fbpx
தோல்வி பழகு ! | Get used to failure !

get used to failure
  • April 7, 2025

முதல் காதல் அளவு கடந்த பரவசத்தைக் கொடுக்கும் என்பது எவ்வளவு உண்மையோ, அதுபோல முதல் தோல்வியும், அளவு கடந்த அதிர்ச்சியைக் கொடுக்கும் என்பதும் உண்மை.

‘ரௌத்திரம் பழகு’ என்றான் பாரதி. இதன் அர்த்தம், ‘கோபப்படாதே’ என்பதல்ல….. ‘கோபத்தைக் கடந்து செல்’ என்பதுதான். ஆம் !

தோல்வியைப் பழகிக் கொண்டால், அது நமக்கு அதிர்ச்சியாக இராது.

எல்லா வெற்றி பெற்ற மனிதர்களும் ஒரு கட்டத்தில் தோல்வியடைந்து, அதற்கு தங்களைப் பழக்கிக் கொண்டு, அதைக் கடந்த பிறகே, வெற்றியைச் சுவைத்திருக்கிறார்கள்.

இன்றைக்கு நாம், மாபெரும் உலக வர்த்தக நாயகனாகப் பார்த்துக் கொண்டிருக்கிற பில் கேட்ஸ், தன்னுடைய முதல் நிறுவனத்தைத் தொடங்கிய போது பெரும் தோல்வியையே சந்தித்தார். ட்ராஃப்-ஓ-டேட்டா (TRAF-O-DATA) என்ற அந்நிறுவனத்தை தனது பங்குதாரர் பால் அலன் (PAUL ALLEN) உடன் இணைந்து அவர் தொடங்கினார்.

தரவுகளை ஒட்டுமொத்தமாகச் சேகரித்து, அவற்றை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் பணம் ஈட்டுவது தான் அந்த நிறுவனத்தின் நோக்கம். இன்றைக்கு பிக் டேட்டா (BIG DATA) என்று பரவலாக அறியப்படக்கூடிய தொழிலின் ஆரம்ப மாடல் அது.

தற்போது பெரிய வெற்றியைச் சந்தித்திருக்கக்கூடிய பிக் டேட்டா தொழில் அன்றைக்கு அவர் தொடங்கிய போது பரிதாபமான தோல்வியையே சந்தித்தது. இருப்பினும் பில்கேட்ஸ் தளர்ந்து விடவில்லை. அடுத்த நிறுவனமான மைக்ரோசாஃப்டை உருவாக்கினார். பிறகு தான் அவர் வெற்றி தொடங்கியது.

வால்ட் டிஸ்னியும், பத்திரிகையில் பணியாற்றியபோது கிரியேட்டிவ் திறமை இல்லை என்று காரணம் சொல்லப்பட்டு, விலக்கப்பட்டார்.

பிறகு, லாஃப் – ஒ – கிராம் பிலிம்ஸ் (LAUGH-O-GRAM FILMS) என்ற நிறுவனத்தைப் புதிதாகத் தொடங்கி அதற்கு முதலீட்டாளர்களிடமிருந்து 15,000 அமெரிக்க டாலரை முதலீடாகவும் பெற்று அனிமேஷன் சார்ந்த திரைப்படம் தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கினார். அதுவும் பெரிய தோல்வியையே சந்தித்தது. பிறகு திரைப்படங்களை வாங்கி விநியோகிக்கும் தொழிலில் இணைந்தார். அதுவும் தோல்வியைத் தழுவியது. ‘ராசி இல்லாத ராஜா’ என்ற பெயரெடுத்த பிறகுதான், வால்ட் டிஸ்னியின் வெற்றிப் பயணம் தொடங்கியது.

ஸ்டீவ் ஜாப்ஸ்-ன் கதை சற்று வேறு மாதிரியானது. தனது 21 ஆவது வயதில் அவர் தொடங்கிய ஆப்பிள் நிறுவனம் மிகப்பெரிய வெற்றியைச் சந்தித்தது. ஆனால் அதே நிறுவனத்தில் இருந்து தனது 30 ஆவது வயதில் – அவரால் நிறுவனத்தை இன்னும் வேகமாக முன்னெடுத்துச் செல்ல இயலவில்லை என்று காரணம் காட்டி நீக்கப்பட்டார். பிறகு வெளியில் வந்து நெக்ஸ்ட் (NeXT) என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார். காலப்போக்கில் அதையும் ஆப்பிள் நிறுவனமே வாங்கிக் கொண்டது. மீண்டும் தனது 42 ஆவது வயதில் ஆப்பிள் நிறுவனத்தில் இணைந்து அந்நிறுவனத்தின் வர்த்தக உத்திகளை மாற்றி அதை உலகின் நம்பர் ஒன் நிறுவனமாக உயர்த்திக் காட்டினார்.

ஆம் நண்பர்களே ! தோல்வி சொல்வது என்ன தெரியுமா ?

நீ முயற்சியை நிறுத்தி விடு… முடங்கி விடு…. என்பது அல்ல. இன்னும் கொஞ்சம் கூடுதலாக முயற்சி செய் என்பதுதான்.

பந்தயத்தில் ஓடுகிற குதிரையை ஜாக்கி அடிமேல் அடி அடிக்கிறான் என்றால், அதை வேகமாக ஓடச் செய்வதற்கு தானே தவிர, அதை ஓடாதே என்று முடக்குவதற்கு அல்ல…. நம் வாழ்க்கையும் அதுபோலத் தான்…ஒவ்வொரு அடியும் நமக்கு விழுகிறபோது, அது நம்மை வேகமாக ஓடச் சொல்கிறது என்று புரிந்து கொண்டால், நம்முடைய சக்சஸ் மீட்டரும் வேகமாக ஓடத் தொடங்கும்.

 

– இராம்குமார் சிங்காரம், Best Motivational Speaker in Tamil Nadu

Comments are closed.