fbpx
பந்தை உதைத்தான் ! தடையை உடைத்தான் !! | Kicked & Conquered!

kicked & conquered
  • February 22, 2025

வெற்றி பெற்று உச்சத்தில் இருப்பவர்களுக்கும், நமக்கும் என்ன வித்தியாசம் ?

அவர்கள் இருப்பதை ஏற்றுக் கொண்டு பறப்பதைப் பிடிக்கிறார்கள்.

நாமோ, இல்லாத ஒன்றை நினைத்துக் கொண்டு, உள்ளதையும் முழுவதுமாகப் பயன்படுத்தாமல் விட்டு விடுகிறோம்.

அர்ஜென்டினாவில் 1987 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 24-ஆம் தேதி பிறந்த அந்தக் குழந்தைக்கு, சிறு வயதிலிருந்தே விளையாட்டின் மீது ஆர்வம் அதிகம். நமக்கு கிரிக்கெட் பிடிப்பது போல, ஐரோப்பிய நாட்டினருக்கு கால் பந்தாட்டம் அதிகம் பிடிக்கும்.

அந்தக் குழந்தைக்கும் 4 வயதிலேயே கால் பந்துப் பயிற்சியை ஆரம்பித்தனர், அதன் பெற்றோர். 10 வயதை எட்டிய போது, அந்தச் சிறுவனுக்கு, ‘உயரமாக’ வளர்வதற்கு உதவக் கூடிய ஹார்மோன் சுரப்பியில் கோளாறு (GROWTH HARMONE DEFICIENCY) இருப்பது தெரிய வந்தது. அதற்கென அவனுக்கு பல லட்சங்கள் செலவழித்து சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

மருத்துவ சிகிச்சைக்கான பணத்தை அர்ஜென்டினாவில் உள்ள கால் பந்தாட்ட கிளப்புகள் வழங்க முன் வராததால், அந்தச் சிறுவன் ஸ்பெயின் நாட்டுக்குப் புலம் பெயர்ந்தான். அங்கே மற்றொரு கால் பந்தாட்ட கிளப்பின் உதவியோடு மருத்துவ சிகிச்சையையும் பெற்று, விளையாட்டுப் பயிற்சியையும் தொடர்ந்தான். ஆனாலும் அவனது வளர்ச்சி, 5 அடி 7 அங்குலத்தோடு நின்று போனது.

களத்திற்குச் சென்ற அந்த இளைஞனுக்கு இரண்டு பிரச்சனைகள்… ஒன்று, வளர்ச்சி குறைபாடு… (கால் பந்தாட்டத்தில் சாதிக்க வேண்டும் என்றால் ஆறு அடி உயரமாவது இருக்க வேண்டும்… அப்போதுதான் நீளமான கால்களோடு வேகமாக ஓட முடியும்). இரண்டாவது, தொடர் மருத்துவ சிகிச்சைக்கான பணத் தேவை….

அவன் கால் பந்தாட்டத்தில் பிரகாசித்தாலும் பெரிய அளவில் சாதிக்க முடியாது என்று பயிற்சியாளர்கள் கருதினர். இருப்பினும், “உயரத்தை வைத்து நான் உயரப் போவதை விட, என் ஊக்கத்தை வைத்து நான் உயர்ந்து விடுவேன்” என ஆக்ரோஷத்தோடு, தொடர்ந்து அந்த இளைஞன் கால் பந்தாட்டப் பயிற்சிகளில் ஈடுபட்டான்.

எல்லாத் தடைகளையும் உடைத்து எறிந்த அவன், இன்றைய தேதியில் உலகிலேயே ஒரே அணிக்காக அதிகபட்ச கோள்களை அடித்து (790 கோள்கள்) சாதனை படைத்துள்ளான். அது மட்டுமா ? உலகின் சிறந்த கால்பந்தாட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் பலோன் டியோர் (BALLON D’OR) விருதை ஏழு முறை வென்றுiள்ளான்…. ஐரோப்பாவின் தங்க ஷூவை (EUROPEAN GOLDEN SHOE) ஆறு முறை பெற்று விட்டான்.

இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல், தன் சொந்த நாடான அர்ஜென்டினாவிற்கு 2022 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பையையும் அண்மையில் பெற்றுத் தந்துள்ளான்.

அந்தப் பெருமைக்குரியவன் யார் தெரியுமா ? அவன் தான் லயோனல் மெஸ்ஸி (LIONEL MESSI).

ஆம் ! இல்லாததை எண்ணி ஏங்குவதை விட, இருப்பதை வைத்து பறப்பதைப் பிடித்த – நம் சம காலத்திய சாதனையாலன் மெஸ்ஸியைப் பின்பற்றி, நாமும் தடைகளை உடைப்போம்…. ! உயரம் பறப்போம் !!

 

– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker

Comments are closed.