வெற்றிக்கு முக்கியமானதொரு தேவை, மன வலிமை (WILL POWER).
மாவீரன் அலெக்சாண்டர் உலகம் முழுவதையும் வெற்றி கொண்டான் என்றால், அதற்கு காரணம், அவனிடம் இருந்த மனவலிமை தான். விராட் கோலியும், ரோகித் சர்மாவும் எதிரி நாட்டு வீரர்களின் பந்தைத் துவம்சம் செய்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் அவர்களிடம் இருக்கும் மனவலிமை தான்.
என்னதான் திறமை இருந்தாலும், பல இடர்கள் அடுத்தடுத்து வருகிற போது, அவற்றைக் கடந்து வெற்றிக் கொடியை நாட்டுவதற்கு, மனவலிமை அவசியம் தேவை.
அந்த மன வலிமையை நமக்குள் வளர்த்துக் கொள்ளவும், அதைத் தக்க வைக்கவும் இதோ… ஐந்து உத்திகள் !
1. படமாகப் பாருங்கள் (VISUALIZE) :
நீங்கள் எதை நோக்கி இயங்கிக் கொண்டிருக்கிறீர்களோ, அந்த இலக்கை நோக்கிப் பயணிக்கிற போது, நிறைய தடைக்கற்கள் தோன்றக்கூடும். ஆனால் அதை எல்லாம் மீறி இலக்கை அடைய வேண்டும் என்றால் மனதிற்குள் இலக்கை அடைந்த படம் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். இலக்கை அடைவது சாத்தியம் தான் என்று மனம் நம்ப வேண்டும். அப்போதுதான் மனவலிமையோடு தொடர்ந்து பயணிக்க முடியும்.
2. சுய நம்பிக்கை (SELF BELIEF):
‘என்னால் முடியும்’ என்கிற நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும். ‘என்னிடம் பணம் இல்லையே’, ‘என்னிடம் ஆயுதம் இல்லையே’, ‘என்னிடம் களப்பணியாளர்கள் இல்லையே’ என்கிற விஷயங்களை எல்லாம் தாண்டி, ‘எது வரினும் நான் வெற்றி பெறுவேன்’ என்கிற தன்னம்பிக்கை நமக்குள் இருக்க வேண்டும். சுய பச்சாதாபத்தையும், புலம்பலையும் துடைத்தெறிந்து விட்டு தன்னம்பிக்கையோடு களம் காண வேண்டும்.
3. சுய கட்டுப்பாடு (SELF CONTROL) :
வாழ்க்கையில் உயரே செல்லச் செல்ல, பல்வேறு வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கும். பல்வேறு கவனச் சிதறல்களும் தோன்றிய வண்ணம் இருக்கும். இவற்றையெல்லாம் மீறி மனதை ஒருமுகப்படுத்தி பயணிக்க சுய கட்டுப்பாடு மிக அவசியம். நாளொன்றுக்கு 16 மணி நேர உழைப்பு என்பது சுய கட்டுப்பாட்டின் உச்சம். வெற்றியாளர்கள் அனைவரும் 16 மணி நேர உழைப்பின் மூலமே சாதித்திருக்கிறார்கள்.
4. உள் உரையாடல் (SELF TALK) :
நாம் பிறரிடம் பேசுவதை விட நமக்குள் நாமே அதிகம் பேசிக் கொள்கிறோம். அப்படி பேசுகிற பேச்சு, பாசிட்டிவாக இருக்க வேண்டும். ‘என்னால் முடியும். இது சாத்தியம் தான். பலரும் சாதித்திருக்கிறார்கள். நானும் சாதிப்பேன்’ என்பன போன்ற பாசிட்டிவான பேச்சுக்களே வெற்றியை நோக்கி உங்களை அழைத்துச் செல்லும். புரிந்து கொள்ளுங்கள்… உங்களுக்கு நீங்கள் தான் கிரியா ஊக்கி !
5. பாராட்டு (APPRECIATE) :
ஒவ்வொரு சிறு இலக்கையும் நீங்கள் அடைந்து விட்ட பிறகு, உங்களை நீங்களே தட்டிக் கொடுக்க வேண்டியது அவசியம். அப்படி செய்தால் தான் மனம், மகிழ்ந்து அடுத்தடுத்த இலக்கை நோக்கி உற்சாகத்தோடு பயணிக்கும். உங்கள் மனதிற்கு எது பிடிக்கிறதோ, அந்த விஷயத்தை செய்து மனதிற்கு வெற்றிக்கான உற்சாகத்தைக் கொடுங்கள். தட்டிக் கொடுக்கிற குதிரை தான் வேகமாக ஓடும் என்பதை மறந்து விடாதீர்கள்.
மனவலிமை அவ்வப்போது வருவது போதாது. எப்போதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்றால், நீங்கள் இலக்கை அடைகிற தீவிரத்திலேயே இருக்க வேண்டியது அவசியம்.
– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker in chennai