுதிகள் வந்து விட்டன. காரணம், சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனைக்கும், அப்போலோ மருத்துவமனைக்கும்சிகிச்சை பெற பல்வேறு வடநாட்டினரும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்களும் வந்து கொண்டே இருக்கிறார்கள். இந்த மருத்துவமனைகளில் இருவர் மட்டுமே தங்க அனுமதி அளிப்பதால், குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் தங்குவதற்கு விடுதிகள் தேவைப்பட்ட வண்ணம் உள்ளன. இதை உணர்ந்து தங்கும் விடுதிகள் இப்பகுதியில் அதிக எண்ணிக்கையில் வந்துவிட்டன.
அது மட்டுமல்ல… பன்னாட்டு அலுவலகங்கள் அதிகம் இருக்கும் பழைய மகாபலிபுரம் சாலையிலும் தங்கும் விடுதிகள் பெருகிவிட்டன. காரணம், வெளிநாடுகளில் இருந்து
வருவோர் வாரக்கணக்கில் தங்க வேண்டியிருப்பதால் , அலுவலகத்திற்கு அருகிலேயே விடுதிகளைத் தேடுகிறார்கள்.
மேலும் கார்ப்பரேட் அலுவலகங்களுக்கு அருகிலும், கல்லூரிகளுக்கு அருகிலும் மாதாந்திர வாடகையில் தங்கும் விடுதிகள் பெருகத் தொடங்கி விட்டன. குறிப்பாக, சென்னை நகரின் பல பகுதிகளிலும் மகளிர் தங்கும் விடுதிகளும், ஆடவர் தங்கும் விடுதிகளும் சக்கைப் போடு போடுகின்றன.
ஆம் ! காலம் முழுவதும் மனிதர்களது தேவைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. இதைப் புரிந்து கொண்டால், வெற்றி நிச்சயம்.
– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker in chennai