“என்னென்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என்கிற பட்டியலோடு, உங்கள் ஒவ்வொரு நாளையும் தொடங்குங்கள்” என்கிறார், உலகின் முன்னணி தன்முனைப்பு எழுத்தாளர் மற்றும் பேச்சாளர், பிரையன் டிரேசி. (“NEVER START THE DAY WITHOUT A LIST”)
இந்தப் பட்டியலை முந்தைய நாள் இரவே தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். நம் இலக்கை அடைவதற்கு ஒவ்வொரு நாளும் மிக முக்கியம் என்பதால், அந்த நாளை எப்படி உபயோகமாகப் பயன்படுத்துகிறோம் என்பதில் அடங்கி இருக்கிறது, நமது வெற்றி.
நம்முடைய இலக்கை அடைய நாம் திட்டமிடாவிட்டால், பிறரது இலக்குகளுக்காக நாம் பயன்பட்டுக் கொண்டே இருப்போம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்னொரு கோணத்திலும் இதைப் பார்க்கலாம்…. நம்முடைய இலக்கிற்காக நாமே திட்டமிடவில்லை என்றால், பிறகு யார் திட்டமிடுவார்கள் ?
எனவே, ஒவ்வொரு நாளையும் தொடங்குவதற்கு முன்பாக, அன்றைக்கு நாம் என்னென்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என்கிற பட்டியல் அவசியம் தேவை. மேலும், என்னென்ன வேலைகளை நாம் செய்து முடித்தோம் என்று
அன்றைய இரவு அலசி ஆராய்வதும், அதற்கான பாலோ அப் வேலைகளை, மறுநாள் மேற்கொள்வதும் மிக அவசியமானது.
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். எம்.எஸ். தோனியும், விராட் கோலியும், ரோகித் சர்மாவும் முதலில் இலக்கை நிர்ணயித்து, திட்டமிட்டு, பிறகு நாள்தோறும் பிராக்டிஸ் செய்தே, இந்த உயரத்தை எட்டி இருக்கிறார்கள். இரவோடு இரவாக எந்த வளர்ச்சியையும், யாரும் அடைந்து விடவில்லை.
ஆம் ! வெற்றிக்கு லிப்ட் கிடையாது. படி ஏறித்தான் செல்ல வேண்டும்.
எனவே, இனி, தினசரி உங்கள் தினத்தை, நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியலோடு தொடங்குங்கள்.
– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker in chennai