வீட்டில் ஒரு வாக்குவாதம் நடக்கிறது. கணவரா ? நீங்களா ? என்ற வாதத்தில் நீங்கள் ஓங்கிப் பேசி ஜெயித்து விடுகிறீர்கள்.
அலுவலகத்தில் ஒருவர், ஒரு கருத்தை முன்வைக்கிறார். நீங்கள் உயர் பதவியில் இருப்பதால், அதை மறுத்துப் பேசி அவர் வாயை மூடி விடுகிறீர்கள்.
உங்களோடு பேருந்தில் ஒருவர் பயணிக்கிறார். அவரோடு பேசுகிறபோது அவரது கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்லி, அவரது மூக்கை உடைக்கிறீர்கள்.
எல்லாம் சரி…! உங்கள் பக்கம் நியாயம் இருக்கலாம். நீங்கள் உயர் பதவியில் இருக்கலாம். உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கலாம். இதன் காரணமாக நீங்கள் ஜெயித்தும் விடலாம்.
ஆனால் என்ன லாபம் ? அவர்களது இதயத்தில் நீங்கள் இடம் பெற முடியாமல் தோற்றுவிடுகிறீர்கள்… உங்களையும் அறியாமல், ஒரு எதிரியை உருவாக்குகிறீர்கள்..
அப்படியானால் இதற்கு தீர்வு தான் என்ன ?
அடுத்தவர்களை ஜெயிக்க விடுவது தான்… ! அவர்கள் பேசப் பேச, சிரித்த முகத்தோடு – காது கொடுத்து கேளுங்கள். அவர்களை, அவர்கள் போக்கில் அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்.
உங்கள் கருத்தில் உண்மை இருக்குமானால் பட்டும் படாமல் மேலோட்டமாகச் சொல்லிவிட்டு ஒதுங்கி விடுங்கள். “நான் அப்பவே சொன்னேனே.. கேட்டியா ?” என்றெல்லாம் நிரூபிக்காதீர்கள். அவர்கள் கருத்துக்களை ரசியுங்கள். அவர்களைப் பேச அனுமதியுங்கள். தட்டிக் கொடுங்கள்… அவர்கள் ஜெயித்து விட்டுப் போகட்டும்.
இதனால் என்ன நடக்கும் தெரியுமா ?
அவர்கள் நேசிக்கும் மனிதராக நீங்கள் உயர்வீர்கள். உங்களிடம் மனம் விட்டு நிறையப் பேசத் தொடங்குவார்கள். நீங்கள் சொல்கிற வேலையை எல்லாம் ஓடி, ஓடிச் செய்து கொடுப்பார்கள். உங்களுக்கென்று ஒரு ஆதரவு கூட்டம் உருவாகும்.
பிறகென்ன… எல்லாம் ஜெயமே !
– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker