fbpx
நம்பிக்கை ஜன்னல் | BELIEF WINDOW

Belief window
  • November 29, 2025

அண்மையில், ஒரு பள்ளிப் பருவ நண்பரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் ஒரு தையல் கலைஞர். அந்தப் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றவர்.

அவர் கடையில் எப்போதுமே மக்கள் கூட்டம் இருக்கும் என என் நண்பர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவரிடம் துணி தைத்தவர்கள், அமெரிக்கா சென்ற பிறகும் கூட, துணியை அவரிடமிருந்தே தைத்து, கூரியியில் பெற்றுக் கொள்வார்களாம். அந்த அளவிற்கு தொழிலில் நேர்த்தி உள்ளவர் அவர்.

நான் சென்ற போதும் கூட அப்படித் தான். பயங்கர பிஸியாக இருந்தார். ஆர்டர்கள் அதிகம் இருந்தன. அவரால் தனியாகச் சமாளிக்க முடியவில்லை.

“சற்று பெரிய கடையை வாடகைக்கு எடுத்து, இரண்டு பெரை வேலைக்கு போட்டு தொழிலை விரிவாக்கலாமே ?” என்றேன்.

“வாடகை, சம்பளம் என செலவு அதிகரித்து, இடையில் திடீர் என ஆர்டர் குறைந்து விட்டால் என்ன செய்வது ? மேலும், வேலைக்கு ஆள் கிடைப்பதும் சிரமமாக உள்ளது. வருபவர்களும் நீண்ட நாள்களுக்கு நிலைத்து இருப்பதில்லை” என்றார்.

இது எல்லாத் தொழில்களிலும் உள்ள பொதுப் பிரச்சனை. வெற்றி பெற்ற தொழில் முனைவோர் அனைவரும் இந்த நிலையைக் கடந்தே வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

இவர் கூறிய எதிர்மறைக் காரணங்களை, HYRUM W SMITH எண்கிற ஆங்கில எழுத்தாளர், தமது THE 10 NATURAL LAWS OF SUCCESSFUL TIME AND LIFE MANAGEMENT என்னும் நூலில், ‘நம்பிக்கை ஜன்னல்’ (BELIEF WINDOW) என்று குறிப்பிடுகிறார்.

அதாவது, முன்பு யாரோ சிலர் ரிஸ்க் எடுத்து. நஷ்டம் அடைந்ததை, இந்த நண்பர் பார்த்திருக்கிறார். அது அவர் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. அந்த நம்பிக்கை என்கிற ஜன்னல் வழியாகவே இதையும் பார்ப்பதால், அவர் ரிஸ்க் எடுக்கத் தயங்குகிறார்.

இந்த மனத் தடையை மீறி அவர் ரிஸ்க் எடுக்க வேண்டுமென்றால், வெற்றி பெற்ற மனிதர்களின் கதைகளை மீண்டும், மீண்டும் கேட்டு, தனது பழைய நம்பிக்கை ஜன்னலைத் தகர்க்க வேண்டும். அப்போது தான் அவர் தொழிலில் அடுத்த நிலைக்கு உயர முடியும்.

இந்த ‘நம்பிக்கை ஜன்னல்’ பிரச்சனை, அவருக்கு மட்டுமல்ல….. நமக்குள்ளும் இப்படி, பல எதிர்மறையான ‘நம்பிக்கை ஜன்னல்கள்’ இருக்கின்றன.

உதாரணத்திற்கு ஒன்றைப் பார்ப்போம்…

“நிறையப் பணம் சம்பாதித்தால் ஐ.டி ரெய்டு வரும்; திருடன் வரக்கூடும்; சொந்தக்காரர்கள் கடன் கேட்பார்கள்; நிம்மதி போய்விடும்”

இப்படி ஒரு ‘நம்பிக்கை ஜன்னல்’ நம்மில் பலருக்கும் இருக்கிறது. இதுவே நமது முன்னேற்றத்தைத் தடுக்கிறது.

ஆனால் உண்மை நிலை என்ன தெரியுமா ? பணக்காரர்கள் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள். பலராலும் மதிக்கப் படுகிறார்கள். அவர்களுக்குத் தான் கோவில்களில் கூட முன்னுரிமை வழங்கப்படுகிறது. நினைத்ததை எல்லாம் அவர்கள் சாதிக்கிறார்கள்.

இந்த உண்மையை நாம் உணர்ந்து கொண்டால், நமக்குள்ளும் புது நம்பிக்கை ஜன்னல் உருவாகும். நம் மனதிற்கும் பணத்தின் மீது ஆசை வரும். நாமும் பணம் சம்பாதித்து கோடீஸ்வரராகலாம்.

இப்படி நம்மினுள் உள்ள பல எதிர்மறையான ‘நம்பிக்கை ஜன்னல்’களை எப்படித் தகர்க்கப் போகிறோம் ?

 

– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker in chennai

Comments are closed.