‘நான் நன்றாக உழைக்கிறேன். ஆனால் வெற்றி பெற இயலவில்லை…… ஏன் ?’
பொதுவாக, நம்மில் பலருக்கும் உள்ள சந்தேகம் இது.
உழைப்பு மட்டும் போதாது. உத்தியும் அவசியம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு அரசனை, அவனது எதிரி நாட்டு அரசன் வீழ்த்தி விட்டு அந்த நாட்டைக் கைப்பற்றினான். தோற்றுப் போன அரசனும் அருகில் உள்ள காட்டில் தஞ்சம் புகுந்தான்.
பிறகு இரண்டு முறை தலைநகரை நோக்கி படையெடுத்துத் தோல்வியுற்றான். தன் நாட்டை மீட்க வழி தெரியாமல் திணறினான்.
ஒரு நாள், காட்டுக்குள் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த போது அவனுக்குப் பசித்தது.
அருகில் தென்பட்ட குடிசையின் கதவைத் தட்டினான். உள்ளே இருந்து ஒரு வயதான கிழவி வந்தாள். அவனைப் பார்த்தவுடன், அவன் அந்த நாட்டின் முன்னாள் அரசன் என்பதைப் புரிந்து கொண்டாள்.
இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அவனை உள்ளே அழைத்து, சுடச்சுட கூழ் சமைத்துப் பரிமாறினாள்.
அரசன் பசியின் அவசரத்தில், கூழின் நடுவில் கையை வைத்தான். உடனே கூழின் சூடு தாங்காமல், வைத்த வேகத்தில் கையை வெளியில் எடுத்தான்.
சிரித்துக் கொண்டே அந்தக் கிழவி சொன்னாள்… “தோற்றுப் போன அரசன் மாதிரியே நீயும் இருக்கிறாய். கூழின் நடுவில் கையை வைத்தால், கூழ் சுடத்தானே செய்யும்….? ஓரத்தில் இருந்து சாப்பிடத் தொடங்க வேண்டும்” என்றாள்.
அரசனுக்குத் தன் தவறு புரிந்தது. அடுத்த முறை – யாரும் உணராத நேரத்தில், நாட்டின் ஒரு மூலையில் இருந்து படை எடுக்கத் தொடங்கி, கடைசியில் அரண்மனையைக் கைப்பற்றினான்.
ஆம் ! வெற்றி பெற உழைப்பு மட்டும் போதாது. உத்தியும் அவசியம் வேண்டும் !
– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker in tamil nadu