பொதுவாக ஒருவர் வெற்றி பெற வேண்டுமென்றால், ஏதேனும் ஒரு திறனை ஆழமாகக் கற்றுக் கொண்டு, அதிலேயே தீவிரமாக ஈடுபட்டு வெற்றி பெற வேண்டும் என்பது அந்தக் காலத்து உத்தி.
இப்போதெல்லாம்,போட்டிகள் மிகுந்த இந்த உலகில், ஒருவர் வெற்றி பெற வேண்டும் என்றால், ஒரு திறமையை மட்டும் வளர்த்துக் கொண்டால் போதாது. பன்முகத் திறமைகள் தேவை. அதுவும் பன்மொழித் திறமையாக இருந்தால் சாளச் சிறந்தது.
இந்தியாவில் ஏறக்குறைய மூன்று லட்சம் பன்னாட்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு ஏதாவது ஒரு இந்திய மொழியிலும், அவர்கள் நாட்டு மொழியிலும் பேச, எழுதத் தெரிந்தவர்கள் தேவைப்படுகிறார்கள்.
உதாரணமாக, இந்தியாவில் ஜப்பானியர்கள் மட்டும் சோனி, ஹோண்டா, மிட்சுபிசி, பியூஜி, பானாசோனிக், டொயோட்டா, யமாஹா என் – ஏறக்குறைய ஐந்தாயிரம் நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். ஒரு இந்திய மொழியும், ஜப்பானிய மொழியும் உங்களுக்கு நன்கு தெரிந்திருந்தால், அந்த நிறுவனங்களில் உடனடியாக வேலை வாய்ப்பு உண்டு. அல்லது அந்த நிறுவனங்களோடு தொழிலை மேற்கொள்ள உங்களுக்கு முன்னுரிமை உண்டு.
இது போன்று ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஆடி, டெய்ம்லர், ராபர்ட் போஷ், டி.எச்,எல். எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 1700 நிறுவனங்கள் இந்தியாவில் இருக்கின்றன.
ஏர்பஸ், பி.என்.பி. பரிபாஸ், ரெனால்ட், லோ’ரியால், கேப் ஜெமினி உள்ளிட்ட 1000 ஃப்ரெஞ்ச் நிறுவனங்கள், ஒப்போ, விவோ, ஒன் ப்ளஸ், மோட்டரோலா போன்ற 200 சீன நிறுவனங்கள் என நிறைய அயல்நாட்டு நிறுவனங்கள் இங்கு உள்ளன.
இந்தத் தகவல்கள் நமக்கு உணர்த்துவது என்னவென்றால், பன்மொழி தெரிந்தவர்களுக்கு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன என்பதுதான்.
மேலும், சோனாலிகா, அசோக் லேலாண்ட், டாட்டா, பிர்லா, அம்பானி, அதானி, வேதாந்தா, மகிந்திரா போன்ற இந்தியாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் அயல்நாடுகளிலும் தொழில் நடத்தி வருகின்றன. அவற்றுக்கும் இதேபோன்று ஆட்கள் தேவை.
இவை தவிர பொருள் விற்பனைக்கு என பெப்சி, கோக், நெஸ்ட்லே யூனிலீவர் கோல்கேட் போன்று பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களும் இந்தியாவில் கோலோச்சி வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கும் ஒரு இந்திய மொழியும், அவர்கள் நாட்டு மொழியும் ஒரு சேரத் தெரிந்தவர்கள் வேலைக்கும், தொழிலுக்கும் தேவைப்படுகிறார்கள்.
அது மட்டுமல்ல… பல மொழிகள் தெரிந்தவர்களுக்கு, ஏற்றுமதி – இறக்குமதி சார்ந்த ஏராளமான தொழில் வாய்ப்புகளும் காத்திருக்கின்றன.
ஆம் ! மொழி தெரிந்த பிள்ளை பிழைக்கும்.
– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker in tamil nadu