fbpx
வெற்றி என்னும் லட்டு! | Protect your success!

Tamil motivational speaker
  • February 25, 2024

நேர்மையாக, சிறப்பான முடிவுகள் எடுப்பதுகூட பல நேரங்களில் கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை வளர்த்துவிடும். இது, இன்று நேற்றல்ல.. பல நூற்றாண்டுகளாகவே தொடரும் கதைதான். அரசர் ஒருவர் தன் மந்திரிகளிடம் அனைத்து ஆலோசனைகளைச் செய்தாலும், முடிவு எடுப்பதென்னவோ அவரது ராஜகுருவைக் கலந்தாலோசித்த பின்புதான். அது எத்தகைய சிறிய முடிவாக இருந்தாலும் சரி… ராஜகுரு சிறப்பான ஆலோசனை சொல்கிறார் என்று அரசர் கூறுவது மூத்த மந்திரி ஒருவருக்குப் பிடிக்கவில்லை.

ராஜகுருவை பழிதீர்க்க குரூரமான ஒரு திட்டம் தீட்டினார். அவரது கூற்று சரியல்ல என்பதை அரசருக்கு ஒருமுறை புரியவைத்துவிட்டால், அதன்பிறகு அவரது பேச்சை அரசர் கேட்கமாட்டார் என்பது அவரது திட்டம். நீண்ட யோசனைக்குப் பிறகு, ஒரு வில்லங்கமான விளையாட்டைத் தயாரித்தார். பிறந்து 2 மணி நேரமே ஆன குருவிக் குஞ்சு ஒன்றைக் கையில் எடுத்தார். உள்ளங்கைக்குள் தஞ்சமடைந்துவிட்ட அந்தக் குருவிக் குஞ்சு, பாதுகாப்பாக உறங்க ஆரம்பித்துவிட்டது.

அதை அரசவைக்கு எடுத்துவந்த மந்திரி, “அரசே.. என் கையில் ஒரு ரகசியப் பொருளை வைத்துள்ளேன். அது உயிருள்ளதா… இல்லையா என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்!” என்றார். அரசருக்கு இந்த விளையாட்டுப் பிடித்திருந்தது. ஆனால், தவறாக சொல்லி சிக்கலில் சிக்கிக் கொள்ள அவர் விரும்பவில்லை.

ராஜகுருவைப் பார்த்தார். “நீங்கள் சொல்லுங்கள் ராஜகுருவே!” என்றார். மந்திரி எதிர்பார்த்ததும் இதைத்தானே! இப்போது அந்தக் குஞ்சு உயிருடன் இருக்கிறது. மந்திரி உயிருள்ள பொருள் என்று சொன்னால், அதை ஒரே நசுக்காக நசுக்கி உயிரற்ற பொருள், அதாவது செத்த பறவை என்று காட்டி விடலாம். உயிரற்றது என்றால், பறவைக் குஞ்சை அப்படியே காட்டி விடலாம். எந்தப் பதில் சொன்னாலும் இந்தப் போட்டியில் ஜெயிக்கப்போவது நாம்தான் என்ற மமதையோடு இருந்தார் மந்திரி. ராஜகுருவுக்கு மந்திரி ஏதோ திட்டம் தீட்டுவது புரிந்துபோனது. விரலுக்கு வெளியே சிறிது இறகுகளின் நீட்டல் தெரிந்ததால், தீர்க்கமாக யோசித்த அவர் சொன்னார். °மந்திரியாரே! உமது கையில் இருக்கும் பறவைக் குஞ்சு உயிருடன் இருப்பதும், இல்லாமல் இருப்பதும் உமது கையில்தான் இருக்கிறது!” என்றார்.

ராஜாவுக்குப் புரிந்துபோனது. ராஜகுருவின் சாமர்த்தியத்தை மனதாரப் பாராட்டிய அவர், “இதனால்தான் அவர் ராஜகுருவாக இருக்கிறார்!” என்றார். நமது துறையில் நாம் புத்திசாலியாக இருக்கும் அதே நேரம், நமது திறமையை எதிரிகளும் உணரும்வண்ணம் உயிர்ப்புடன் இருந்துகொண்டே இருப்பது அவசியம். எனவே, சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் உங்கள் திறமையை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டே இருக்க மறக்காதீர்கள். இது வெற்றிக்கான வழிகளில் ஒன்று மட்டுமல்ல… வெற்றியைத் தக்கவைப்பதற்கான வழிகளில் ஒன்று. எதிரிகளைச் சமாளித்து வெற்றிப் படிக்கட்டுக்களில் தொடர்ந்து பயணிக்க மற்றுமொரு வழியும் இருக்கிறது.

அதுதான் லட்டு ஃபார்முலா… ஒரு தட்டு நிறைய லட்டுக்கள் இருந்தால், அதில் எறும்புகள் மொய்ப்பது சகஜம்தான். ஆனால், அந்த லட்டு உள்ள தட்டைச் சுற்றி, சிறிது சர்க்கரையைத் தூவிவிட்டால், எறும்புகள் சர்க்கரையை மட்டுமே சாப்பிடும். அதிலேயே திருப்தி அடைந்து, லட்டு இருக்கும் தட்டுப் பக்கமே வராது, உங்கள் வெற்றியை லட்டு மாதிரி பாதுகாக்கப் பழகுங்கள்.

– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker

Comments are closed.