அமெரிக்க வெள்ளை மாளிகையின் மேற்கூரையில் பெரிய ஓட்டை விழுந்து விட்டது. அதை சரி பண்ண ஜப்பான், சீனா, இலங்கை ஆகிய 3 நாடுகளிடம் இருந்து அரசியல்வாதிகள் வரவழைக்கப் பட்டிருந்தார்கள்.
ஜப்பான் அரசியல்வாதிகள் சேதத்தை டேப் வைத்து அளந்து விட்டு சில பல கணக்குகள் எல்லாம் போட்டு 9 லட்சம் ரூபாய் செலவாகும்ன்னு சொன்னாங்க (ரூ4 லட்சம் பொருட்களுக்கு, ரூ4 லட்சம் ஊழியர்களுக்கு, ரூ.1 லட்சம் லாபம்).
சீன அரசியல்வாதிகளும் அதேமாதிரி அளந்து பார்த்துக் கணக்குப் போட்டு ரூ.7 லட்சம் செலவாகும்ன்னு சொன்னாங்க. (ரூ. 3 லட்சம் மெட்டீரியல்களுக்கு, ரூ.3 லட்சம் டீமுக்கு, ரூ.1 லட்சம் லாபம்).
இலங்கை அரசியல்வாதிகள் வந்தாங்க. ஒண்ணும் அளந்தும் பார்க்கலை. கணக்கும் போடலை. அமெரிக்க உயர் அதிகாரியை மேலயும் கீழயும் பாத்துட்டு, “நீங்க மட்டும் இப்படி வாங்க!”ன்னு தனியாக் கூப்பிட்டு ஏதோ ரகசியமாய் பேசினாங்க. “ரூ.28 லட்சம் செலவாகும்”ன்னு சொன்னாங்க. வேலை அவங்களுக்கே சாங்ஷன் பண்ணிட்டார் அமெரிக்க அதிகாரி.
அமெரிக்க அதிகாரிகிட்டே அவங்க டீம் ஆட்கள் கேட்டாங்க. “அளந்தும் பாக்கல… கணக்கும் போடல… ரூ.28 லட்சம்-ன்னு சொன்னாங்க. நீங்களும் ஒப்புக்கிட்டீங்களே”ன்னு கேட்டாங்க. “அதுவா.. இலங்கை ஆட்கள் ரூ.10 லட்சம் எங்களுக்கு, ரூ.10 லட்சம் உங்களுக்கு, வேலைக்குச் சீனாக்காரங்களைப் போட்ருவோம்ன்னு சொன்னாங்க. டீல் நல்லா இருந்ததால அவங்களுக்கே வேலையைக் கொடுத்துட்டேன்”னாராம்.
அரசியலை விட்டுப் பார்த்தால், இதிலும் இருக்கிறது, பிசினஸ் ட்ரிக்ஸ், குறைந்த ஊதியத்துக்குப் பணியாற்றத் துடிக்கும் இளைஞர்களை இந்தியாவில் இருந்தும், சீனாவில் இருந்தும் பயன்படுத்திக் கொள்கிறது அமெரிக்கா. இதற்கு ‘அவுட்சோர்சிங்‘ என்று பெயர்.
இதை உங்கள் வியாபாரத்தில் நீங்கள் பயன்படுத்த முடியும். அப்படிச் செய்தால் நீங்கள் டீம் லீடர். எப்படி? ஒற்றை ஒற்றைப் பணியாக நீங்கள் செய்துகொண்டே இருந்தால், லாபம் ஒன்றொன்றாகத்தான் வரும். இதையே துணை நிறுவனங்களுக்கு வேலையைப் பிரித்து அளித்தால், லாபம் பாதி வந்தாலும், பல இடங்களில் இருந்து வரும். பலருக்கு வேலை தரும் நிறுவனமாக உங்கள் நிறுவனம் தன்னால் உயரும்.
கீழே பத்துப் பேர் இருந்தால்தான் நீங்கள் தலைவர். உங்களால் பலர் பிழைத்தால் தான் முதலாளி. வேலையைப் பகிர்ந்தால், லாபமும் குறையுமே என்று எண்ணாமல், உயர்ந்த சிந்தனை, இலக்கு, லட்சியத்தோடு முன்னேறுங்கள்.
டாடா நிறுவனத் தலைவர் ரத்தன் டாடாவின் வெற்றிக்குக் காரணமாகச் சொல்லப்படும் முக்கிய குணம் இந்தத் தலைமைப் பண்புதான். புதிதாக ஒரு யூனிட் அல்லது தொழில் தொடங்கினால், அதற்கு சிறப்பான தகுதி கொண்ட ஒருவரை நிர்வாகியாக நியமிப்பார் ரத்தன். அவருடனே ஒரு மாத காலம் தொடர்ந்து பயணிப்பார். ஆலோசனை, அறிவுரை, வழிகாட்டலில் இருப்பார். தொழில் நெளிவு, சுழிவுகளைக் கற்றுத் தருவார்.
பிரச்னைகளைத் தானே முன்னின்று சமாளித்துக் காட்டி, அதன்படி நடக்க வலியுறுத்துவார். குறிப்பிட்ட தொழிலின் வளர்ச்சிக்காக அந்த நிர்வாகி தவிர, கீழிருக்கும் பணியாளர் யாருடனும் அவர் தினசரித் தொடர்பில் இருக்க மாட்டார்.
நம்பிக்கையான ஒரு தலைமையைத் தயார்படுத்தியபின், அவரைத் தொடர்ந்து சுதந்திரமாக செயல்பட அனுமதி அளித்துவிட்டு, வேறொரு புதிய தொழில் நோக்கிப் பயணிப்பார். அங்கும் இதேபோல தொடர் பயிற்சி, தயாரிப்பு. இப்படித்தான், பல்வேறு தொழில்களில் காலடி பதித்து அனைத்திலும் வெற்றிகண்டார் ரத்தன் டாடா.
ஒரு முதலாளி என்பவர் எல்லா வேலையையும் தானே செய்து கொண்டிருக்கக்கூடாது. பணிகளை வெளியே கொடுத்து வாங்க முன்வர வேண்டும். நம்பகமான ஆளைத் தேடிப் பிடித்து அவரிடம் பொறுப்பை ஒப்படைத்து, அதைக் கண்காணித்தாலே போதும். தலைவராகி விடலாம்.