“வாங்க…பழகலாம்” என்பார் சாலமன் பாப்பையா. அதன் பின்னணியில் மிகப்பெரிய தத்துவமே அடங்கி இருக்கிறது. நாம் எதையும் பிறப்பில் கொண்டு வந்தவர்களில்லை. எல்லாமே வந்து பழகியவைதான். நல்ல பழக்கங்களை, வெற்றிக்கான வழிகளைப் பழகிக் கொண்டால், வாழ்க்கையில் உயரம் தொடலாம் என்பதே உண்மை. சச்சின் கிரிக்கெட் பழகிக் கொண்டார். அதையே தொடர்ந்து விரும்பிப் பழகினார். அந்த விளையாட்டின் உச்ச நாற்காலி அவருக்குக் கிடைத்தது. அம்பானி, உழைப்பைப் பழகினார். கனவுகளை செயல்படுத்த நேரம் காலம் தெரியாமல் உழைத்தார். இந்தியாவின் நம்பர் ஒன் பணக்கார குடும்பமாகத் தன்னுடையதை மாற்றினார். நீங்கள் பழகும் ஒரு விஷயம், உங்கள் வாழ்க்கைப் பாதையை மாற்றும் என்றால் அதனைப் பழகிக் கொள்வதில் என்ன தவறு. ரொம்ப சிம்பிளான சில பழக்க வழக்கங்களைப் பார்ப்போம்.. காலையில் 5 மணிக்கு எழுந்து பழகுங்கள். உங்களுக்கு உழைப்பதற்க்கு கூடுதலாக இரண்டு மணி நேரம் கிடைப்பதை உணர்வீர்கள். உங்களின் கூடுதலான இரண்டு மணி நேர உழைப்பு, ஓராண்டில் பல லட்சங்களை உங்களுக்குச் சம்பாதித்துக் கொடுக்கும்.
நீங்கள் மார்க்கெட்டிங் துறையில் இருந்தால், போன் பில்லை உயர்த்திப் பழகுங்கள். ‘ஃப்ரீயா இருந்தேன். சரி உன்கிட்டே பேசலாமேன்னு போனைப் போட்டேன்..’ என்பது போன்ற வெட்டிப் பேச்சால் அல்ல.. உங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் விதமாக, இருமடங்கு நபர்களிடம் பேசிப் பழகுங்கள். அது, உங்களுக்கு வருமானமாக வந்து சேரும். குழந்தைகளிடம் அன்பு காட்டிப் பழகுங்கள். அது குடும்ப நன்மையைக் கூடுதலாக்கித் தரும். தவறு செய்த குழந்தையை ஸ்கேல் கொண்டு அடிப்பதையோ, திட்டிக் குவிப்பதையோ நிறுத்திப் பழகுங்கள். அமைதியாகப் பேசி, அவர்களின் தவறை உணரச் செய்யுங்கள், திட்டுவது குழந்தையின் ‘ஈகோ’வுக்கு விடப்படும் சவாலே அன்றி, அது பிரச்னைக்கான தீர்வாகாது. இதனைச் செயல்படுத்தியபின், தவறுகள் குறைந்து, குடும்ப குதூகலம் அதிகரிப்பது புரியும். பொறுமை பழகுங்கள். ஒரு தொழிலில் ஈடுபட்டால், அதற்கான காலகட்டம் வரை காத்திருப்பது அவசியம் என்பதை உணருங்கள். கன்றை நட்டதுமே அண்ணாந்து, இளநீரைத் தேடுவது எப்படிச் சரியாகும். எல்லாவற்றுக்கும் ஒரு காலம் இருப்பதை உணர்ந்து அதற்காகத் தொடர்ந்து உழைத்துப் பழகுங்கள். உங்கள் தொழில் தன்னைப் பலப்படுத்திக் கொள்ளும் காலம் வரை காத்திருந்தால், அது காலாகாலத்துக்கும் உங்களைத் தாங்கிப் பிடிக்கும் என்பதை உணருங்கள். இதற்கொரு கதை உண்டு. ஒரு பணக்காரக் குடும்பம். பிறந்த குழந்தையை இளவரசன் போல வளர்க்க விரும்பியது அந்த ராஜ குடும்பம்.
குழந்தையை ஒரு நிமிடம்கூட அந்தப்பக்கம் இந்தப்பக்கம் விடுவதில்லை. தொட்டிலில் போட்டால்கூட, அதன் மரப்பட்டை குழந்தையைப் பாதித்துவிடும் என்று எண்ணி, கைகளிலேயே வைத்திருந்தனர். ஒரு நிமிடம்கூட தரையில் இறக்கி விடுவதில்லை. உடலுக்கு ஒன்று என்றால், ஓடோடி வந்துவிடுவார் மருத்துவர். எப்போதும் கொஞ்சல்தான். அப்படி ஒரு செல்லச் சீமானாக இருந்தது அந்த செல்வந்தர் வீட்டுக் குழந்தை. அவனது மழலைச் சிரிப்பில் மகிழ்ந்து கிடந்தனர் குடும்பத்தார். நாட்கள் நகர்ந்தன. குழந்தையின் உடலில் இயல்பான தன்மை குறைந்து, கொஞ்சம் அவஸ்தைப்படுவதைக் கண்டனர் குடும்பத்தார். வந்தார் மருத்துவர். முதல் பிறந்த நாள் வரப்போகும் தறுவாயில், குழந்தை போதிய வளர்ச்சி இன்றி, வெற்றுச் சதையோடு இருப்பதைக் கண்டார் அவர். தரையில் படுக்க வைத்து காலை ஆட்டிப் பார்த்தால், அது இயல்பான அசைவின்றி இருந்தது. பிரச்னை இதுதான். பார்த்துப் பார்த்து வளர்ப்பதாக எண்ணி, குழந்தையின் இயல்பான அங்க அசைவுகளுக்கு வாய்ப்புத் தராமல் போனதால், எழுந்து நடக்க வேண்டிய காலத்தில், உட்காரக்கூட முடியாமல் அவதிப்பட்டு சவலையாகிப் போயிருந்தது குழந்தை. எந்தெந்த காலத்தில் எதெது நடக்க வேண்டுமோ, அந்தந்த காலத்தில் அதது நடந்திருந்தால், குழந்தை நடந்திருக்கும். செய்யும் வேலையில் சிரத்தையோடும், அதற்கான நேர்த்தியோடும் செய்துவிட்டு பொறுமையாகக் காத்திருக்கப் பழகினால், பலன் கிடைத்தே தீரும்.
– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker
1 Comment
Excellent