மனைவியைப் பங்குதாரராகச் சேர்த்துக் கொண்டு தொழில் தொடங்கலாமா? சகோதரர்கள் அல்லது உற்றார் உறவினர்களைப் பங்குதாரர்களாகச் சேர்த்துக் கொண்டு தொழிலில் ஈடுபடலாமா? என்ற கேள்விகள் உங்களுக்கு எழலாம்.
முழுநேரமும் வர்த்தகத்தில் மனைவியை ஈடுபடுத்த விரும்புவோர் முதலில் அதற்கான தேவை குறித்து ஆராய வேண்டும். வரவு – செலவு கணக்கைப் பார்க்கவும், உங்களுக்கு உறுதுணை புரியவும், நம்பகத்தன்மைக்காகவும் என்றால்… தயவுசெய்து மனைவியை வேலைக்கு நியமிக்க வேண்டாம். இந்த விஷயத்தில் சிந்தியுங்கள், ஒருமுறைக்கு இரு முறையாக…!
பலரது அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கின்றபோது இதனால் ஏற்படுகிற நன்மைகளை விட சிக்கல்களே அதிகமாக உள்ளன. வேலை பார்ப்போர் ஆகட்டும்… தொழில் நடத்துவோர் ஆகட்டும். ஒரு நாளில் 12 மணி நேரம் அலுவலகத்தில் தான் இருக்கின்றார்கள். தூங்கும் நேரத்தைக் கழித்துப் பார்த்தால், வீட்டுக்கு செலவழிப்பதைவிட, வேலை அல்லது தொழிலில் கழிக்கும் நேரம் தான் அதிகம்.
அப்படி இருக்கும்போது, மனைவி, குடும்பத்தைக் கவனிப்பது… அல்லது ஏதாவது ஒரு நிறுவனத்தில் குறைந்த நேரம் பணியாற்றுவது உகந்தது. இருவரும் தங்கள் முழு நேரத்தையும் அலுவலகத்தில் செலவழித்தால் குழந்தைகள் பாதிக்கப்படுவர். மேலும் விருந்து, விசேஷங்களுக்கு இருவரும் செல்ல நேர்ந்தால், அலுவலகப் பணிகளில் பெரும் சுணக்கம் ஏற்படும்.
இன்னொரு விஷயம், கணவன் – மனைவிக்குள் நெருக்கம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு தனிப்பட்ட சுதந்திரமும் முக்கியம். மனைவி , கணவனது அலுவலகத்துக்குள் நுழைந்துவிட்டால் பெரும்பாலும் இருவரது தனிப்பட்ட சுதந்திரமும் காணாமல் போய்விடும்.
மற்றொரு சிரமம் என்னவென்றால் குடும்பத்தில் நடக்கிற சண்டைகள் அலுவலகத்தில் எதிரொலிக்கும். அலுவலகத்தில் ஏற்படுகின்ற மனக்கசப்புகளும், பணப் பற்றாக்குறையும் வீட்டை ரணகளமாக்கும். இதனால் குழந்தைகளும் பாதிக்கப்படுவர், அலுவலக ஊழியர்களும் இன்னலுக்கு உள்ளாவர்.
தொழிலில் ஆண்களின் கண்ணோட்டம் வேறு; பெண்களின் கண்ணோட்டம் என்பது வேறு. ஆண்கள் பெரும்பாலும் இலக்கு நோக்கி பயணிப்பார்கள். தொலைநோக்குப் பார்வையோடு செயல்படுபவர்கள். ஆனால் பெண்களுக்கோ இலக்கை விட இலக்கை அடையும் வழி மிக முக்கியம். தொலைநோக்குப் பார்வையைவிட, அன்றாட செயல்பாடுகளும், நடைமுறைகளும் சரியாக இருக்க வேண்டும் என்பதிலேயே கவனம் செலுத்துவார்கள் .
‘இப்படி இரண்டு வெவ்வேறு சிந்த னையுடையோர் ஒன்றிணைந்தால் தொழில் சிறப்பாக அமையுமே’ என்று நீங்கள் கருதக்கூடும். ஆனால், மனைவி அலுவலகத்துக்கு வந்தால் பணியாற்றுகின்ற ஊழியர்களுக்கு ஏற்படும் சிரமங்களையும் பார்க்க வேண்டும். உங்களோடு ஒத்துப் போகின்ற ஒரு ஊழியர் உங்கள் மனைவியின் கருத்துக்களோடு வேறுபடக் கூடும்.
பணியாளர்களின் கண்ணோட்டத்தில் பார்க்கின்ற போது இரண்டு முதலாளிகளை சமாளிப்பது என்பது அவர்களுக்கு மிகவும் சிரமமாகும். நீங்கள் உங்கள் மனைவியையும், தாயையும் ஒருசேர சமாளிப்பதைப் போன்றது அவர்களின் நிலை.
“அப்படியானால் மனைவி என்னோடு பணியாற்றுவதால் எந்த நன்மையுமே கிடையாதா?” என்று நீங்கள் கேட்கக் கூடும். அப்படியும் ஒதுக்கிவிட முடியாது. உங்களிடம் இல்லாத அதேநேரத்தில் உங்கள் தொழிலுக்கு அவசியம் பயன்படக்கூடிய ஏதேனும் திறமைகள் உங்கள் மனைவிடம் இருப்பின் அவரை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நீங்கள் மார்க்கெட்டிங்கில் சிறந்து விளங்க கூடியவராக இருந்து, அவர் கணக்கு பதிவில் அல்லது நிர்வாகத்தில் அனுபவம் பெற்றவராக இருந்தால் உங்கள் இருவராலும் தனித்து இயங்க முடியுமானால், அவரைச் சேர்த்துக் கொள்ளலாம். அவர் அன்றாட நிர்வாகத்தில் தலையிடக் கூடாது, அவ்வளவுதான்.
கணவன்-மனைவி ஒன்றிணைந்து தொழிலில் ஈடுபட்டு வெற்றி பெற்றவரின் பட்டியல் மிக நீளமானது. இதோ… ஒரு சில சான்றுகள்; ‘இன்ஃபோசிஸ்’ நாராயணமூர்த்தி– சுதா, ‘சக்தி மசாலா’ துரைசாமி – சாந்தி, ‘மாஃபா’ பாண்டியராஜன் – ஹேமலதா, ‘கேலக்ஸி கம்யூனிகேஷன்’ ரமேஷ் பிரபா – விஜயலட்சுமி.
பெரும்பாலும் மனைவிக்காக நாம் சொன்ன கருத்துக்கள் அனைத்தும் உற்றார் உறவினர்களுக்கும் பொருந்தும். இப்படி வைத்துக்கொள்ளுங்கள்… உங்களோடு இணைந்து செயலாற்றும் வேலைகளுக்கு மனைவியையும், உங்களுக்கு கீழ்ப்படியும் வேலைகளுக்கு நல்ல குணங்களைக் கொண்ட உற்றார் உறவினரையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், நிர்வாகத்தை நீங்கள்தான் நடத்த வேண்டும். உறவினர் கை ஓங்கி விடாமல் பார்த்துக் கொள்வது உறவுக்கும், தொழிலுக்கும் நல்லது.