fbpx
சூழலைச் சமாளி! | Situation handling

situation handling
  • August 10, 2024

ஒரு பெண் குழந்தை இரவு படுக்கப் போகும் முன் தினமும் சிறிது நேரம் கடவுளை கண் மூடி வேண்டுவாள்.

கடவுளே என் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி எல்லோரையும் ‘குஷியாக வைஎன்று வேண்டுவாள். 

இதை அவள் தந்தை பெருமையாக
கேட்டு மகிழ்ந்தார். புத்திசாலிக் குழந்தையைப் பெற்ற பெருமிதத்தில் உறங்கிப் போனார்.

ஒரு நாள் அவள் “கடவுளே என் அப்பா, அம்மா, பாட்டி எல்லோரையும் குஷியாக வை. தாத்தா பை பை!” என்று சொன்னாள். இவள் ஏன் இப்படிச் சொல்கிறாள் என்று யாருக்கும் புரியவில்லை. காரணம், காலையில் புரிந்தது. அடுத்த நாள் தாத்தா இறந்து விட்டார்.

சில மாதங்களுக்கு பிறகு இதே கதை பாட்டிக்கும் நடந்தது. அப்பா பயந்து நடுங்கி விட்டார்.

ஒரு வருடம் கழித்து ஒரு நாள் அவள் “கடவுளே! என்னையும் அம்மாவையும் குஷியாக வை! அப்பா பை பை!” என்றாள். அன்று பூராவும் அப்பாவுக்கு ஒரே டென்ஷன். வேலை எதுவும் ஓடவில்லை. நடுங்கிக்கொண்டே நாள் முழுவதும் கழிந்தது. ஆபீசிலிருந்து திரும்பி வந்த மனைவியும் டென்ஷன் ஆக காணப்பட்டார்.

உனக்கு என்ன ஆச்சு? என்று கேட்டார் அப்பா. “இன்னிக்கு ஆபீஸ்ல எங்க பாஸ் திடீர்னு மயங்கி விழுந்து செத்துட்டார்” என்றாள் மனைவி. அங்கே ஒரு சிக்கல் தீர்ந்தது. புதிய பூகம்பம் வெடித்தது,

வாழ்க்கை இப்படித்தான் பலவிபரீதமான, விசித்திரமான, வில்லங்கமான சுவாரஸ்யங்களை உள்ளடக்கிக் காத்துக் கொண்டிருக்கிறது. அதை எதிர்கொள்ளும் வல்லமை பெற்றவர்கள் வெற்றியாளர்களாகிறார்கள்.

இதோ, இன்னொரு கதை 

அவர்கள் சமீபத்தில் திருமணமானவர்கள். அவர்களுக்கு வந்த பரிசுப் பார்சல்களைப் பிரித்துக் கொண்டே வந்தபோது, சிறிய சுவருக்குள் சத்யம் தியேட்டரில் ஓடும் புதிய படத்துக்கான இரண்டு உயர் வகுப்பு டிக்கெட்கள் இருந்தன. 

இதை அளித்தது யாராக இருக்கும்?” என்று இருவரும் ஆச்சர்யமடைந்தனர். நூதனமான முறையில் திருமணப் பரிசு அளித்த அந்த நபர் உறவினராக இருப்பாரோ…? கல்லூரித் தோழர்கள், அலுவலக சக பணியாளர்கள்…? ஜாலி நண்பர்கள்…? எவ்வளவு யோசித்தும் விடை கிடைக்கவில்லை.

ஒருவேளை நாம் தனியா தியேட்டருக்குப் போறதா நினைச்சுக்கிட்டிருக்கும்போது, நம்ம ஃப்ரெண்ட்ஸ் கும்பலா காத்திருப்பாங்களோ. ஏதும் பார்ட்டி அரேஞ்ச் பண்ணியிருப்பாங்களோ..? என்று பேசிக்கொண்டபடியே இருவரும் திரையரங்கை அடைந்தனர்.

அவர்கள் எதிர்பார்த்த மாதிரி எந்த தடபுடலும் இல்லை. ஆனால், நல்ல ரொமான்ஸான படமாக புது ஜோடிக்கு ஏற்றாற்போல இருந்தது. சரி, டிக்கெட்டை அன்பளிப்பாக அளித்த உறவினர், காலையில் எப்படியும் போனில் பேசுவார். அப்போது கண்டுபிடித்துக் கொள்ளலாம் என்று சஸ்பென்ஸைத் தள்ளிவைத்துவிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.

அங்கே அதிர்ச்சி காத்திருந்தது. சீதனமாக வந்த பொருட்களும், புதிய நகைகளும், வீட்டிலிருந்த விலை உயர்ந்த பொருட்களும் கொள்ளை போயிருந்தன. மேசையின்மீது ஒரு கடிதம் படபடத்தது. “படம் நன்றாக இருந்ததா…? டிக்கெட் அனுப்பியது யார் என்று இப்போது புரிந்திருக்குமே!” என்று எழுதியிருந்தது.

எடுத்த காரியத்தில் வெற்றி பெற சூழலுக்கேற்ப செயல்பட வேண்டியது அவசியமாகும். ஒரே மாதிரியான சூழல் மூவருக்கு அளிக்கப்பட்டால், அவர்கள் செயல்படும் விதத்தை வைத்து, யார் பயந்தாங்கொள்ளி, திறமைசாலி, புத்திசாலி என்று கண்டுபிடித்துவிடலாம்.

சர்க்கஸ் பார்த்துக்கொண்டு இருக்கும்போது, எதிர்பாராதவிதமாக சிங்கம் கூண்டைவிட்டு வெளியேறிப் பார்வையாளர்கள் மீது பாய்கிறது. இந்தச் சூழலில்…

அலறி அடித்துக்கொண்டு ஓடுகிறவன் பயந்தாங்கொள்ளி.

சிங்கத்தை அடக்க முயல்கிறவன் திறமைசாலி.

அந்தக் கூண்டுக்குள் ஓடிப் போய்க் கதவைச் சாத்திக்கொள்கிறவன், புத்திசாலி!

வாழ்க்கையில் வெற்றி பெறுவது நம் ஒவ்வொருவரின் மனதில் எழும் எண்ணங்களை பொறுத்தது. அனைவருமே வெற்றியாளராக வர வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். ஆனாலும் ஒரு சிலர் மட்டுமே வெற்றியாளராக முடிசூட்டுகின்றனர் 

Comments are closed.