நான் ஒரு முறை, சென்னையில் உள்ள தனியார் மனநல காப்பகத்தின் மருத்துவரை, மரியாதை நிமித்தமாக சந்திக்கச் சென்றிருந்தேன்.
அந்த மருத்துவர், காப்பகத்தை சுற்றிக் காண்பிக்க என்னை அழைத்துச் சென்றார்.
அப்போது நான் அமைதியாக இருந்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் அவரிடம், “நீங்கள் எப்படி இந்த நோயாளிகள் குணமடைந்து விட்டார்கள் என்று கண்டுபிடிப்பீர்கள் ?” என்று கேட்டேன்.
அவரும், “நாங்கள் ஒரு தண்ணீர் தொட்டியில் தண்ணீரை நிரப்பி விடுவோம். நோயாளியிடம் கரண்டி, குவளை, வாளி ஆகிய மூன்றையும் கொடுத்து தொட்டித் தண்ணீரை காலி செய்யச் சொல்வோம்” என்றார்.
அப்போதாவது நான் அமைதியாக இருந்திருக்க வேண்டும். ஆனாலும் அதிமேதாவித்தனமாக, “ஓ! எனக்குப் புரிகிறது… நோயாளி, இருப்பதிலேயே பெரிய கொள்கலனான வாளியை உபயோகித்தால், அவர் குணமடைந்து விட்டார் என்று முடிவு செய்வீர்கள்….. அப்படித்தானே ?” என்றேன்.
“இல்லை ! தொட்டியில் தண்ணீர் வெளியேற்றும் ஓட்டையில் உள்ள கட்டையை எடுத்து தண்ணீரை காலி செய்பவர் தான் குணமடைந்தவர் என்று கருதுவோம்” என்ற மருத்துவர், “சரி… ! இந்தக் காப்பகத்தில் ஒன்றாம் எண் அறை காலியாக உள்ளது. அதை உங்களுக்கு ஒதுக்கட்டுமா ?” என்றாரே பார்க்கலாம்.
‘தப்பித்தோம்… பிழைத்தோம்…’ என அந்த இடத்தைக் காலி செய்தேன்.
அதாவது, நமக்கு விஷயம் தெரியாத பல நேரங்களில், மௌனமே நம்மைப் பாதுகாக்கக் கூடிய சிறந்த ஆயுதம் ஆகும். அப்போதெல்லாம் நாம் மௌனமாக இருந்து விட்டாலே, நம்முடைய அறிவின்மை வெளிச்சத்திற்கு வராது.
மேலும், ‘அறிவு ஜீவிகள் எப்போதும் தன்னடக்கத்தோடு,மௌனமாகவே இருப்பார்கள்’ என்ற பொது சிந்தனையும் நமக்கு உதவும்.
சாதுரியமாகப் பேசுவது வெற்றிக்கு எவ்வளவு அவசியமோ, அதுபோல் மௌனமாக இருப்பதும் அவ்வளவு அவசியமே !
ஆம் ! பல சமயங்களில், மௌனம் சம்மதம் மட்டுமல்ல… மௌனமே வெற்றிக்கு வித்தும் கூட !
– இராம்குமார் சிங்காரம், Tamil Motivational Speaker