தொழிலதிபர் ஒருவர் புதிய கண்டுபிடிப்புகள் எதுவாயினும் அதனை வாங்கிப் பயன்படுத்தும் ஆர்வம் கொண்டவர். புத்திசாலி ரோபோ ஒன்று சந்தையில் கிடைப்பதை அறிந்து, அதனை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார். முக்காலமும் உணர்ந்த அந்த ரோபோ, யார் பொய் சொன்னாலும் கண்டுபிடித்து, அவர்களது கன்னத்தில் பளார் என்று அறைந்து விடும். இதனைத் தொழிலதிபர் தனது ஊழியர்களிடம் பயன்படுத்தியதில், அலுவலகம் மிக ஒழுங்காக மாறி இருந்தது. பொய்யைக் கண்டுபிடிக்கும் ரோபோ வந்ததிலிருந்து அவரது தொழில் மிக நேர்த்தியாக சென்றது. ஊழியர்கள் பொய்யற்றவர்களாக மாறியிருந்தனர். ஊழலற்ற நிர்வாகத்துக்கு வழிவகுத்த ரோபோவை மிகப் பெருமையுடன் வைத்திருந்தார் தொழிலதிபர். ஒரு முறை தொழிலதிபர் மகன் இரவு நேரத்தில் வீட்டுக்கு லேட்டாக வந்தான். தொழிலதிபர், “ஏன்டா லேட்டு… எங்க போயிருந்தே..? என்று கேட்டார் அப்பா. “நண்பர்களோட சேர்ந்து பரீட்சைக்குப் படிக்கப் போயிருந்தேன்” என்ற மகனின் கன்னத்தில், பளாரென ஒரு அறை விட்டது, ரோபோ.
கோபமடைந்த தொழிலதிபர் மகனிடம், “ஒழுங்கா உண்மையைச் சொல்லிடு. இல்லே, ரோபோ கிட்ட மறுபடியும் அடி வாங்குவ!” மகன், “மன்னிச்சிடுங்க அப்பா… புதுப்படம் ரிலீஸ். ஃப்ரெண்ட்ஸோட சேர்ந்து சினிமா பார்க்கப் போயிருந்தேன்” என்றான். உண்மையை வரவழைத்துவிட்ட அகம்பாவத்தோடு சொன்னார் தொழிலதிபர், “டேய், ஏண்டா இப்படி ஊரைச் சுத்தறே- நானெல்லாம் உன் வயசுல ஒரு நிமிஷத்தைக்கூட வீணாக்காம, எப்படிப் படிப்பேன் தெரியுமா? என்றார். ரோபோ தொழிலதிபரின் கன்னத்தில் ஒரு அறை விட்டது. வெட்டி உதார் விட்ட கணவனுக்கு அடி விழுந்ததை ரசித்தார் மனைவி. லேசான புன்னகையுடன் அவர் அருகில் வந்த தொழிலதிபரின் மனைவி, “எதுக்குங்க அவனைத் திட்டறீங்க… என்ன இருந்தாலும் உங்க பையன் உங்களை மாதிரி தானே இருப்பான்? என்றார். இப்போது ரோபோ தொழிலதிபரின் மனைவியின் கன்னத்தில், பளார் என்று ஒரு அறை விட்டது. குடும்பம் கந்தலாகி இருக்கும் என்பதும், அந்த ரோபோ அந்தக் கணமே டிஸ்மாண்டில் செய்யப்பட்டிருக்கும் என்பதும் யூகிக்க முடியும். முடிவுதான்.
வடிவேலு சொல்வது போல ‘நல்லாத்தானே போய்க்கிட்டிருந்தது’. ஏன் இப்படி..? என்று சிக்கல்களையும் குழப்பத்தையும் பார்த்து திகைத்து விடாதீர்கள்.
வெற்றியாளர்கள் எப்போதுமே நதியின் ஓட்டம் போன்ற இயல்பான வாழ்க்கையை ஏற்றுக் கொள்வதே இல்லை. காரணம், ஏற்ற – இறக்கமற்ற வாழ்க்கை உயர்வைத் தராது என்பதை அவர்கள் அறிவார்கள். சவால்கள் இல்லாத நாள், திறமைகளை மழுங்கடிக்கும் நாள் என்பதே அவர்கள் அகராதியில் எழுதப்பட்ட அர்த்தம். யோசித்துப் பாருங்கள். நீங்கள் ஒரு நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கிறீர்கள். கை நிறைய சம்பளம். வசதியான வாழ்க்கை. பிக்கல், பிடுங்கலற்ற உயர் அதிகாரிகள். நீங்கள் வைத்ததுதான் சட்டம். உங்களை யாரும் கேள்வி கேட்க பயப்படுவார்கள். காலண்டர் தேதி கிழியும். மாதமானால், வங்கிக் கணக்கில் பணம் கொட்டும். எடுத்துச் செலவழித்துக் கொள்ளலாம். நாட்கள் நகருமே தவிர, இதற்கு அடுத்தகட்ட முன்னேற்றம் என்பது இருக்காது. இந்த நிலையில் நீங்கள் பார்க்கும் வேலையில் முன்னேற்றம் எப்படி வரும்?
எதிரிகளின் சூழ்ச்சியும், சிக்கலான தருணங்களுமே உங்களைக் கூடுதலாகச் சிந்திக்க வைக்கும். எனவே, எதிர்களை எதிர்கொள்ளுங்கள்.
உங்களை முன்னேற்ற இயற்கை அளித்த கொடையாக இவற்றைக் கருதுங்கள். எனவே, அனைத்துச் சிக்கல்களுக்கும் தீர்வு இருக்கிறது என்பதால் சிக்கல்களுக்கு சிவப்புக் கம்பளம் விரியுங்கள். வாழ்க்கையில் வெல்லுங்கள்!
– இராம்குமார் சிங்காரம், Tamil motivational Speaker