அன்றாடம் உங்கள் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும் சில சம்பவங்களைப் பார்ப்போம்.
காலை எழுவதற்காக அலாரம் வைத்துவிட்டு, அது அடித்தவுடன் நிறுத்திவிட்டு திரும்பவும் புரண்டு படுப்பவரா நீங்கள்? பெரும்பாலும் இரண்டாவது அல்லது மூன்றாவது அலாரம் அடிக்கிறபோதுதான் எழுந்திருப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பீர்கள் சரியா?
உங்கள் குழந்தை அழுது கொண்டு இருக்கிறது. அதன் அழுகையை நிறுத்துவதற்காக மாலையில் வரும்போது மிட்டாய் வாங்கி வருவதாக வாக்குறுதி கொடுக்கிறீர்கள். அது அழுகையை நிறுத்தி விட்டு, மாலை வரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. ஆனால் வீடு திரும்பும்போது வெறும் கையோடு திரும்புவீர்கள்… சரியா?
உங்கள் மனைவி சினிமாவிற்கு செல்லவேண்டும் என்று கேட்கிறார், வரும் ஞாயிற்றுக்கிழமை அழைத்து செல்வதாக வாக்குறுதி கொடுக்கிறீர்கள். ஆனால் ஞாயிறு அன்று உங்கள் நண்பரோடு வெளியில் சென்று விடுவீர்கள்… கரெக்ட்தானே?
உங்கள் வாடிக்கையாளர் போனில் அழைக்கிறார், உங்கள் பொருளில் ஒரு குறை இருப்பதை சுட்டிக் காண்பிக்கிறார். உடனே சரி செய்து தருவதாக வாக்குறுதி கொடுக்கிறீர்கள். ஆனால் அலுவலகத்திற்கு சென்றவுடன் அதைவிட பெரிய
பிரச்சனையில் மூழ்கி, இதனை மறந்து விடுவீர்கள்… உண்மைதானே.
இப்படி நாள்தோறும் நீங்கள் அளித்த வாக்குறுதிகளை நீங்களே பல நேரங்களில் நிறைவேற்றுவதில்லை.
யோசித்துப் பாருங்கள். நீங்கள் ஒரு முடிவை எடுக்கிறீர்கள்; அந்த முடிவை நீங்களே மதிக்கவில்லை என்றால் பிறர் எப்படி உங்கள் முடிவை மதிப்பார்கள்?
நீங்கள் உங்கள் வீட்டில், கடிகாரத்தை 10 அல்லது 15 நிமிடம் வரை வேகமாக வைத்திருப்பீர்கள். இதை பார்த்தவுடன் ‘கடிகாரம் ரிப்பேர் போல …’ என்று பிறருக்கு எண்ணத் தோன்றும்.
ஆனால், ‘ஐயையோ! நேரமாகிவிட்டதே என்று 15 நிமிடம் வரை செயற்கையாக பதறுவதற்காக நீங்களே அப்படி வைத்திருப்பீர்கள்…’ உண்மைதானே!
இப்படி, செயற்கையான பதற்றத்தை உருவாக்கித்தான் அன்றாட வாழ்க்கையையே தள்ளவேண்டும் என்றால், பிறகு நீங்கள் வாழ்க்கையில் எப்படி முன்னேற முடியும்?
உங்கள் உள்ளத்திற்குள் சுய உந்துதல் இருக்க வேண்டாமா?
– இராம்குமார் சிங்காரம், Motivational speaker in tamil