வாழ்க்கையில் தோல்விகளின் உச்சத்தில் இருந்த ஒருவன், ஒரு ஞானியைச் சென்று சந்தித்தான்.
“ஐயா ! எனது ஆடுகள் எனக்கு உதவும் என்று நினைத்தேன்… என்னை விட்டுப் போய் விட்டன. இயற்கை உதவும் என்று நினைத்தேன்… மழை பொய்த்துவிட்டது. என்னுடைய சுற்றத்தார் உதவுவார்கள் என்று எதிர்பார்த்தேன்… யாரும் உதவவில்லை. இறைவனாவது உதவுவார் என்று பார்த்தேன்… அவரும் கைவிட்டு விட்டார். வாழ்க்கையே அஸ்தமனம் ஆனது போல் உணர்கிறேன” என்றான்.
ஞானி சிரித்துக் கொண்டே சொன்னார், “எதிர்பார்ப்புகள் என்பது சரிதான். ஆனால், அது பிறரிடமிருந்து எதிர்பார்ப்பதாக இருக்கககூடாது. உன்னிடமிருந்து எதிர்பார்ப்பதாக இருக்க வேண்டும்” என்றார்.
ஆம் ! வாழ்க்கை முழுவதும் நாம் பிறரிடம் இருந்து எதையாவது எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறோம். பெரும்பாலான நேரங்களில் அந்த எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தில் முடிகின்றன.
ஆனால் வெற்றியாளர்கள் எப்போதும் பிறரிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை. தன்னிடமிருந்தே அவர்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள்.
முன்பை விட அதிகம் உழைக்கிறார்கள். நிறைய கற்றுக் கொள்கிறார்கள். உடற்பயிற்சி செய்கிறார்கள். புதிது புதிதாய் சிந்திக்கிறார்கள். இயங்கிக்கொண்டே இருக்கிறார்கள்.
முடிந்தவரை தன்னிடமிருந்து எவ்வளவு அதிகம் எதிர்பார்க்க முடியுமோ, அவ்வளவு அதிகம் எதிர்பார்த்து அதை பூர்த்தி செய்ய முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
சச்சின் டெண்டுல்கரிலிருந்து விராட் கோலி வரை… விஸ்வநாதன் ஆனந்திலிருந்து பிரக்யானந்தா வரை… டாட்டாவிலிருந்து அம்பானி வரை… தன்னை வருத்திக் கொண்டவர்களே வெற்றியாளர்கள் ஆகியிருக்கிறார்கள்.
எதிர்பார்ப்பு புறத்திலிருந்து -அகத்திற்கு மாறினால், பிறரிடமிருந்து – தன்னிடமாக மாறினால், அது வெற்றியைத் தரும்.
பிறரிடம் எதிர்பார்ப்பதைத் தவிர்ப்போம். நம்மிடமிருந்து அதிகம் எதிர்பார்ப்போம். உலகே வியக்கும் வகையில் உச்சத்திற்கு செல்வோம் !
– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker in tamil nadu