fbpx
சேமிப்பை எங்கிருந்து தொடங்குவது ! (பகுதி இரண்டு) | Where to start savings ( Part 2)

Where to start saving? (Part-2)
  • March 22, 2026

சென்ற இதழில், சேமிக்க விரும்புபவர்கள், முதலில் ஹெல்த் இன்சூரன்ஸ், டேர்ம் இன்சூரன்ஸ், லைஃப் இன்சூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட், கோல்ட் ஆகியவற்றில் சேமிக்கத் தொடங்கலாம் என்று பார்த்தோம். அவை தவிர வேறு என்னென்ன முதலீடுகள் உள்ளன என்பதை இந்த இதழில் பார்ப்போம்.

ஃபிக்சட் டெபாசிட் :

பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள், சிறு வங்கிகள், அஞ்சலகங்கள், தனியார் நிதி நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், பெனிஃபிட் பண்டுகள் போன்ற ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில், பிக்சட் டெபாசிட் திட்டங்கள் பல உள்ளன. 4 முதல் 10 சதவீதம் வரை இவற்றில் ஆண்டு வருவாய் ஈட்டலாம். வட்டி வருவாய் உயர, உயர இடர்களும் உயரும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் :

தனியார் நிறுவனங்கள் பலவற்றில் பி.எஃப். திட்டங்கள் இல்லாத காரணத்தால், அவர்களுக்காக உருவாக்கப்பட்டது தான், பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் திட்டம். எல்லாப் பொதுத் துறை வங்கிகளிலும் இந்தத் திட்டங்கள் உள்ளன. இதற்கு வருமான வரிச் சலுகை உண்டு. சிறு தொகையை மாதந்தோறும் இதில் சேமித்து வந்தால், ஓய்வு பெறுகிற காலகட்டத்தில், மீதமுள்ள காலத்திற்கு மிகப்பெரிய நிதி ஆதாரமாக இது இருக்கும். ஆண்டு தோறும் தோராயமாக 8 சதவீத வட்டி, இந்த முதலீட்டிற்கு வழங்கப்படுகிறது.

ரெக்கரிங் டெபாசிட் :

ரிசர்வ் வங்கி அங்கீகாரம் பெற்ற பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், சிறு வங்கிகள் என அனைத்திலுமே இந்த நிதித் திட்டம் உள்ளது. ஒரு சிறு தொகையை மாதந்தோறும் செலுத்தி விட்டு, ஒரு வருடமோ, இரண்டு வருடங்களோ, அல்லது ஐந்து வருடங்களோ…. ஒரு குறித்த காலத்துற்குப் பிறகு, அந்தத் தொகையை வட்டியுடன் பெற்றுக் கொள்ளலாம். மாதாந்திர வருவாய் உள்ளவர்களுக்கு ஏற்ற திட்டம் இது. தோராயமாக 4 முதல் 7 சதவீதம் வரை வட்டி கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ரியல் எஸ்டேட் :

நிலம், வீடு என்றால் எல்லோருக்கும் ஆசைதான். எப்போதுமே நல்ல வளர்ச்சி உள்ள முதலீடு இது. ஆனால் முதலீட்டை மேற்கொள்கிற போது, ஆவணங்களை சரி பார்த்து வாங்க வேண்டும். தொடர்ந்து கண்காணித்துக் கொண்டேயும் வர வேண்டும். இடத்தைப் பொறுத்து மதிப்பு சில, பல மடங்குகள் நீண்ட கால நோக்கில் உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் லாபம் குறைவு. நிலத்தில் லாபம் அதிகம். ஆனால் நினைத்த நேரத்தில் விற்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

சிட் ஃபண்ட் :

வட்டி இல்லாமல் முன்கூட்டியே பணத்தைப் பெறுவதற்கான ஒரு அரிய வாய்ப்புள்ள முதலீடு இதுவாகும். பண சுழற்சிக்காக தொழில் முனைவோருக்கு நன்கு பயன்படும். அரசிடம் பதிவு பெற்ற சிட் ஃபண்ட்களில் முதலீடு செய்வது பாதுகாப்பானது.

இவை ஒவ்வொன்றின் நோக்கமும் வேறு, வேறு என்பதால், இதனைத் தெளிவாகப் புரிந்து கொண்டு – முடிந்த வரை, இவை அனைத்திலும் கொஞ்சம், கொஞ்சமாக முதலீடு செய்வது புத்திசாலித்தனமாகும்.

 

– இராம்குமார் சிங்காரம், Tamil Motivational speaker in tamil nadu

Comments are closed.