பிரபல நேர்மறை சிந்தனையாளர் NORMAN VINCENT PEALE, தமது THE POWER OF POSITIVE THINKING என்ற நூலில் சொல்கிற ஒரு முக்கியமான வெற்றி தரும் உத்தி “வாக்குவம் கிளீனர் டெக்னிக்” !
அதாவது, நாம் வீட்டை வாக்குவம் கிளீனர் கொண்டு அடிக்கடி சுத்தம் செய்வதைப் போல, நம் மனதையும் சுத்தம் செய்ய வேண்டும் என்பது தான் அது.
ஏன் சுத்தம் செய்ய வேண்டும் ?
வீட்டிற்குள் அழுக்கும், தூசியும் அவ்வப்போது அடைந்து விடுவதைப் போல, நம் மனதிற்குள்ளும் கோபம், வன்மமம், வெறுப்பு போன்ற எதிர்மறைச் சிந்தனைகள் அவ்வப்போது நிரம்பிக் கொண்டே இருக்குன்றன. இது நம்முடைய வேகத்தைக் குறைத்து விடும். நமக்குள் ஒரு மன இறுக்கத்தை ஏற்படுத்தி விடும். எனவே மனதை அவ்வப்போது சுத்தப்படுத்துதல் மிக அவசியம் என்கிறார், நார்மன் வின்சென்ட் பீலே.
சரி ! மனதை எப்படி சுத்தப்படுத்துவது ? ‘உள் கவனித்தல்’ தான் ஒரே தீர்வு !
ஆம் ! மனதிற்குள் எழும் சிந்தனைகளைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டே வந்தால், எப்போதெல்லாம் நம் மனம் தளர்வடைகிறது, சோர்வடைகிறது, இறுக்கம் அடைகிறது, கலக்கமடைகிறது, பயம் கொள்கிறது என்பதை கண்டறிந்து விட முடியும்.
குறைந்தபட்சம், மாதத்திற்கு ஒரு முறையேனும், உங்கள் மனதிற்கு பிடித்த மாதிரியான, ஏதாவது ஒரு அமைதி தவழும் இடத்தில் – அது கோவிலாக இருக்கலாம்… மடமாக இருக்கலாம்… மலைப் பகுதியாக இருக்கலாம்… நீர் வீழ்ச்சியாக இருக்கலாம்… ஏன் ? உங்கள் வீட்டின் பூஜை அறையாகக் கூட இருக்கலாம்… ஏதோ ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து, உங்கள் மனம் யாரைப் பற்றி நினைத்தால், எந்த சிந்தனையைப் பற்றி நினைத்தால், எந்த நிகழ்வைப் பற்றி நினைத்தால் உங்களுக்குள் கோபம் வருகிறது ? வன்மம் வருகிறது ? என்று யோசிக்க வேண்டும்.
பிறகு அவரை / அதை நாம் மன்னித்து ஏற்றுக் கொள்ள, அவர்களது சூழலைப் புரிந்து கொள்ள, அவர்களது குறைவான புரிதலை ஏற்றுக்கொள்ள, ஒரு புன்சிரிப்போடு அதைக் கடந்து செல்ல முயற்சிக்க வேண்டும்.
இப்படி நம்மை நாமே தொடர்ந்து தூய்மைப்படுத்திக் கொண்டே வந்தால், எதிர்மறை சிந்தனைகள் நம் மனதில் இருந்து மறைந்து, தொடர் முன்னேற்றத்திற்கு வழி பிறக்கும், என்கிறார் பீலே.
முயற்சித்துப் பாருங்களேன் !
– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker in tamil nadu