fbpx
அதிக முறை டக் அவுட் ஆனா கிரிக்கெட் வீரர் ! Most Ducks Ever!

most ducks ever
  • March 23, 2025

வாழ்க்கை என்பது ஒரு ரப்பர் பந்து மாதிரி. கீழே விழும் போதெல்லாம் நாம் எழவேண்டும் என்பதே அந்த பந்து நமக்குக் கற்றுக் கொடுக்கும் பாடம்.

நமக்கும் வெற்றியாளர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா ? நாம் சில தோல்விகளுக்குப் பிறகு அந்த முயற்சியைக் கைவிட்டு விடுகிறோம். ஆனால் வெற்றியாளர்கள், தோல்விகள் தொடர்ந்தாலும், மனம் தளராமல் முயன்று கொண்டே இருக்கிறார்கள்.

மூன்றில் இரண்டு காரியங்கள், தோல்வியைத்தான் தழுவும் என்பது எல்லோருக்கும் பொதுவான விதி. இது புரியாமல் நாம் முதலில் ஏற்படும் சில தோல்விகளிலேயே, களத்தை விட்டு வெளியேறி விடுகிறோம். இந்த உண்மை நிலை தெரிந்ததால் அவர்கள் தொடர்ந்து முயற்சிக்கிறார்கள். அதனால் வெற்றியடைகிறார்கள்.

இந்தியாவிலேயே ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக முறை ‘டக் அவுட்’ (பூஜ்ஜியம் ரன்னில் ஆட்டம் இழந்தவர்) ஆன வீரர் யார் தெரியுமா? சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்.. உலகின் மிக அதிக சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கர் தான். 20 முறை டக் அவுட்டில் களத்தை விட்டு வெளியேறி இருக்கிறார். அவர் மட்டுமல்ல… மிகச் சிறந்த வீரர்களான சௌரவ் கங்குலி 16 முறையும், விராட் கோஹ்லி 15 முறையும் டக் அவுட்டாகி இருக்கிறார்கள். கோடிக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் டக் அவுட்டில் வெளியேறினாலும் அதற்காகவெல்லாம் தளர்ந்து விடாமல் தொடர்ந்து முயற்சித்ததால், சாதனை படைத்திருக்கிறார்கள்.

உலகின் நம்பர் ஒன் பேட்மின்டன் வீராங்கனையாக இருந்த இந்தியாவின் சாய்னா நேவால் தான் சர்வதேச அளவில் விளையாடிய 792 ஆட்டங்களில், 237-இல் தோல்வியைத் தழுவியவர் என்பதை மறந்து விடாதீர்கள்.

உலகின் மிகப் பெரிய பணக்காரர்களாகிய அம்பானியும், அதானியும், டாடாவும், பிர்லாவும் தொழிலில் நஷ்டம் அடையவே இல்லை என்றா எண்ணுகிறீர்களா ? இல்லை… அவர்கள் தொடங்கிய பல தொழில்கள் அதிக நஷ்டத்தைச் சந்தித்திருக்கின்றன. அவற்றை மீறியும் அவர்கள் சாதித்து இருக்கிறார்கள்

ஒவ்வொரு தோல்வியும் நமக்கு சொல்வது என்ன தெரியுமா? நாம் ஆட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பதல்ல. இன்னும் கூடுதலாக முயற்சிக்க வேண்டும் என்பதுதான்.

– இராம்குமார் சிங்காரம், Motivational speaker in tamil nadu

Comments are closed.