fbpx
பிஸியை நேசி! | Keep yourself busy!

motivational speaker in tamil nadu
  • May 26, 2024

  காட்டில் ஒரு குரு இருந்தார். அவரைத் தேடி வந்த சிஷ்ய பக்தன், “எந்நேரமும் சிந்தனை வயப்பட்டுக் கொண்டே இருக்கிறேன். மூளை ஓய்வே கொள்ள மாட்டேன் என்கிறது..” என்றான்.

*நல்ல விஷயம்தானே! புதிய கண்டுபிடிப்புகளுக்கு அச்சிந்தனையைப் பயன்படுத்த வேண்டியதுதானே!” என்றார் குரு.

இல்லை குருவே! எதிர்சிந்தனைகளாகவே இருக்கின்றன அவை.நமக்கெல்லாம் எங்கே நல்லது நடக்கப்போகிறது. இந்த வேலை முடிந்த மாதிரிதான். வாழ்க்கை கரை சேர்ந்துவிடுமா.? என்றே அவை இருக்கின்றன. என்னால், என் வேலையைத் தொடர்ந்து செய்ய முடியவில்லை. இதனால், வருமானமும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. எதிர்கால பயம் பிடித்து ஆட்டுகிறது..” என்றான்.

அவனது மனநோய்க்குத் தீர்வு, அவனது சுற்றுப்புறத்தில் இருக்க வாய்ப்பிருப்பதாக எண்ணினார் குரு.

இதற்கு ஆலோசனையெல்லாம் தேவையில்லை. நான் சொல்கிற கட்டளையை ஏற்றுக்கொள்! பக்கத்து கிராமத்தில் இருக்கும் ஜமீன், துறுதுறுப்பானவர். ஒரேநேரத்தில் ஏழெட்டு வேலைகளைச் செய்யும் வல்லமை படைத்தவர். அவரிடம் போய் நான் கூறியதாகச் சொல்லி வேலையில் சேர்ந்து கொள்! அடுத்த மாதம் என்னை வந்து பார்” என்றார்.

 அவனும் ஏதோ சிந்தனையோடே கிளம்பிப்போனான். குரு அவன் முதுகில் சிரித்தார். 

 நாட்கள் நகர்ந்தன. 

 என்னடா, நம்மிடம் ஆலோசனை கேட்டவனை அடுத்த மாதம் வரச் சொன்னோமே! மறந்து போனானா. அல்லது, இவரென்ன சொல்வது நாமென்ன கேட்பது என்று ஜமீனிடம் வேலைக்குச் சேராமல் நழுவி விட்டானா.,, சோம்பேறியின் மனதில் வேறென்ன சிந்தனை வந்து தொலைத்ததோ…?” என்றெல்லாம் எண்ணிய குரு அடுத்த சில நாட்களில் ஜமீனை சந்திக்கச் சென்றார்.

ஒரு இளைஞனை வேலைக்கு அனுப்பியிருந்தேன். போன மாதம் வந்து பார்த்தானா.?” என்று கேட்டார்.

சாமீ… நானே உங்களுக்கு நன்றி சொல்லணும்னு நினைச்சேன் பிரமாதமான ஆளை அனுப்பி இருக்கிறீர்கள். அப்படியே என் மனவோட்டம் அவனுக்கு. ஒரே நேரத்தில் பத்து வேலை செய்யும் அளவுக்குத் திறமையான ஆள். எப்போதும் வளர்ச்சி பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதோடு, அதை செயலிலும் காட்டிக் கொண்டிருக்கிறான். அவன் வந்தபிறகு என் தொழில்களுக்குப் புது ரத்தமே கிடைத்துள்ளது…” என்று ஏகத்துக்கும் புகழ்ந்தார் ஜமீன்.

குரு புருவம் உயர்த்தி, மலர்ச்சிப் புன்னகை பூத்தார். அப்போது வேகமாக வந்த சிஷ்ய பக்தன், மடித்துக் கட்டிய வேட்டியை இறக்கிவிட்டுக் கொண்டு, குருவுக்கு வணக்கம் தெரிவித்தான்.

 என்ன… எப்படி இருக்கிறது வாழ்க்கை..?” என்றார் குரு.
 

நல்லாப் போகுது குருவே! ஒரே பிஸி. காலையிலே எழுந்தா, ராத்திரி தூங்கற வரை தொடர்ந்து வேலை, வேலைதான். வேலையைத் தவிர வேறேந்த சிந்தனையுமே இல்லை குருவே! ஒரு மாசமாச்சே, உங்களை வந்து பார்த்து என் நன்றியைச் சொல்லணும்னுகூட தோணாமப் போச்சு” என்றான் மன்னிப்புக் கேட்கும் தொனியில்,

குரு இப்போது அவன் முகத்தில் சிரித்தார். அங்கிருந்து கிளம்பினார்.

சும்மா இருக்கிற மனதில்தான் சைத்தான் குடியேறும்என்பார்கள். அதுபோல, ஓய்வான மனதில்தான் ஒட்டடை படியும் என்பது புரிகிறதா..? சவாலான பணிகள் எதிரில் இருந்தால், சிந்தனை இங்கங்கு நகராது. இருக்கும் வேலையை முடிப்பதிலேயே மனது ஓடிக் கொண்டிருப்பதாலும், ஒரு வேலை முடிந்து அடுத்த வேலை என்று சிந்தனை இருப்பதாலும், கவனச்சிதறல் ஏற்படாது. வெற்றி கைகூடும்.அடுத்தடுத்த உயர்வுகளும் உங்களைத் தேடிவரும். 

 அதனால், எப்பவுமே பிஸியா இருங்க பாஸ்! 

 

 

 

Comments are closed.