ஒரு பெரிய வாடிக்கையாளர் கிடைத்து விட்டால், அவருக்கென்று விழுந்து விழுந்து சேவை செய்வதும், அதே நேரம் ஒரு சிறிய வாடிக்கையாளராக இருந்தால் அவரை அவ்வளவாக பொருட்படுத்தாமல் இருப்பதும், நம்மில் பலருக்கும் இருக்கக்கூடிய ஒரு பொதுவான மனோபாவம். இது சரிதானா ?
தொடர்ந்து பார்ப்போம்…
இரண்டு துறவிகள் ஆற்றங்கரை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு தேள் கரையில் இருந்து தண்ணீருக்குள் செல்ல முயற்சித்தது. இதைப் பார்த்த பெரிய துறவி குனிந்து, அந்தத் தேளை எடுத்து வெளியே தூரமாக மணலில் எறிந்தார். இந்த இடைப்பட்ட நேரத்தில் தேள் அவரது கையில் கொட்டி விட்டது.
பிறகு கொஞ்ச தூரம் இருவரும் நடந்து சென்றனர். திரும்பவும் இன்னொரு தேள் தண்ணீருக்குள் நுழைய முயன்றது. திரும்பவும் பெரிய துறவி, கீழே குனிந்து அந்தத் தேனையும் எடுத்து தூரமாக மணலில் எறிந்தார். அப்போது அந்தத் தேளும் அவர் கையில் கொட்டியது.
இதைப் பார்த்த சிறிய துறவி, “ஐயா ! தேள் தான் கொட்டிக் கொண்டே இருக்கிறதே. பிறகு ஏன் அதைக் காப்பாற்ற முயல்கிறீர்கள் ?” என்று கேட்டார்.
அதற்கு சிரித்தபடி பெரிய துறவி, “கொட்டுவது தேளின் குணம். காப்பாற்றுவது என்னுடைய குணம். அது அதன் குணத்தை மாற்றிக் கொள்ளாத போது, நான் ஏன் என் குணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் ?” என்றார்.
ஆம் ! நாம் ஒவ்வொருவருக்காகவும் நமது குணங்களை மாற்றிக் கொண்டே இருந்தால், நம்முடைய உண்மையான குணம் என்ன என்பது நமக்கு தெரியாமலே போய்விடும்.
தோட்டத்தில் நாள்தோறும் பூக்கள் மலர்கிறது. ஆனால் அது நல்லவருக்காக மட்டுமே மலருவேன். கெட்டவர்களைக் கண்டால் நான் மலர மாட்டேன் என்றெல்லாம் பிடிவாதம் பிடிப்பதில்லை. மலர்வது என்பது அதன் குணம். யாருக்காகவும் தன் குணத்தை அது மாற்றிக் கொள்வதில்லை. சூரியன் உதித்தாலும், உதிக்காவிட்டாலும், பிறர் பார்த்தாலும், பார்க்காவிட்டாலும், அடுத்தவர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், பூக்கள் மலர்ந்து கொண்டே தான் இருக்கும்.
நாமும் ஒவ்வொருவருக்காகவும் நம்முடைய தன்மையை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சிறிய வாடிக்கையாளர் என்றால் குறைந்த சேவையையும், பெரிய வாடிக்கையாளர் என்றால் சிறந்த சேவையையும் வழங்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் பிறிதொரு நாளில் பெரிய வாடிக்கையாளர், சிறிய வாடிக்கையாளராக மாறக்கூடும். சிறிய வாடிக்கையாளர் பெரிய வாடிக்கையாளராக உயரக்கூடும். எனவே நாம் இயல்பாக இருப்போம். இன்னும் சொல்லப்போனால், நாம் நமக்கென்று ஒரு குணத்தை உருவாக்கிக் கொண்டு, அதை யாருக்காகவும் மாற்றிக் கொள்ளாமல் இருப்போம். அதுவே நாளடைவில் நமது அடையாளமாக மாறி, ஒரு பிராண்டாக உருவெடுத்து விடும். அந்த பிராண்ட் நம்மை வெற்றி வாசலுக்கு அழைத்துச் செல்லும்.
– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker in tamil nadu