உங்கள் வீட்டுச் செல்ல குழந்தைக்கு பேச்சு வரவில்லையா ?கையில் கிடைப்பதை எல்லாம் பிறர் மீது எறிகிற குணம் அதற்கு இருக்கிறதா ? தான் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் எதையாவது செய்து கொண்டிருக்கிறதா ?
கவலை வேண்டாம்.
இப்படித்தான் ஜெர்மனியில் பிறந்த ஒரு குழந்தைக்கு, முதல் இரண்டு ஆண்டுகள் சரியாக பேச்சே வரவில்லை. மிகத் தாமதமாகப் பேசத் தொடங்கினாலும் கையில் கிடைத்ததை எல்லாம் எறிந்து கோபத்தை வெளிப்படுத்துகிற பிடிவாத குணமும் அதனுள் இருந்தது.
பள்ளிக்கூடத்திற்கு அதை அனுப்பிய போது, டீச்சர் நடத்திய பாடத்தை எல்லாம் கேள்வி கேட்டது. பகல் கனவு கண்டது. பிற குழந்தைகளோடு சேர்ந்து பழகவில்லை. முரட்டு பிடிவாதம் உள்ள குழந்தையாக அது வளர்ந்தது.
இந்தக் குழந்தையை வகுப்பறையில் வைத்துக் கொள்ள முடியாது என்று ஆசிரியை நிர்வாகத்திடம் புகார் அளித்தார்.
திடீரென ஒரு நாள் அந்தக் குழந்தையின் தந்தை, அதன் கையில், ஒரு காம்பஸ் கருவியைக் கொடுத்தார். அந்தக் கருவி எப்படி வேலை செய்கிறது என்று திரும்பத் திரும்ப
பரிசோதித்து பார்த்தது. அதற்கு ஆர்வம் வரத் தொடங்கியது. பிறகு நடந்ததெல்லாம் வரலாறு.
ஆம் ! அந்தக் குழந்தையின் நடத்தையில் மிகப் பெரிய மாற்றம் தெரிந்தது. பார்த்ததை எல்லாம் படிக்கத் தொடங்கியது.
கணிதத்திலும், விஞ்ஞானத்திலும் மிகச் சிறப்பாக தேர்ச்சி பெற்றது.
பிற்பாடு கல்லூரியில் சேர்ந்து விஞ்ஞான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு மிகப் பெரிய விஞ்ஞானியாக மலர்ந்தது. 1921 ஆம் ஆண்டு பௌதீகத்தில் நோபல் பரிசைத் தட்டிச் சென்றது.
அந்த குழந்தை தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
யாருக்குத் தெரியும் ? பேசத் தாமதிக்கும் உங்கள் குழந்தைக்குள்ளும், அடங்க மறுக்கும் உங்கள் குழந்தைக்குள்ளும் ஒரு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இருக்கக்கூடும். அதன் ஆர்வத்தைத் தூண்டுகிற வகையில் பொறுமையாகப் பயிற்சி கொடுங்கள். நல்லது நடக்கும் என்று நம்புவோம்.
சக்சஸ் என்பதே நம்பிக்கையில் இருந்து தானே வருகிறது.
– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker in tamil nadu