‘இது விளங்காத நாடு’ என்று புலம்புபவரா நீங்கள் ? சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் ‘இந்த நாடு மிகப்பெரிய முன்னேற்றத்தை எதிர்கொண்டிருக்கிறது’ என்று கணித்துருக்கிறார்கள்.அதற்கான காரணிகள் இதோ…
140 கோடி மக்களைக் கொண்டு, மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கிறது, இந்தியா. அப்படியானால் இந்தியா தான் இனி உலகின் மிகப்பெரிய சந்தை என்று அர்த்தம். நாம் என்ன பொருள் தயாரித்தாலும், அதை இங்கு எளிதில் விற்று விட முடியும். அது மட்டுமல்ல…. யார், எங்கு, என்ன பொருள் உற்பத்தி செய்தாலும் அதை விற்க இங்குதான் வந்தாக வேண்டும். செல்போன், ஆட்டோமொபைல், நுகர்வோர் பொருள்கள் என உலகின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் எதுவும் இனி இந்தியாவில் முதலீடு செய்யாமல் தொழில் நடத்த முடியாது. எனவே வேலை வாய்ப்பும், பணப் புழக்கமும் இனி இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை – 50 ஆயிரத்தையும் தாண்டி, இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகிலேயே அதிக அளவிலான ஸ்டார்ட் அப் நிறுவனங்களைக் கொண்ட மூன்றாவது நாடு, இந்தியா தான். மேலும் உலக அளவில் உருவாகக்கூடிய புதிய தொழில்நுட்பங்கள் உடனுக்குடன் இந்தியாவிலும் அறிமுகமாகி வருகிறது. இந்தியாவில் 25 வயதிற்கு உட்பட்டோர் 50 சதவீதமும், 35 வயதிற்கு உட்பட்டோர் 65 சதவீதமும் இருப்பதால், தொழில்நுட்பம் தொடர்ந்து இன்னும் மிக வேகமாக வளரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச வல்லுநர்களின் கணக்குப்படி, 2027 ஆம் ஆண்டில் இந்தியா ஐந்து ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவு கொண்ட பொருளாதார நாடாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சராசரியாக இந்தியாவினுடைய பொருளாதார வளர்ச்சி, ஆண்டுக்கு ஏழு சதவீதமாக – ஆரோக்கியமான அளவில் உள்ளது. இதுவே பல அயல்நாட்டு நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்யத் தூண்டி வருகிறது. பல ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்துக் கொண்டிருக்கிற போது, இந்தியா தொடர்ந்து பொருளாதாரத்தில் பீடு நடை போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
உலகின் முன்னணி பன்னாட்டு நிறுவனங்களான ஆப்பிள், டெல், மைக்ரோசாப்ட், இன்டெல், டெஸ்லா, டெல்லாய்ட், ஹூண்டாய், நிசான், டெய்ம்லர், தோஷிபா, சாம்சங் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள், இந்தியாவில் தமது உற்பத்திப் பிரிவைத் தொடங்கி சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இதனால் இந்தியாவில் வேலை வாய்ப்பும், பணப் புழக்கமும், அந்நியச் செலாவணியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இங்கே உற்பத்தி செய்து, சுற்றி இருக்கக்கூடிய தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இந்நிறுவனங்கள் ஏற்றுமதி செய்வதால், நமக்கும் கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இந்தியாவில் நடுத்தர குடும்பங்களின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது. தற்போது 44 கோடியில் இருக்கும் நடுத்தர மக்களின் எண்ணிக்கை, 2030-ம் ஆண்டிற்குள் 70 கோடியாக உயர இருக்கிறது. ஒரு இந்திய நடுத்தரக் குடும்பத்தின் சராசரி வருமானமும், மாதத்திற்கு 23 ஆயிரம் என்ற நிலையில் இருந்து 46 ஆயிரம் என்ற நிலைக்கு 2027-ம் ஆண்டிற்குள் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
சினேகிதிகளே ! இன்னும் எதற்காகக் காத்திருக்கிறீர்கள் ?நீங்கள் முன்னேறுவதற்கு இந்தக் களம் தயாராக இருக்கிறது. இதைவிட ஒரு பொன்னான காலம் இனி கிடைக்கப் போவதில்லை !
உங்களைத் தயார் படுத்திக் கொண்டு களம் காணுங்கள் !
வெற்றி நிச்சயம் !
– இராம்குமார் சிங்காரம், Motivational Speaker in Tamil nadu