fbpx
வேதனைக்குப் பின்னும் வெற்றி ! | Victory after suffering!

  • April 27, 2026

பிரபல தேசிய வாலிபால் விளையாட்டு வீராங்கனையான அருணிமா சின்கா (ARUNIMA SINHA), உத்தரப் பிரதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்

1988 ஆம் ஆண்டு பிறந்த இவர், பட்ட மேற்படிப்பை முடித்து, சட்டக் கல்வியையும் கற்றவர். மத்திய அரசின் தொழில் பாதுகாப்புப் படையில் சேர்வதற்காக தேர்வெழுத, 2011-ஆம் ஆண்டு ஏப்ரல் 11 அன்று லக்னோவில் இருந்து ரெயிலில் டெல்லிக்கு சென்றார். அவரது பை மற்றும் தங்கச் சங்கிலியைப் பறிக்க கொள்ளையர்கள் முயன்ற போது, அதை எதிர்த்ததால் ரயிலில் இருந்து வெளியே தள்ளப்பட்டு, இவர் தண்டவாளத்திற்கு அருகில் கீழே விழுந்தார். அப்போது இவரது கால்கள் தண்டவாளத்தில் இருந்ததால், எதிரில் வந்த மற்றொரு ரெயில், இவர் காலின் மீது ஏற, இவரது கால் முற்றிலுமாக செயல் இழந்தது.

இவரது நிலையை கணக்கில் கொண்டு ரயில்வே அமைச்சகம் இவருக்கு வேலை வழங்கியது. இருப்பினும் தான் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்கிற தீவிரத்துடன் செயற்கைக் கால் பொருத்திய நிலையிலும், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புரியும் ஆர்வத்தோடு, உத்தரகாசியில் உள்ள நேரு மலையேறுதல் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார்.

முதலில், அருணிமா செயற்கைக் கால் உதவியுடன், 2012-இல் தீவு சிகரத்தில் ஏறினார்.

பிறகு, 52 நாட்கள் கடின மலை ஏற்றத்திற்குப் பிறகு, 21 மே 2013 அன்று எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து, எவரெஸ்ட் உச்சியை அடைந்த உலகின் முதல் பெண் மாற்றுத் திறனாளி என்கிற பெருமையைப் பெற்றார். இவரது திறமையைப் பாராட்டி, இந்திய அரசு 2015 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதினை வழங்கி கௌரவித்தது.

அருணிமா சின்ஹாவின் அடுத்த இலக்கு ஏழு கண்டங்களிலும் உள்ள ஏழு உயரமான சிகரங்களையும் ஏறுவதாக இருந்தது. அவர் ஆசியா, ஐரோப்பா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா மற்றும் வட அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள ஆறு சிகரங்களையும் 2014-இல் ஏறினார். பிறகு, ஜனவரி 4, 2019 அன்று, அண்டார்டிகாவில் ஏழாவது சிகரத்தை ஏறி, உலகில் ஏழு கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களிலும் ஏறிய முதல் பெண் மாற்றுத்திறனாளி என்ற பெருமையைப் பெற்றார்.

இப்படி குற்றுயிரும் குலை உயிருமாகக் கிடந்த தேசிய வாலிபால் விளையாட்டு வீராங்கனை, சாவின் விளிம்பில் இருந்து பீனிக்ஸ் பறவை போல மீண்டு எழுந்து, உலகின் பல்வேறு சிகரங்களின் உச்சத்தைத் தொட்ட முதல் மாற்றுத் திறனாளி பெண்மணி என்கிற பெருமையைப் பெற்றதைப்

பார்க்கும்போது நம்முடைய சிரமங்கள் எல்லாம் வெறும் கால் தூசி தானோ என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா ?

 

– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker in chennai

Leave a Reply

Your email address will not be published. Please mark all required fields.