fbpx
எது உண்மை? | Which is true?

Which is true
  • December 30, 2025

நம்முடைய PASSION (ஆர்வம்) எது ? என்ற குழப்பம், நம்மில் பலருக்கும் இருக்கிறது. இந்தக் குழப்பத்திற்கு தீர்வு காண ஒரு எளிய வழியைப் பார்க்கலாம்.

அண்மையில் ‘நீட்’ தேர்வில், இரண்டாவது முறையாகத் தோல்வியடைந்து, வாழ்க்கையே சூனியம் ஆகிவிட்டதாகக் கருதி, சோகத்தில் ஆழ்ந்திருந்த ஒரு மாணவனைச் சந்திக்க நேர்ந்தது.

“எதற்காக மருத்துவர் ஆகியே தீர வேண்டும் என்று விரும்புகிறாய் ?” என்று கேட்டேன்.

“மருத்துவர் ஆனால் நிறைய பணம் சம்பாதிக்கலாம்” என்றான்.

“தொழிலில் கூட நிறைய பணம் சம்பாதிக்கலாமே”

*மருத்துவர் என்றால் புகழும், பணமும் சேர்ந்து கிடைக்கும்”

“நல்ல தொழிலதிபர் ஆனாலும், வழக்கறிஞர் ஆனாலும், என்ஜீனியர் ஆனாலும் புகழும், பணமும் சேர்ந்து கிடைக்குமே”

“இருந்தாலும் மருத்துவர் என்றால் சமூக அந்தஸ்தும் கூட கிடைக்கும்”

“நீ எந்தத் துறையில் உச்சம் தொட்டாலும், சமூக அந்தஸ்து, பணம், புகழ் – இந்த மூன்றும் கிடைக்கும். மருத்துவராக இல்லாத பலரும் இதைப் பெற்றிருக்கிறார்கள் அல்லவா ?” என்றேன்.

அந்தப் பையன் சற்று யோசிக்க ஆரம்பித்தான்.

உண்மைதான் ! நாம் எதுவாக ஆக வேண்டும் என்ற உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், ‘ஏன் ?’ என்ற கேள்விகளை திரும்பத் திரும்ப நமக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும். அப்படிக் கேட்டால், நாம் நினைக்கிற ஒரு வழியில் மட்டுமல்லாமல், எந்த வழியில் சென்றாலும், நம் இலக்கை அடைய முடியும் என்பது புரியும்.

ஆம் ! இப்போது நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி, உங்கள் தற்போதைய விருப்பத்தை ஐந்து முறையாவது “ஏன் ?” என்ற கேள்விக்கு உள்ளாக்கி, உங்கள் உண்மையான விருப்பத்தைக் கண்டறிந்து, அதை அடைய பிற பாதைகளையும் அறிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் வெற்றிக்கான புதிய வாய்ப்புகள், உங்கள் கண்களுக்கு இனி தென்படலாம்.

 

– இராம்குமார் சிங்காரம், Tamil Motivational Speaker in chennai

Comments are closed.