ஒரு நிறுவனத்தில் பணியாற்றுகிற ஊழியர்களிடையே நிறைய ஈகோ பிரச்சனை இருந்து வந்தது.
அதைத் தீர்க்க வழி தெரியாமல், அந்த நிறுவனத்தின் நிர்வாகி ஒரு மனித வள பயிற்சியாளரை அழைத்து வந்தார்.
அந்தப் பயிற்சியாளர் அங்கே வேலை பார்த்த 40 பேரையும் அழைத்து, ஆளுக்கு ஒரு பலூனைக் கொடுத்து, அதில் அவர்களது பெயரை எழுதி, ஊதி கட்டித் தரச் சொன்னார்.
பிறகு 40 பலூன்களையும் ஒரு பெரிய ஹாலில் உள்ளே போட்டார். 40 பேரையும் ஒன்றாக உள்ளே சென்று அவரவர் பெயர் பொறித்த பலூனை எடுத்து வரச் சொன்னார். அவர்களது பெயர் பொறித்த பலூனை உடையாமல் எடுத்து வந்தால், அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு தரப்படும் என்றும் அறிவித்தார்.
40 பேரும் முண்டியடித்துக் கொண்டு சென்று, தத்தமது பெயர் உள்ள பலூன்களைத் தேடினர். அது கிடைக்காததால் அடுத்தவரிடம் இருந்து பிடுங்கிணர். அதனால் பலூன்கள் அனைத்தும் உடைந்து போனது. சோகத்தோடு திரும்பினர்.
அவர் 40 பேரையும் மீண்டும் அழைத்தார். திரும்பவும் அதே மாதிரி பலூனைக் கொடுத்து, அதே போன்று பெயர் எழுதி – ஊதி, ஹாலல் போடச் சொன்னார்.
இப்போது அவர், “உள்ளே சென்று கையில் கிடைக்கக்கூடிய ஏதாவது ஒரு பலூனை ஒவ்வொருவரும் எடுத்து வாருங்கள்” என்றார்.
அவர்கள் எடுத்து வந்தவுடன், அதில் யார் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறதோ, அவரிடத்தில் அந்த பலூனை ஒப்படைக்கச் சொன்னார். இப்போது அவரவர் பெயர் பொறித்த பலூன் அவரவரது கைக்கு வந்து சேர்ந்தது. எல்லோரும் வெற்றி பெற்றனர்.
ஆம் சினேகிதியரே !
நாம் போட்டி பொறாமையோடு இருந்தால் எதுவும் நமக்கு கிடைக்கப் போவதில்லை. நிறுவனமும் தோற்றுப் போகும். பிறருக்கு உதவினால், நமக்கும் உதவிகள் கிடைக்கும். அது நிறுவனத்திற்கும் பயனுடையதாக இருக்கும். எனவே அருகில் இருப்பவரை போட்டியாளராகப் பார்க்காமல், சினேகிதியாகப் பார்த்து பழகக் கற்றுக் கொள்வோம்.
– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker in tamil nadu