வானத்தில் ராக்கெட்களும், ஏவுகணைகளும் பறக்கிற போதெல்லாம், அந்தச் சிறுமிக்கு உடம்பெல்லாம் புல்லரிக்கும். மனசுக்குள் பூ பூக்கும். இதயம் பரபரக்கும். மயிர்க் கூச்செறியும்.
அதில் நாமும் ஒரு பகுதியாக இருந்து விடமாட்டோமா என்று ஏங்கும். நம்முடைய பங்களிப்பாக எதையாவது செய்து விடமாட்டோமா என்ற ஆசை தோன்றும்.
கேரள மாநிலம், தும்பா ஏவுகணை தளத்திற்கு மிக அருகில் அவரது வீடு இருந்ததால், நாள் தோறும் அந்தப் பணிகளைப் பார்த்துப் பார்த்து, இந்தக் கனவு பெரிதாகிக் கொண்டே சென்றது.
ஆனால் குடும்பமோ கீழ் நடுத்தர வர்க்கம்… நான்கு சகோதரிகள் – ஒரு சகோதரன் என அளவில் பெரியது. தந்தை, இவரது 13-ஆவது வயதில் வாத நோயால் முடங்கிப் போனார். ஒட்டுமொத்த குடும்பமுமே இவரது தாயின் ஆசிரியைப் பணியில் கிடைத்த சொற்ப வருமானத்தில் தான் வாழ்ந்தது.
படிப்பதற்கு வசதி இல்லாத போதும், ஏவுகணைக் கனவுகள் மட்டும் இவரை விட்டுப் போகவே இல்லை. ஆண்கள் ஆளுமை செய்து வந்த ஒரு துறையில், ஆலப்புழையில் பிறந்த ஒரு சாதாரண பெண்மணியால் சாதிக்க முடியுமா என்ற சந்தேகம்
நமக்கு இருந்ததைப் போல், அவருக்கும் இருந்தது. ஆனாலும் சாதித்துக் காட்டினார். அவர்தான் டெஸ்ஸி தாமஸ் (TESSY THOMAS). இந்தியாவின் முதல் ஏவுகணைப் பெண் விஞ்ஞானி. டி.ஆர்.டி.ஓ., ஆய்வு நிறுவனத்தின் ஏரோநாட்டிக்கல் பிரிவில் டைரக்டர் ஜெனரலாக தற்போது பணியாற்றி வருகிறார்.
திருச்சூரில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரியில், பி.டெக்., பட்டப் படிப்பை முடித்த இவர், புனேயில் உள்ள Defence Institute of Advanced Technology கல்லூரியில், ஏவுகணைக் கல்வியில் எம்.டெக்., படித்தார். பிறகு எம்.பி.ஏ., முடித்து, பிஎச்.டி., பட்டமும் பெற்றார்.
ஐதராபாத்தில் உள்ள டி.ஆர்.டி.ஓ., ஆய்வு நிறுவனத்தில், 1988-இல் பணிக்குச் சேர்ந்தார். அப்போது அங்கு பணியாற்றிய ஏ.பி.ஜெ. அப்துல் கலாம், 3000 கி.மீ., வீச்சுள்ள அக்னி-3 ஏவுகணைத் திட்டப் பணியில் இணை திட்டப் பணி இயக்குநராக இவரைப் பணியமர்த்தினார்.
தொடர்ந்து, 2011-இல் வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட அக்னி-4 ஏவுகணையின் திட்டப் பணியில் இயக்குநராகப் பணியாற்றினார்.
5000 கி.மீ., வீச்சுள்ள அக்னி-5 திட்டப் பணிக்கு, திட்ட இயக்குநராக 2009-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். ஏப்ரல் 2012-இல் இந்த ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
பிறகு, 2018-ஆம் ஆண்டில், அந்நிறுவனத்தின் ஏரோநாட்டிக்கல் பிரிவு டைரக்டர் ஜெனரலாக
நியமிக்கப்பட்டார். தற்போதும் அந்தப் பணியை மிகச் சிறப்பாகச் செய்து வருகிறார்.
இந்தியாவில் ஏவுகணை திட்டப் பணி ஒன்றிற்கு தலைமை தாங்கும் முதல் பெண் அறிவியலாளர் என்ற பெருமை கொண்ட இவர், உண்மையிலேயே ஏவுகணைகளைப் போல, பல நெருப்புக் கடல்களைக் கடந்து வெற்றி பெற்ற ‘அக்னி பெண்’ தான் என்றால், அது மிகையல்ல.
– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker