fbpx
வெற்றி ரகசியம்! | Success Secret!

success secret
  • July 14, 2024

டெல்லி ரயில்வே ஸ்டேஷனில் வாடகை டாக்ஸி பிடித்தனர் இரண்டு தென்னிந்திய இளைஞர்கள். டாக்ஸி ஓட்டுநரோ வயதான ஒரு சர்தார்ஜி. அவரைப் பார்த்ததும் இளைஞர்களுக்குக் கிண்டல் செய்யும் எண்ணம் வந்தது.

 அவர்கள் கேட்ட, படித்த சர்தார்ஜிகளை கேலி செய்யும் ஜோக்குகள் நினைவுக்கு வந்தன. அவற்றைத் தங்கள் மொழியில் சொல்லிச் சிரித்துக் கொண்டே இருந்தனர்.

சர்தார்ஜிக்கு அவர்கள் பேசும் மொழி தெரிந்திருந்தாலும், ஒரு வார்த்தை கூடப் பதில் பேசவில்லை. சில மணி நேரத்துக்குப் பிறகு அவர்கள் இறங்கும் இடம் வந்தது.

மீட்டரைப் பார்த்துக் காசு கொடுத்ததும் அந்த சர்தார்ஜி, இளைஞர்களிடம் இரண்டு ஐந்து ரூபாய் நாணயங்களைக் கொடுத்தார்.

நாங்க உனக்கு டிப்ஸ் தரலைன்னு எங்களைக் கிண்டல் பண்றீயா..?” என்று எகிறினர் இளைஞர்கள்.

தம்பி, நீங்க ரெண்டு பேரும் பேசினதெல்லாம் எனக்குப் புரிஞ்சது. ஆனா, பதிலுக்கு உங்களை அசிங்கப்படுத்தறது என் நோக்கம் இல்லை. ஒரு சின்ன உபகாரம். என் வருமானத்திலே இருந்து இன்னொரு சர்தார்ஜி பிழைக்கணும்னு விரும்பறேன். இந்த அஞ்சு ரூபாய் காசை நீங்க பார்க்குற முதல் சர்தார்ஜி பிச்சைக்காரனுக்குப் போடுங்க. உங்களுக்குப் புண்ணியமாப் போகும்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் சர்தார்ஜி.

அந்த இரண்டு பேருக்கும் ஒன்றும் புரியவில்லை. 

 அவர்கள் அந்த நாணயங்களோடு செல்லும் இடங்களில் எல்லாம் பார்த்தார்கள். ஒரு சர்தார்ஜி பிச்சைக்காரனையும் பார்க்க முடியவில்லை.

அவர்கள் டெல்லியிலிருந்து கிளம்பும் நாளும் வந்தது. ரயில் நிலைய கார் ஸ்டேண்டில் அந்த சர்தார்ஜியை எதிர்பாராவிதமாகச் சந்தித்தனர்.

அந்த சர்தார்ஜி இளைஞர்களிடம் என்ன தம்பி! அந்த அஞ்சு ரூபாயை சர்தார்ஜிக்குப் பிச்சை போட்டுட்டீங்க இல்லையா? என்று கேட்டார்.

அதற்கு அவர்கள் “இல்லைங்க டெல்லி முழுக்க எந்த இடத்திலும், சர்தார்ஜி பிச்சைக்காரரையே எங்களால் பார்க்க முடியவில்லை” என்றனர்.

அந்த சர்தார்ஜி தன் திட்டம் பலித்ததில் குஷியாகி விட்டார். “அதான் தம்பி சர்தார்ஜிங்க! உலகம் முழுக்க எங்களைக் கிண்டல் செய்றாங்க! ஆனா நாங்க அதையெல்லாம் பொருட்படுத்தறதே இல்ல. எங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் உழைப்பு மட்டுந்தான். ரோட்டோரக் கடை வைப்போம், லாரி ஓட்டுவோம், மூட்டை தூக்குவோம், ஆனா பிச்சை மட்டும் எடுக்க மாட்டோம். அதனாலதான், டெல்லியில் ஒரு சர்தார்ஜி பிச்சைக்காரனையும் பார்க்க முடியலை!” என்றார்.

அந்த இரண்டு இளைஞர்களும் மன்னிப்பு கேட்டுவிட்டு, புறப்பட்டுச் சென்றனர்.

கடுமையான உழைப்பைத் திட்டமிட்டபடி கொடுத்தால், எவரது வார்த்தைகளைப் பற்றியும் கவலைப்படாமல் போய்க்கொண்டே
இருக்கலாம். முன்னேற்றம் நம் காலடியில் மண்டியிட்டு நிற்கும்.

சர்தார்ஜிகளிடம் உழைப்பும் புத்திசாலித்தனமும் என்றால், குஜராத்திகளிடம் நேரம் ஒரு முக்கியப் பண்பாக இருக்கிறது. காலை 9 மணிக்குக் கடை திறக்க வேண்டும் என்றால், ஆள் வருகிறார்களோ இல்லையோ கடையைத் திறந்து வைத்து விடுவார்கள். ஒரு மணிக்கு மணியடித்தாற்போல கடையைச் சாத்திவிட்டு சாப்பிடக் கிளம்பிவிடுவார்கள். மீண்டும் நான்கு மணிக்குத் துவங்கி, ஒன்பது மணி வரை கடை திறந்திருக்கும்.

இது ஒருவகை வியாபாரக் கட்டுப்பாடு. குறிப்பிட்ட நேரத்தில் கடை திறந்திருக்கும் என்பதை அப்பகுதி மக்களுக்குப் பதிவு செய்வதன் மூலம், அடுத்த சில மாதங்களில் அவரது வியாபாரம் சூடுபிடித்துவிடும். சிலரைப் போல, வியாபாரம் இருந்தால் கடையைத் திறந்துவைப்பது, இல்லையேல் மூடிவிடுவது என்ற குழப்பமான யுக்தி அவர்களிடம் கிடையாது. வியாபாரத்துக்கு என்று ஒரு ஒழுங்கும், நேர்மையும், வெளிப்படையான செயல்பாடுகளும் மிக முக்கியம். 

 

 

Comments are closed.