fbpx
கடன் வாங்கித் தொழில் தொடங்கலாமா ? | Can I start a business with a loan?

Motivational Speaker in Tamil
  • December 3, 2021

தொழில் நடத்துவோரில் 90 விழுக்காட்டினர் கடன் வாங்கியே தொழிலில் முதலீடு செய்கின்றனர். எனவே இன்றைய போட்டி மிகுந்த சூழலில் கடனே வாங்காமல் தொழில் நடத்துவது என்பது சாத்தியம் இல்லாத செயல். கடன் வாங்குகின்ற தொகையின் அளவும், செலுத்துகிற வட்டியின் விகிதம் தான் தொழில் முனைவோரிடையே வேறுபடுகிறது. 

நீங்கள கடன் வாங்குகிற அளவானது உங்கள் தொழிலின் மீது நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையைப் பொறுத்தது. உங்கள் குதிரை, பந்தயத்தில் வெற்றி பெறும் என்று நீங்கள் முழுமையாக நம்பினால் நீங்கள் அதிகத் தொகையைக் கடனாக வாங்கலாம். பொதுவாக ஒரு ரூபாய் முதலீடு செய்தால் அதற்கு இரண்டு ரூபாய் வரை கடன் வாங்கலாம் என்பது பொருளாதாரத் தியரி. 

கடன் வாங்காமல் தொழில் நடத்துவதும் ஒரளவு சாத்தியம் தான். ஆனால், அந்நிறுவனத்தின் வளர்ச்சி சற்று மெதுவாகவே இருக்கும். கடன் வாங்குவது என்று தீர்மானத்து விட்டால் மாதந்தோறும் ஒழுங்காக வட்டியைச் செலுத்துவதிலும், கடனைத் திரும்பச் செலுத்துவதிலும் ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். நீங்கள் எவ்வளவு ஒழுங்காக பணத்தைத் திரும்பச் செலுத்துகிறீர்களோ அதைப் பொறுத்தே உங்களுக்கு மறுமுறை கடன் கிடைக்கும். 

கடன் வாங்காமல் பணத்தைப் புரட்டவும் வழி உண்டு. சீட்டுத் திட்டங்கள் இதற்கு ஓரளவு கை கொடுக்கும். நல்ல நிதி நிறுவனச் சீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்தால், தேவையின் போது பணத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். 

சீட்டுத் தொகையில் இருந்து பணத்தை எடுகின்றபோது அதற்கு வட்டிச் செலவு என்று எதுவும் தனியாகக் கிடையாது. ஆனாலும், சீட்டுத் திட்டங்களின் மூலம் நீங்கள் பணம் எடுப்பதை விட 15 முதல் 20 விழுக்காடு வரை அதிகப் பணத்தைத் திரும்பச் செலுத்த வேண்டியிருக்கும். அதாவது, உங்கள் பணத்திற்கு 15 முதல் 20 விழுக்காடு வரை வட்டி கட்டுவதற்கு இது சமம். 

சரி! ஒரு தொழிலை நடத்துவதற்கு பொதுவாக எவ்வளவு பணம் கையிருப்பாகத் தேவைப்படும்? உற்பத்தித் தொழில்களுக்கு மூன்று மாதச் செலவுகளுக்குத் தேவைப்படும் பணமும், சேவைத் தொழில்களுக்கு இரண்டு மாதச் செலவுகளுக்குத் தேவைப்படும் பணமும் எப்போதும் கையிருப்பாக வேண்டியிருக்கும். 

இதற்கு விதிவிலக்காக சில தொழில்களும் உண்டு. எடுத்துக்காட்டாக வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வருமானம் தரக் கூடிய பள்ளிக்கூட நோட்டுப் புத்தகங்கள், பட்டாசுத் தொழிற்சாலைகள் விழாக் காலங்களை நம்பியாருக்கும் துணிக் கடைகள் போன்றவற்றுக்கு கூடுதலாக நடைமுறை மூலதனம் தேவைபடும். 

அடுத்ததாக கச்சாப்பொருளைக் கொள்முதல் செய்யும் போது பணம் கொடுத்துக் கொள்முதல் செய்வது நல்லதா அல்லது கடனுக்குக் கொள்முதல் செய்வது ஏற்றதா? என்ற கேள்வி எழலாம். 

கையில் நிறையப் பணம் இருந்தால் பணம் கொடுத்துக் கொள்முதல் செய்வதே சாலச்சிறந்தது. பணம் கொடுத்துக் கொள்முதல் செய்கிறபோது குறைவான விலையில் நாம் பொருட்களைக் கொள்முதல் செய்ய முடியும். 

முதலீடு செய்வதற்கு கையில் பணம் இல்லாத போது 30 நாட்கள்,60 நாட்கள், 90 நாட்கள் என்று எவ்வளவு அதிகக் காலத்திற்கு கடன் கிடைக்கிறதோ அந்த காலகட்டம் வரை விற்பனையாளரிடம் கடனுக்குப் பொருளைக் கொள்முதல் செய்யலாம் 

ஆனால் இந்தக் காலகட்டத்திற்குள் கச்சாப்பொருளை வாங்கி அவற்றை மதிப்புக் கூட்டி விற்பனை செய்து, பணத்தைப் புரட்டி கொள்முதல் செய்தவரிடம் ஒப்படைத்து விட வேண்டும். இந்த சுழற்சியில் ஏதேனும் தாமதம் நிகழ்ந்தால் பணத்தைக் கடன் வாங்கியேனும் அவருக்குக் கொடுத்தாக வேண்டும். 

ஒரு தொழில் முனைவரின் கவனம் என்பது பணத்தை அதிக அளவில் சுழற்றுவதாக இருக்க வேண்டும். அதாவது, எந்தப் பொருள் அதிகம் விற்பனை ஆகிறதோ, எது வேகமாக விற்கப்படுகிறதோ அதனைக் கண்டறிந்து விற்கவேண்டும். கொள்முதல் செய்த பொருட்கள் விற்பனையாகவில்லை என்றால் அவற்றை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கண்டறிந்து விற்பதற்கு ஏதேனும் உத்திகளைக் கையாள  வேண்டும். அல்லது அவற்றை அசல் விலைக்கேனும் விற்று விட வேண்டும் 

லாபம் தராத பணம், பொருள் வடிவத்தில் முடங்கி கிடப்பதில் அர்த்தமில்லை. பொதுவாக பொருளாதார வல்லுநர்களின் கூற்றுப்படி ஆண்டுக்கு நான்கு முறையேனும் உங்கள் மூலதனம் சுழன்று உங்களுக்கு லாபத்தை ஈட்டித் தர வேண்டும். அப்படிச் செய்யவில்லையென்றால் தள்ளுபடி விலையிலேனும் பொருள்களை விற்று விடுவது சிறந்தது. 

—– 

  இராம்குமார் சிங்காரம், Best Motivational Speaker in Tamil

Comments are closed.