நீங்கள் தொழில் புரியும் இடத்தில் ஒரு தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்றில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்களை நடத்தலாம். சான்றாக நகல் எந்திரம் வைத்து தொழில் நடத்தும் ஒருவர் அதிலேயே பைண்டிங், பின்னிங், கட்டிங் போன்ற அச்சுத்தொழில் சார்ந்த பணிகளையும் மேற்கொள்ளலாம். மருந்துக் கடை வைத்திருக்கும் ஒருவர் ஸ்டேஷனரி பொருளையும் ஒரு பகுதியில் விற்கலாம். ஒரு ஸ்டேஷனரி கடையிலேயே நான்கு விதமான தொழில்களை சீசனுக்கு ஏற்றாற்போல் மாறி மாறி செய்வதும் சாத்தியமே!
எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் காலண்டர், டைரி, கிரீட்டிங் கார்டு வியாபாரமும், மார்ச், ஏப்ரல் மாதங்களில் புதுக் கணக்கு போடப் பயன்படும் கணக்குப் பேரேடுகளும், கோப்புகளும், மே, ஜூன், ஜூலை, மாதங்களில் பள்ளி நோட்டுப் புத்தகங்களும், செப்டம்பர், அக்டோபர், மாதங்களில் பட்டாசு வியாபாரமும் செய்கிறார். கடையில் 50 சதவீதப் பகுதியில் சீசனுக்கு ஏற்ற பொருட்களையும் மீதமுள்ள பகுதியில் மற்ற பொருள்களையும் விற்பது ஒரு ஸ்டைல்தான். இந்த சிந்தனை கேட்பதற்கு எளிதாக இருந்தாலும் நடைமுறைப்படுத்த முயலும்போது சில சிரமங்களை தொழில்முனைவோர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
எல்லாப் பொருட்களையும் வாங்க அதிக முதலீடு வேண்டும். ஸ்டாக் வைத்துக் கொள்ள அதிக இடம் தேவை; ஒவ்வொரு பொருளுக்கும் வரி விகிதம் வேறுபடும்; விற்பனை விதிமுறைகள் மாறுபடும்;. சில நேரங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் பொருந்தாமல் போகக்கூடும். ஆனால் வாடிக்கையாளர்கள் மாறுபடுவதில்லை, அவர்கள் தாம் நம் பலம்!
அதாவது மருந்துப் பொருட்களுக்கான விற்பனை வரி வேறு; எழுது பொருட்களுக்கான விற்பனை வரி வேறு. மருந்துகளுக்கும், பட்டாசுகளுக்கும் வெவ்வேறு இடங்களில் விற்பனை அனுமதியைப் பெற வேண்டும். வெவ்வேறு அதிகாரிகளுக்கு பதில் சொல்ல வேண்டும். இப்படி தொழிலைக் கையாளும் முறைகள்
வேறுபடுவதால் தொழில் முனைவோருக்கு இடர்களும் அதிகமாகவே இருக்கும்.
இருப்பினும் இதில் நல்ல வருமானத்திற்க்கு சாத்தியக்கூறுகள் அதிகமிருப்பதையும் மறுக்க முடியாது.
காலாண்டு அல்லது சீசன் தொழில்கள் இப்படி என்றால், ஒரு உத்தியைப் பின்பற்றி, தொழில் புரியும் இடத்தில் கூடுதல் வருமானம் ஈட்ட நீங்கள் வேறு சில விரிவாக்க உத்திகளையும் மேற்கொள்ளலாம்.
வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு திட்டமிடுதல்; உங்களிடம் வரும் வாடிக்கையாளர்கள் எந்தெந்தப் பொருட்களை எல்லாம் எதிர்பார்க்கிறார்கள் என்று கண்டறிந்து அவற்றை நீங்கள் கூடுதலாக விற்பனை செய்யலாம்.
இடத்தை மையமாகக் கொண்டு திட்டமிடுதல் ; உங்கள் கடையைச் சுற்றி என்ன மாதிரியான பொருட்கள் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டு அதனை நீங்கள் விற்று காசு பார்க்கலாம். மணல் விற்பனை செய்யும் கடைக்காரர் ஒருவர் தம்மிடம் வரும் வாடிக்கையாளர்கள் பலரும் சிமெண்ட் வாங்குவதற்கு 5 கிலோமீட்டர் தூரம் செல்வதை உணர்ந்து, அவரே சிமெண்ட் டீலர்ஷிப்பையும் எடுத்து வியாபாரத்தைப் பெருக்கினார். அதுபோல் நீங்களும் முயற்சிக்கலாம்.
தொழிலை மையமாகக் கொண்டு திட்டமிடுதல்; உங்கள் தொழிலுக்கு அல்லது விற்பனை செய்யும் பொருளுக்கு தொடர்புடைய சேவைகளைச் செய்யலாம். அல்லது பொருட்களை விற்கலாம். நீங்கள் காய்கறி விற்கும் அங்காடி வைத்திருந்தால் பழங்களையும் சேர்த்து விற்கலாம், பழத்தைச் சாறா க்கியும் விற்கலாம். காய்கறி சமைக்க உதவும் மசாலாக்களை வாங்கி அடுக்கி வைக்கலாம். பால் விற்பனை செய்பவராக இருந்தால் தயிர், வெண்ணை, காப்பித்தூள் போன்றவற்றையும் வாங்கி அடுக்கி வைக்கலாம். சென்னையில் துணிக்கடை நடத்தும் பலரும் அங்கேயே துணிகளை தைத்துக் கொடுக்கும் தையலகமும் நடத்துகின்றனர். தி நகர் ரங்கநாதன் தெருவிற்குச் செல்லும் பெண்கள், சுடிதார் துணியைத் தேர்ந்தெடுத்த அடுத்த ஒரு மணி
நேரத்திற்குள்ளாக சுடிதாராகவே அதனைத் தைத்துப் பெற்றுச் செல்லும் வசதி வந்து விட்டது.
பணத் தேவையை மையமாக வைத்து திட்டமிடுதல்; ரியல் எஸ்டேட் நடத்தி வரும் ஒருவருக்கு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறைதான் கமிஷன் வந்துகொண்டிருந்தது. இதனால் அவர் அன்றாடச் செலவுகளுக்கு பணப் புழக்கமின்றி சிரமப்பட்டார். இந்தப் பிரச்சனைக்கு அவர் கண்ட தீர்வு என்ன தெரியுமா? சிம்கார்ட் ரீசார்ஜ், நகல் எந்திரம், மினரல் வாட்டர் கேன் வினியோகம் ஆகிய மூன்றையும் அந்தக் கடையில் கூடுதலாக வைத்தார். தினசரி செலவுக்கு பணம் பார்க்க முடிந்தது. இதுபோன்று குறுகிய காலத் தேவை, நீண்ட காலத் தேவை என உங்கள் பணத் தேவைக்கு ஏற்றாற்போல நீங்கள் பிற தொழில்களைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
—– இராம்குமார் சிங்காரம், Tamil Motivational Speaker