சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.
சிக்கனத்துக்கும் கஞ்சத்தனத்துக்கும் நூலிழைதான் வித்தியாசம். எதில் நாம் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்… எதில் கஞ்சத்தனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் இருக்கும் கவனம்தான் வெற்றிக்கான பாதைகளில் ஒன்று.
ஓர் ஊரில், வணிகன் ஒருவன் இருந்தான். கஞ்சனிடம் காசு சேருவதில் என்ன ஆச்சர்யம் என்பதுபோல, அவனிடம் ஏராளமாக பணம் இருந்தது. குறைந்த ஊதியத்தில் கிடைக்கும் வேலைக்காரர்களைப் பயன்படுத்தி அவர்களது உழைப்பைச் சுரண்டுவது அவன் வாடிக்கை. அப்படி ஒருவனை பணியமர்த்தியிருந்தான் அவன்.
ஒருநாள் அவனை அழைத்து, “நம் வண்டியை எடுத்துக்கொண்டு பனங்காட்டுக்குப் போ.. அங்கே பலர் பனைமரங்களை வெட்டி
வண்டியில் ஏற்றிக்கொண்டு இருப்பர். அதேபோல் நீயும் மரங்களை வெட்டிக்கொண்டு வா!” என்றான்.
அவனும் வண்டியை ஒட்டிக்கொண்டு சென்றான். அங்கே சிலர் மரங்களை வெட்டி வீழ்த்திக் கொண்டு இருந்தனர். சிலர், கீழே கிடக்கும் மரங்களை முயன்று வண்டியில் தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தனர், இதைப் பார்த்ததும் வேலைக்காரனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“என்ன இவர்களின் புத்திசாலித்தனம்..? மரத்தை வெட்டும்போதே, வண்டியில் சரியாக விழும்படி செய்தால், நேரமும் உழைப்பும்
மிச்சமாகுமே! வீணாக ஒரு முறை பூமியில் கிடக்கும் மரத்தை வண்டியில் ஏற்ற வேண்டாமே! என்று நினைத்தான். எல்லோரையும் கைதட்டி அழைத்து, தன் வேலையைப் பார்க்கும்படி கூறினான், அவர்களுக்கும் சிறு ஓய்வு தேவைபட்டதால், கூடிநின்று வேடிக்கை பார்த்தனர்.
பணியாள், கோடரியால் ஒரு பனைமரத்தின் அடிப்பகுதியைப் பாதி அளவு வெட்டி முடித்தான். பிறகு அந்த மரம் விழக்கூடிய இடத்திற்கு நேராக மாட்டுடன் வண்டியை நிறுத்தினான். மரம் வெட்டிக் கொண்டிருந்த மற்றவர்கள், “டேய் கிறுக்கா.!” என்று சுத்தவே, மரத்தை வண்டியின் மீது சாய்த்தான். சடசடவென்ற சத்தத்துடன் வண்டியின் மீது மரம் வேகமாக விழுந்ததில், வண்டி தூள் தூளானது. கால் உடைந்து குற்றுயிரும் குலை உயிருமாக மாடு துடித்துக் கொண்டிருந்தது. இதைக்கண்டு அவன் திகைத்து விட்டான். தன் திட்டத்தில் என்ன குறை என்று அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. வீடு திரும்பியவன், “என் திட்டம் நல்ல திட்டம் தான். வண்டிக்குத்தான் வலிமை இல்லாமல் போய்விட்டது” என்று வணிகனிடம் சொன்னான். ‘முட்டாளாக இருக்கிறாயே! இப்படி செய்யலாமா? என்று வேலைக்காரனைத் திட்டினான்.
சில நாட்கள் சென்றன. திடீரென்று அந்த ஊரில் சமையல் எண்ணெய்ப் பஞ்சம் வந்துவிட்டது.
‘தன்னிடம் இருக்கும் ஒரு லாரி பீப்பாய் எண்ணெயைப் பதுக்கி வைத்தால் நிறைய லாபம் கிடைக்கும்!‘ என்று நினைத்தான் வணிகன்.
உடனே வேலைக்காரனை அழைத்து, “கடையில் இருக்கும் எண்ணெய் எல்லாவற்றையும் இன்றிரவு நம் தோட்டத்தில் பள்ளம் தோண்டிப் புதைத்துவிடு. பல லட்சம் ரூபாய் சரக்கு. யாருக்கும் தெரியக்கூடாது!” என்றான்.
வணிகன் சொன்னபடியே, நள்ளிரவில் பெரிய பள்ளம் தோண்டினான் வேலைக்காரன். ஒவ்வொரு பீப்பாயாக உருட்டிச் சென்று அதிலுள்ள எண்ணெயைப் பள்ளத்தில் ஊற்றினான். திடீரென அவனுக்கு ஒரு சந்தேகம். முதலாளிக்குப் போனைப் போட்டான். “முதலாளி! எண்ணெயைப் புதைச்சாச்சு! இந்தக் காலிப் பீப்பாய்களை என்ன செய்யட்டும்?” என்று கேட்டான்.
நல்ல தூக்கத்தில் இருந்த வணிகனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. மூச்சும் நின்று போனது.
ஊழியர்களை வேலைக்கமர்த்துவதில் ஒரு முக்கியமான பழமொழி, கடலைப் பருப்பைத் தூக்கிப் போட்டால் குரங்குதான் வந்து நிற்கும் என்பதாகும்.
நாம் எப்படிப்பட்ட பணியாளர்களை நியமிக்கவேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளாமல் இருந்தால் இதுபோன்ற சிக்கலுக்கு
ஆளாவதைத் தடுக்க முடியாது. இன்னொரு விஷயத்தையும் மனதில் வையுங்கள். புதிய தொழில் தொடங்கும்போது, முதல் ஊழியரை நியமிப்பதில்தான் உங்கள் சாமர்த்தியம் உள்ளது. காரணம், அவர்தான் அடுத்தடுத்த ஊழியர்களின் ரோல் மாடல். உங்களைப் பற்றி அவர் கூறும் கருத்துக்களே மற்ற அனைவருக்கும் போய்ச் சேரும். அதனால், தகுதியான ஊழியரைத் தேர்ந்தெடுங்கள். அவரது உழைப்புக்கேற்ற ஊதியம் தந்து வெற்றிப்பாதை அமையுங்கள்.