நாம் மாதந்தோறும் பணத்தைச் சம்பாதிக்கிறோம்… செலவழிக்கிறோம்… ஆனால் தேவை ஏற்படும் போது நம் கையில் போதிய பணம் இருப்பதில்லை..
இதற்கு தீர்வாக பொருளாதார நிபுணர்கள் சொல்கிற அடிப்படை தியரிகளில் சிலவற்றை, எளிமையாக இங்கே நாம் பார்ப்போம்.
*பென்ஷன் விதி : 25 x வருட பணத் தேவை*
தோராயமாக 60 வயதில் நாம் ஒவ்வொருவரும் பணி ஓய்வு பெறுகிறோம். அப்படியானால், மீதமுள்ள காலத்திற்கு நமக்கு எவ்வளவு பணம் தேவைப்படும் ? அதைத் தெரிந்து கொள்ள இந்த சூத்திரம் உதவும்.
உதாரணத்திற்கு, உங்களுக்கு மாதந்தோறும் 10,000 ரூபாய் செலவுக்கு தேவைப்படும் என எண்ணினால, வருடத்திற்கு அது 1,20,000 ரூபாயாக இருக்கும்.
அப்படியானால் 25 x 1,20,000 என்று கணக்கிட்டால், தோராயமாக 30 லட்சம் ரூபாய் உங்களுக்கு பணம் தேவைப்படும். அதாவது, நீங்கள் ஓய்வு பெறுகிற போது உங்கள் கையில் 30 லட்ச ரூபாய் பணம் இருக்க வேண்டியது அவசியம்.
இந்த 30 லட்ச ரூபாயை, இரு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு, 15 லட்ச ரூபாயை பிக்சட் டெபாசிட்டிலும், மீதி 15 லட்ச ரூபாயை மியூச்சுவல் ஃபண்டிலும் முதலீடு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு வருட முடிவிலும், இதிலிருந்து நான்கு சதவீதத் தொகையை (அதாவது 1,20,000 ரூபாயை) நீங்கள் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்.
இப்படிச் செய்தால், வாழ்நாள் இறுதிவரை அசல் தொகையும் நம்மோடு இருக்கும். வருடாந்திர செலவிற்கும் நம் கையில் பணம் வந்த வண்ணம் இருக்கும்.
*முதலீட்டு விதி : 100 – உங்கள் வயது*
நீங்கள் உங்கள் வயதைப் பொறுத்து எவற்றில் உங்கள் பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்பதை இந்த சூத்திரம் சொல்கிறது.
உங்கள் வயது 30 ஆக இருக்குமானால்,
100 – 30 = 70
அதாவது, மொத்த சேமிப்பில் 70% தொகையை பங்குச் சந்தையில் / மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். மீதமுள்ள 30% தொகையை பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்யலாம்.
ஒருவேளை, உங்கள் வயது 60 ஆக இருக்குமானால், 40% தொகையை பங்குச்சந்தை / மியூச்சுவல் ஃபண்டிலும், 60% தொகையை பிக்சட் டெபாசிட்டிலும் முதலீடு செய்வது உகந்தது.
அதாவது காலம் செல்லச் செல்ல இடர்கள் குறைவாக உள்ள நிதித் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்பதே இந்த சூத்திரம் சொல்கிற கருத்து.
மீதமுள்ள சில விதிகளை அடுத்த இதழில் பார்ப்போம்.
– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker in chennai