ஒரு கல்லூரியில் கணித வகுப்பு நடந்து கொண்டிருந்தது.
உலகின் மிகப் பெரிய கணித மேதைகளால் தீர்க்கப்பட முடியாத இரண்டு கணக்குகளை போர்டில் எழுதிய பேராசிரியர், “அவை இன்றும் விடை காணப்பட முடியாத கடினமான கணக்குகள்” என்றார்.
வகுப்பு முடிந்த பிறகு, சற்று தாமதமாக உள்ளே வந்த ஒரு மாணவன், அந்தக் கணக்குகளை ‘வீட்டுப் பாடங்கள்’ என்று எண்ணி குறித்துக் கொண்டு போனான்.
சில நாட்கள் கழித்து, விடையுடன் அதனைப் பேராசிரியரிடம் சமர்ப்பித்தான்.
அசந்து போன அந்தப் பேராசிரியர், “உலகில் யாராலும் விடை காணப்பட முடியாத கணக்குகளுக்கு, நீ எப்படி விடை கண்டாய் ?” என்று கேட்டார்.
அதற்கு அந்த மாணவன் சற்று யோசித்துவிட்டு, “அது யாராலும் முடியாது என்று எனக்குத் தெரியாது” என்றான்.
அந்த சம்பவத்தாலேயே உலகப் புகழ்பெற்ற அந்த மாணவன் தான், 1976-ஆம் ஆண்டு, தனது கணித அறிவாற்றலுக்காக அமெரிக்க அதிபரின் விருதைப் பெற்ற கணிதவியலாளர் “ஜார்ஜ் டான்ட்ஜிக்” (GEORGE DANTZIG).
இவர் பின்னாளில், லீனியர் புரோகிராமிங் (LINEAR PROGRAMMING) துறை சார்ந்த கணக்குகளைத் தீர்க்க உதவும் ‘சிம்ப்ளக்ஸ் அல்காரிதம்’ (SIMPLEX ALGORITHM) என்னும் புதிய சித்தாந்தத்தைக் கண்டுபிடித்தவர். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும் பணியாற்றியவர்.
ஆம் ! ஒரு மனிதனின் வெற்றிக்கு ‘நம்பிக்கை’ (BELIEF) என்பது எவ்வளவு முக்கிய காரணியாக விளங்குகிறதோ, அதுபோல் ‘வரையறுக்கப்பட்ட நம்பிக்கை’ (LIMITING BELIEF) என்பது ஒரு எதிர்மறைக் காரணியாகத் திகழ்கிறது. இன்னும் சொல்லப்போனால், ‘நம்பிக்கை’யின் எதிரி ‘வரையறுக்கப்பட்ட நம்பிக்கை’ தான்.
‘நான் நன்றாக சமைப்பேன். ஆனால், இந்தப் பதார்த்தம் மட்டும் நான் எப்போது சமைத்தாலும் எனக்கு சரியாக வராது…’
‘நான் நன்றாக படிப்பேன். ஆனால், இந்தப் பாடத்தில் மட்டும் என்னால் அதிக மதிப்பெண்கள் பெற முடியாது’
என்பதில் தொடங்கி, ‘நமது இந்திய கிரிக்கெட் அணி நன்றாக விளையாடும். ஆனால், பாகிஸ்தானுடன் விளையாடும் போது, நாம் பெரும்பாலும் தோற்று விடுவோம்’
‘எந்தப் போட்டியையும் வென்று விடுவோம். ஆனால், உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில், நாம் நிச்சயம் தோல்வியையே தழுவுவோம்’
என்பது வரை, பெரும்பாலும் அப்படியே நிகழ்வதற்கு ‘வரையறுக்கப்பட்ட நம்பிக்கை’ தான் காரணம்.
நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால், ‘வரையறுக்கப்பட்ட நம்பிக்கை’யை விட்டுவிட்டு, ‘தன்னம்பிக்கை’யை மட்டும் கைக்கொள்ளுங்கள்.
– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker in chennai