நம்மில் பலருக்கும், ‘வெற்றிக்கு ஐடியா முக்கியமா ? அல்லது செயல் திட்டம் முக்கியமா ?’ என்ற சந்தேகம் எழுவது உண்டு.
LARRY BOSSIDY மற்றும் RAM CHARAN இணைந்து எழுதிய EXECUTION: THE DISCIPLINE OF GETTING THINGS DONE என்ற நூலில் ‘ஐடியாக்களை விட செயல் திட்டங்களே வெற்றிக்கு அடிப்படையானது‘ என்று உறுதிபடக் கூறுகின்றனர்.
‘நல்ல ஐடியாக்கள் கூட சரியாக செயல்படுத்தப்படாவிட்டால், அது தோற்றுப் போய்விடும். அதே சமயம், மோசமான ஐடியாக்கள் கூட சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டால், அது வெற்றி பெற்று விடும்‘ என்பது அவர்கள் வாதம்.
அது உண்மைதான் என்பதைப் பறைசாற்றும் வகையில் ஒரு வரலாற்று உதாரணத்தையும் நாம் பார்க்கலாம்.
பிலிப்பைன்ஸ் நாட்டினுடைய கதாநாயகனாகத் திகழ்ந்தவன் லாபு லாபு (LAPU LAPU) என்கிற மன்னன்.
1521-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26-ஆம் தேதி, பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மெக்லன் (MACLAN) என்ற தீவிற்கு ஸ்பெயின் நாட்டு கப்பற்படை வந்தது. மெகல்லன் (MAGELLAN) என்கிற தளபதி, அப்படைக்கு தலைமை தாங்கினான். அவன் மிகத் திறமை மிக்கவன். பல போர்களில் வெற்றி கண்டவள். அவனுடைய நோக்கம், பிலிப்பைன்ஸ் நாட்டைக் கைப்பற்றி, அங்கு ஸ்பெயின் நாட்டின் காலனி ஆதிக்கத்தை நிலை நிறுத்துவது தான்.
அவன் கப்பலில் ஏராளமான பீரங்கிகள், துப்பாக்கிகள், இரும்பு வாள்கள், உடலைப் பாதுகாக்கும் இரும்புக் கவசங்கள் போன்றவை இருந்தன.
தீவின் கரைக்கு அருகில் பெரிய பாறைகள் இருந்ததால், அவனது கப்பலால், கரைக்கு அருகில் செல்ல முடியவில்லை.
இருப்பினும் தான் வந்திருப்பதை அறிவிக்க பீரங்கிகளால் வானத்தை நோக்கி சுட்டான். உடனே அந்தத் தீவின் அரசன் லாபு லாபு, சுமார் 1500 படை வீரர்களுடன் கரைக்கு அருகில் வந்தான்.
மெகல்லன் அவனை சரணடையுமாறு சொன்னான். தன் கையில் இருந்த ஆயுதங்களை எல்லாம் தூக்கிக் காண்பித்தான். இயக்கிக் காண்பித்தான். முதலில் லாபு லாபு இந்த ஆயுதங்களைப் பார்த்துப் பயந்தாலும், பிறகு அது இயங்கும் விதத்தை ஓரளவு கணித்து விட்டு, சரணடைய மறுத்து விட்டான்.
உடனே மெகல்லனின் படை வீரர்கள் பீரங்கியை இயக்க முயற்சித்தனர். ஆனால் பாறைகள் இருந்ததால், பீரங்கி கொண்டு படை வீரர்களை சுட இயலவில்லை. இதனால், மெகல்லன் 70 வீரர்களுடன் கரையை நோக்கி நடந்தே முன்னேறினான்.
லாபு லாபுயின் படைவீரர்களிடம் இருந்ததெல்லாம் மூங்கில் அம்பு, வில், வாள் போன்றவை தான்.
லாபு லாபு தனது வீரர்களை துப்பாக்கி குண்டு பாயும் இடத்திலிருந்து சற்று தள்ளி ஒதுங்கி நிற்க வைத்தான். 70 வீரர்களும் துப்பாக்கி குண்டுகள் தீரும்வரை சுட்டனர். அது தீர்ந்தவுடன், உடம்பில் இரும்புக் கவசத்துடனும், கைகளில் இரும்பு வாள்களுடனும் முன்னேறினர்.
அப்போது லாவு லாபு தனது வீரர்களுக்கு, அவர்களது காலில் கவச உடை ஏதும் இல்லாத காரணத்தால், காலை நோக்கி விஷ அம்புகளை எய்தச் சொன்னான். குறிப்பாக, மெகல்லனின் காலை முதலில் குறி பார்க்கச் சொன்னான். எல்லோரும் அவனது காலில் அம்புகளைத் தொடுக்க, விஷ அன்புகள் பாய்ந்து அந்த இடத்திலேயே கீழே விழுந்து மெகல்லன் இறந்து போனான்.
இச்சம்பவத்தை பார்த்த பிற வீரர்கள் பயந்து பின் வாங்கினார். அவர்களையும் அம்புகளால் வீரர்கள் துளைத்தெடுத்தனர். தலை கால் தெரியாது ஸ்பெயின் படை தம் நாட்டை நோக்கி ஓடியது.
பிறகு லாபு லாபு உயிரோடு இருந்த அடுத்த நாற்பது ஆண்டுகள் வரை, ஸ்பெயின் நாட்டு வீரர்களால், பிலிப்பைன்ஸ் நாட்டை வெற்றி கொள்ளவே இயலவில்லை.
இதனால், இன்றளவும் லாபு லாபு, பிலிப்பைன்ஸ் நாட்டின் ஹீரோவாகக் கருதப்படுகிறான். அந்நாட்டின் பல இடங்களில் அவனுக்கென்று பெரிய, பெரிய சிலைகள் தற்போதும் உள்ளன.
இந்த வெற்றிக்கு முழு காரணம் லாபு லாபுவினுடைய செயல் திட்டங்கள் தான். பெரிய ஆயுதங்களைக் கண்டு பயந்து விடாது, அவற்றை லாவகமாக எதிர்கொள்ளும் திறனை, அந்த கணப் பொழுதில் திட்டமிட்டு செயல்படுத்தியது தான்.
– இராம்குமார் சிங்காரம், Tamil Motivational Speaker