இது அடுத்து எழும் கேள்வி!
தொழில் தொடங்குவதற்கு, இடம் என்பது பெரும்பாலும் ஒரு தடையல்ல. பல்பொருள் அங்காடி, துணிக்கடை, இனிப்பு பலகாரக்கடை, ஓட்டல் போன்ற பொதுமக்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய சில்லறை அங்காடிகளுக்கு இந்த விதி பொருந்தாது.
புரோக்கர் தொழில், கம்ப்யூட்டர் சர்வீசிங், டேட்டா என்ட்ரி, இன்சூரன்ஸ் மார்க்கெட்டிங், கன்சல்ட்டிங் போன்ற சேவைத் தொழில்களுக்கு இடம் ஒரு பொருட்டல்ல. அது வீடாகவோ, கார் ஷெட்டாகவோ கூட இருக்கலாம்.
இந்தியாவின் மிகப்பெரிய கம்ப்யூட்டர்கள் விற்பனையாளரான ஹெச். சி. எல் நிறுவனத்தின் தொடங்குநர் ஷிவ் நாடார் தொடக்கத்தில் தம் வீட்டு கார் ஷெட்டில் தான் விற்பனையைத் தொடங்கினார் என்பது உலகறிந்த செய்தி.
உலகின் மிகப்பெரிய குக்கிகள் விற்பனை நிறுவனமான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த குக்கி மேன்(Cookie Man) நிறுவனத்தின் தொடங்குனர் கெவின் ஹிக்ஸ், முதன்முதலில் தன்னுடைய பாட்டி தயாரித்துக் கொடுத்த தின்பண்டங்களை வீடு வீடாகச் சென்று விற்று அந்த வணிகத்தைத் தொடங்கினார். எதிர்பாராத அளவிற்கு விற்பனை நடந்ததனால் ஊக்கம் பெற்று, 1958 ஆம் ஆண்டில் தம்முடைய முதல் விற்பனையையகத்தை மெல்போர்னில் மிகச் சிறிய இடத்தில் தொடங்கினார்.
சில்லரை விற்பனையில் வெற்றிகரமான உத்திகளோடு, குக்கிமேன் ஆஸ்திரேலியா முழுவதும் பரவி மக்களின் விருப்பத்தைக் கவ்விப்பிடித்தது. அதை தொடர்ந்து இந்தியா உட்பட பிற உலக நாடுகளிலும் கால்பதித்து இன்று உலக அளவில் குக்கிகள் விற்பனையில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
சென்னை, மும்பை, டெல்லி போன்ற மாநகரங்களில் அலுவலக இடமே கூட இல்லாமல் வீட்டில் அமர்ந்து கொண்டே லட்சக்கணக்கில் பணம் ஈட்டும் தரகு வர்த்தகர்கள் பலரை நீங்கள் பார்த்திருக்கலாம். வீட்டின் முன் பக்கத்து சிறிய அறை, ஒரு செல்போன், ஒரு மோட்டார் சைக்கிள் இந்த மூன்றை மட்டும் வைத்துக்கொண்டு படு சுறுசுறுப்பாக இயங்கி மாதந்தோறும் பலர் பணம் பார்க்கின்றனர்.
பங்குச் சந்தை, பண்டகச் சந்தை, ரியல் எஸ்டேட், நிதிச் சேவை போன்ற துறைகளில் இது போன்ற தொழில் வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. இதற்கு அடிப்படைத் தேவை சரளமான பேச்சும், வர்த்தகத் தொடர்புகளுமே. இவர்கள் புயல் அடித்தாலும், மழை பெய்தாலும், வெயில் அடித்தாலும் எல்லாவற்றையுமே பாசிட்டிவாக எடுத்துக் கொண்டு அவற்றை வைத்தும் காசு பார்ப்பதில் கில்லாடிகள். இதுபோன்ற விற்பனைக்கு கான்செப்ட் செல்லிங் (Concept Selling ) என்று பெயர்.
கண்ணில் தெரிகின்ற பொருளை விற்பது எளிது. ஆனால் கண்ணில் தெரியாத பொருட்களை, வெறும் பேச்சின் மூலம் கான்செப்டாக மட்டுமே சொல்லி விற்பது மிகவும் கடினம். ஆயுள் காப்பீடு, மியூச்சுவல் ஃபண்ட், சீட்டு வர்த்தகம், ரிசார்ட் விற்பனை போன்றவை இந்த ரகங்களாகும்.
பொருளை விற்பதற்கு, பொருள் தரமாக இருந்தால் போதும். அங்கே விற்பவரை விட விற்கப்படும் பொருளே விற்பனையைத் தீர்மானிப்பதில் முன்னிலை வகிக்கும். ஆனால் கான்செப்ட் செல்லிங்கிலோ விற்பனை செய்யப்படும் கான்செப்டை விட, அதை விற்கும் மனிதர் மிக முக்கியம். விற்பவர் மீது நம்பிக்கை இருந்தால்தான் மக்கள் அதனை வாங்குவர். எனவே தம் மீது நம்பிக்கை வரும் படி அவர்கள் பேசவேண்டும்.
புதிய தொழில் முனைவோர் தொழில் தொடங்குவதற்கு தொடக்கத்தில் இடமோ, இடத்தின் அளவோ ஒரு பொருட்டல்ல. ஆனால் நிறுவனம் வளர வேண்டுமானால் வீட்டை விட்டு வெளியில் வந்து தனியாக அலுவலகம் அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.