சிலர் எதற்கெடுத்தாலும் அதிர்ச்சி காட்டுவார்கள் பார்த்திருக்கிறீர்களா…?
சிலர் ஏதாவது ஒன்றைச் சொன்னால், அதில் ஆயிரத்தெட்டு அர்த்தம் கண்டுபிடிப்பதிலேயே சிந்தனை வயப்படுவார்கள், கவனித்திருக்கிறீர்களா…?
ஓவர் ரியாக்ஷனும், ஓவர் உஷாரும் வெற்றிக்கு ஆகாது என்பதே உண்மை.
கண்ணிலே புரை இருந்தால் பார்வை எப்படிச் சரியாக இருக்கும்…?
மூக்கிலே அடைப்பு இருந்தால் நறுமணத்தை நுகரமுடியுமா…?
வாயிலே புண் இருந்தால் உணவினைச் சுவைக்க இயலுமா…?
அதுபோல் தைரிய சிந்தனை இல்லாவிட்டால், வாழ்க்கையில் வெற்றிபெற முடியாது. சிலர் தேவையற்ற பயத்தை உள்வாங்கிக் கொண்டு, மகிழ்ச்சியான நேரங்களில் கூட மனசஞ்சலத்திற்கு ஆளாகிறார்கள். இந்த வீண்பயத்தை போக்கி துணிச்சலுடன் செயல்பட்டால், வாழ்வில் வெற்றி நிச்சயம்.
ஒரு சுண்டெலியின் ‘கீச் கீச்‘ சப்தம், ஆழ்ந்த தியானத்தில் இருந்த ஞானியை கலைத்தது. ஞானிக் கோபப்படவில்லை.
சுண்டெலியைப் பார்த்து ஞானி, “உனக்கு என்ன வேண்டும்..?” என்று கேட்டார்.
“சாமி... எனக்குப் பூனையைப் பார்த்தாலே உடம்பெல்லாம் நடுங்குது. நானே பூனையாகிட்டா என் பயம் போயிடும்னு தோணுது. என்னை
ஒரு பூனையாக மாற்றிவிட்டால், உங்களுக்கு புண்ணியமாப் போகும்!” என்று மருகியது சுண்டெலி.
ஞானிக்கு எலியைப் பார்த்தால் பாவமாக இருந்தது. அதைப் பூனையாக மாற்றினார்.
இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அப்பூனை வந்தது. ஞானி முன் நின்றது. பூனையைக் கண்ட ஞானி, “இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறாயா.? இல்லை பூனைகளுக்குள் மோதல் ஏற்படுகிறதா.? என்று கேட்டார் ஞானி.
`பிரச்னை அது இல்லை சாமி. ஏரியாவுக்குள்ளே இது யார்டா புதுப்பூனைன்னு ஏரியாவிலே இருக்கிற நாய்கள், என்னை எப்போதும் துரத்துகிறது. என்னை நாயாக மாற்றிவிட்டால் நன்றாக இருக்கும்” என்றது பூனை.
ஞானிக்கு இந்த விளையாட்டுப் பிடித்திருந்தது. உடனே பூனையை நாயாக மாற்றினார் ஞானி.
சில நாட்கள் கழித்து அந்த நாய் வந்து ஞானியின் முன்பு நின்றது.
“இப்போது என்ன..? என்று கேட்டார் ஞானி.
“புலி பயம் என்னை வாட்டி எடுக்கிறது. தயவு செய்து என்னை புலியாக மாற்றிவிடுங்கள்!” என்றது நாய்.
ஞானியும் அசரவில்லை. நாயைப் புலியாக மாற்றினார்.
சில நாட்கள் கழித்து ஞானி முன் வந்து நின்ற புலி, “இந்தக் காட்டில் வேடன் என்னை வேட்டையாட வருகிறான். தயவு செய்து என்னை வேடனாக மாற்றிவிடுங்கள்!” என்றது புலி. உடனே புலியை வேடனாக மாற்றினார் ஞானி. நன்றி சொன்ன சுண்டெலியை இடைமறித்த ஞானி, “சுண்டெலியே… உன்னை எதுவாக மாற்றினால் என்ன? உன் பயம் உன்னை விட்டுப் போகாது. காரணம் உன் உருவம் வேண்டுமானால் மாறியிருக்கலாமே தவிர, உனக்குள் இருப்பது கண்டெலியின் இதயம்தான். மனதில் பயத்தைப் போக்கினாலே, நீ கண்டெலியாக இருந்துகூட சாதித்திருக்கலாம்!” என்று கூறிய ஞானி, இனி இந்தப் பக்கமே வராதே” என்று விரட்டி அடித்தார்.
‘நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!‘ என்பார்கள் மருத்துவர்கள்: தொழில் தொடங்க வேண்டும்.. ஆனால், முதலீடு இல்லை என்பவர்களும், எதையாவது சாதிக்கவேண்டும். ஆனால் எதில் என்றுதான் புரியவில்லை என்பவர்களும் இந்தக் கதையில் வரும் கண்டெலிக்கு ஒப்பானவர்களே!