குரு பெயர்ச்சி, ராகுப் பெயர்ச்சி பலன்களைப் படித்திருக்கிறீர்களா…? எந்த ராசிக்கு உரியவர் தமக்கான பலனைப் படித்தாலும், முதல் நான்கு பாராக்கள் உற்சாகம் தருவதாகவும்,
அடுத்த இரண்டு பாராக்கள் அடிவயிற்றைக் கலக்குவதாகவும் இருக்கும். அண்டவெளிப் பெயர்ச்சிகள் தான் என்றில்லை. அலுவலகதத்தில் நடக்கும் சம்பவங்களாகட்டும், வாகனம் ஓட்டும்போது நெரிசல் ஏற்படுத்தும் எரிச்சலாகட்டும், வீட்டுக்கு வந்தால் பிள்ளைகள் அடிக்கும் லூட்டியாகட்டும்… டென்ஷனோ, டென்ஷன்தான்.
இதையெல்லாம் சமாளிக்கத் தெரிந்தோரே வெற்றியாளர். இதை எப்படிக் கற்றுக் கொள்வது..? ரித்திகாவிடம் இருந்துகூட இதைக் கற்றுக்கொள்ளலாம்.
ஒரு சூப்பர் மார்க்கெட்.
ஒரு இளம்பெண் குழந்தையுடன் வந்திருந்தார். அவர் பொருட்களை ஒவ்வொன்றாகத் தேடி எடுத்து, தரமானதா.. எக்ஸ்பயரி உள்ளதா.? என்று ஆராய்ந்து கொண்டிருக்கும்போது, அவரது குழந்தை குடுகுடுவென ஓடியிருந்தது. அதைத் தேடி அங்குமிங்கும் அலைபாய்ந்தபோது, அது, சாக்லெட் டப்பாவிலிருந்து ஒன்றை எடுத்து பிய்த்து சாப்பிட்டுக் கொண்டு, முகத்திலும் அப்பியிருந்தது. ஏன் கண்ணா இப்படிப் பண்ணினே..?’ என்று குழந்தையின் கையிலிருந்து சாக்லெட்டைப் பிடுங்கியதுதான் தாமதம்.
ஆலைச் சங்கொலி மாதிரி அலறல் எழுந்தது குழந்தையிடம். ‘நோ… அழுதாலும் தரமாட்டேன்!” என்றார் அம்மா.
குழந்தை அழுகையை நிறுத்தவில்லை…
அக்கம்பக்கத்தார் அங்கே எட்டிப் பார்த்தார்கள். அந்த இடத்தை நோக்கி வந்தார்கள். குழந்தை மேல் பரிதாபம் காட்டினார்கள். அம்மாவுக்கோ கோபம் தலைக்கேறியது. கட்டுப்படுத்தியபடி, ‘ரித்திகா, ரிலாக்ஸ்!” என்றாள். குழந்தை அழுகையை நிறுத்தவில்லை. ‘ரித்திக்க்கா… ரிலாக்ஸ்!” என்றாள் பல்லைக் கடித்தபடி. அதையெல்லாம் குழந்தை காது கொடுத்துக் கேட்டால்தானே!
சாக்லெட் டப்பாவை நோக்கி நீட்டிய கையை குழந்தை கீழிறக்கவே இல்லை. அம்மா மீண்டும் சொன்னாள்… ‘ரித்திகா ரிலாக்ஸ்!
இப்போது, பக்கத்திலிருந்தவர் டென்ஷனாகி விட்டார். ‘ஏம்மா… அழுகிற குழந்தையை சமாதானப்படுத்தாமல், சும்மாவானும் ‘ரிலாக்ஸ் ரிலாக்ஸ்‘ என்றால், அதற்குப் புரியுமா…?
அவரைக் கோபத்துடன் பார்த்த அம்மா சொன்னார்… ‘ஹலோ, ரித்திகா என்பது குழந்தையின் பெயரில்லை. என் பெயர்!
புரிந்ததா.. அடுத்தவர்களை அடக்க முடியாவிட்டால், நம் கோபத்தை நமக்குள்ளேயே வைத்திருக்கக் கூடாது. ஊழியர்களோ, வாடிக்கையாளர்களோ, சக மனிதர்களோ நம்மை டென்ஷன் பண்ணிக் கொண்டேதான் இருப்பார்கள். அப்போது நாம் சொல்லவேண்டியதெல்லாம், ‘ரித்திகா ரிலாக்ஸ்!‘
எங்கே சொல்லுங்கள், உங்கள் பெயரை நீங்களே உச்சரித்து, ‘ரிலாக்ஸ்!” டென்ஷன் பறந்தே பறந்திருக்குமே!