இரண்டு துப்பறியும் நிபுணர்கள் காட்டில் இருந்தபடி, வானிலை ஆய்வில் ஈடுபட்டிருந்தார்கள். காலையில் இருந்து காட்டில் அலைந்த களைப்பில் டென்ட் அடித்துத் தூங்கிக் கொண்டிருந்தனர் இருவரும்.
திடீரென, அசந்து தூங்கிக் கொண்டிருந்த ஜூனியரை, சீனியர் தட்டி எழுப்பினார்.
“பையா.. இப்போ வானத்தைப் பார்த்தா உனக்கு என்ன தோணுது..?”
கண்ணைத் துடைத்து, கொட்டாவி விட்ட ஜூனியர் சொன்னார்… “பாஸ்! எத்தனை அற்புதமா நட்சத்திரங்களும், கிரகங்களும் வானத்திலே இருக்கு பார்த்தீங்களா? அதோ, அது செவ்வாய் கிரகம்… இந்தப் பக்கம் இருக்கிறது வியாழன். இங்கே பாருங்க பளிச்சுனு.. அது சனிக் கிரகம். நட்சத்திர அமைப்பை வெச்சு, இப்ப ராத்திரி ஒரு மணி இருக்கும்னு அடிச்சுச் சொல்வேன்..” என்று ஜூனியர் அடுக்கிக்கொண்டே போக, சீறினார், சீனியர்.
“முட்டாளே.. நாம தூங்கிட்டு இருக்கும்போது யாரோ நம்மோட கூடாரத்தைக் கிளப்பிக்கிட்டுப் போயிட்டாங்க… அது உன் மரமண்டைக்குப் புரியலியா..?”
சும்மா ஜோக் மாதிரி இருந்தாலும், இதற்குள் இருக்கிறது முதலாளிகளுக்குத் தேவையான ஒரு விஷயம். பணியாட்களை நியமிக்கும்போது, அவர்களின் திறமை என்ன… சொல்லிக் கொடுப்பதைக் கச்சிதமாக கைகொள்ளும் பக்குவம் உள்ளவர்களா… ஆள் இல்லாத போது, அக்குறை தெரியாமல் நிறுவனத்தைத் திறம்பட நடத்தும் தகுதி கொண்டவர்களா… தனிப்பட்ட பிரச்னைகளை அலுவலகத்தில் எதிரொலித்து அது நிர்வாகத்தைப் பாதிக்குமா… என்றெல்லாம் பல்வேறு கோணங்களிலும் அலசி ஆராய்ந்து ஆட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அவரைச் சார்ந்து இருப்பவர்கள் யார்… குடும்பச்சூழல் எப்படி.. உற்சாகமான மனநிலையில் தினமும் அலுவலகம் வர வாய்ப்புள்ளவர் யார்.? என்ற பட்டியலையும் நேர்முகத் தேர்வின்போது, போட்டு வாங்கிவிட வேண்டும். பல்வேறு பிரச்னைகளையும் எக்ஸ்ட்ரா லக்கேஜ் போல முதுகில் சுமந்து திரியும் ஒருவரை வேலைக்கு வைத்துவிட்டு, அடிக்கடி லீவு போடுகிறார்.. வேலையில் கவனம் இல்லை. பொறுப்பாக நடந்து கொள்ள மாட்டேன் என்கிறார் என்று புலம்புவதில் அர்த்தம் இல்லை
ஒரு நிறுவனத்தை நடத்துவதே அதை முன்தள்ளுவதற்குத் தேவையான ஆட்களை நியமிப்பதில் தான் இருக்கிறது. இப்படிச் சுமையோடு கூடியவரை நாம் சுமந்து கொண்டிருப்பது எப்படி சரியாக இருக்கும்..?
பணியாட்கள் எப்போதுமே, மரத்தை வெட்டி வா! என்றால், அதனை அடுக்கிக் கட்டிக் கொண்டு வந்து நிற்பவராக இருக்க வேண்டும். அந்த மனநிலையில் உள்ள நபர்களைத் தேடிப் பிடித்துப் பணியமர்த்துவதுதான் சாமர்த்தியம். ‘இது என்னால் முடியும்… அது என்னால் முடியாது! என்று தனக்குத்தானே எல்லை வகுத்துக் கொண்டிருப்பவர்கள் எப்போதுமே அந்த எல்லைக்குள்ளேயே முடங்கிப் போவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இந்த நிஜக்கதையையும் படியுங்கள்.
வகுப்பு முடிய சற்று நேரம் இருந்தது.
“உலகின் சிறந்த கணித மேதைகளால் தீர்க்க முடியாத இரண்டு கணக்குகளை கரும்பலகையில் எழுதியுள்ளேன். இந்தக் கணக்குகள் இரண்டும் இன்றும் தீர்க்கமுடியாத புரியாத புதிராகவே உள்ளது” என்றார், ஆசிரியர்.
ஆசிரியர் எழுதும்போது அந்த மாணவன் வகுப்பில் இருக்கவில்லை. சற்று தாமதமாய் அந்த மாணவன் வகுப்பிற்கு வந்தான். ஆசிரியர் அவனது தாமதத்தை உணர்த்த நினைத்து, இந்தக் கணக்கை நீ விடுவிக்க வேண்டும்!” என்றார். சற்று நேரம் சிந்தித்து, வழிமுறைகளை எழுதி கணக்குக்கான விடையை எழுதினான் அவன். ஆசிரியர் உட்பட பாடசாலையே திகைத்து நின்றது. அந்த சம்பவத்தாலேயே உலகப் புகழ்பெற்றான் அவன். அந்த மாணவன்தான் ஜோர்ஜ் பேர்நாட் டான்சிக்
அந்த சம்பவத்துக்கு அவர் தந்த விளக்கம், “யாராலும் முடியாது என்ற கணக்கை உன்னால் மட்டும் எப்படி விடுவிக்க முடிந்தது.?”
“அது யாராலும் முடியாது என்று எனக்குத் தெரியாது. எனவே, என்னால் முடிந்தது.”