வேட்டைக்குச் சென்ற இளவரசரைக் காணவில்லை. நாடே அமளிதுமளிப் பட்டது. வேட்டைக்குச் சென்ற காட்டை நோக்கி ஆளாளுக்குத் தேடிச் சென்றனர். அந்தக் காட்டில் ஒரு துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்குப் பார்வை கிடையாது. அந்த வழியாக வந்த ஒருவன், “ஏ, கிழவா! இந்த வழியாக சற்று முன் யாராவது சென்றார்களா?” என்று அதிகாரத்தோடு கேட்டான். அதற்குத் துறவி, “இதற்கு முன் இந்த வழியாக யாரும் சென்றதாகத் தெரியவில்லை.” என்றார். சிறிது நேரத்தில் மற்றொருவன் வந்து, “ஐயா, இதற்கு முன் யாராவது இப்பக்கமாகச் சென்றார்களா? என்று கேட்டான், அதற்கு அத்துறவி, “சற்று முன் இந்த வழியாகச் சென்ற ஒருவன் இதே கேள்வியைக் கேட்டு விட்டுச் சென்றான்” என்றார். அடுத்த சிறிது நேரத்தில் இன்னொருவன் வந்தான். அவன் ‘துறவியாரே, வணங்குகிறேன். இதற்கு முன்பு இந்த வழியாக யாராவது செல்லும் சத்தம் தங்களுக்குக் கேட்டதா?” என்று பணிவோடு வினவினான். உடனே துறவி, “மன்னர் பெருமானே, வணக்கம். இந்த வழியாக முதலில் ஒரு வீரன் சென்றான். அடுத்து ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட இதே கேள்வியைத்தான் கேட்டனர்” என்றார்.
மிகவும் வியந்து போனான் அரசன், “துறவியாரே, தங்களுக்கோ பார்வை இல்லை. அப்படி இருந்தும் நான் அரசன் என்றும், முன்னால் சென்றவர்கள் வீரன், அமைச்சர் என்றும் கூறினீர்களே, எப்படி.? என்று கேட்டான். ‘அரசே, இதைக் கண்டறிய பார்வை தேவையில்லை. அவரவர் பேசும் தோரணையை வைத்தே அவர் யார், அவர் தகுதி என்ன, எத்தகைய குணநலன் கொண்டோர் என்பதை எல்லாம் அறிய முடியும். முதலில் வந்தவர் சிறிதும் மரியாதையின்றி கேள்வி கேட்டார். அடுத்து வந்தவர் பேச்சில் அதிகாரம் தெரிந்தது. ஆனால் தாங்களோ மிகவும் பணிவாகப் பேசுகிறீர்கள்” என்று விளக்கினார் அந்த பார்வையற்ற துறவி..! அத்தோடு, “யாரைத் தேடி இத்தனை பேரும் காட்டுக்குள் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள்..?” என்று கேட்டார் துறவி. “என் மகன் வேட்டைக்குத் தனியே சென்றவன் அரண்மனை திரும்பவில்லை… இளவரசரைத் தேடித்தான் நாங்கள் வந்துள்ளோம்.!” என்றார் மன்னர்.
சிரித்தபடியே சொன்னார் துறவி. “இதுதான் விஷயமா… இந்த மலைக்குப் பின்னே மிகப்பெரும் அருவி உள்ளது. அதன் அழகில் மயங்கி இளவரசர் சென்றிருக்க வாய்ப்பு உள்ளது. இன்று காலை புரவிச் சத்தம் ஒன்று அந்தத் திசையில் செல்வதைக் கேட்டேன் என்றார் துறவி. “வீரன் பணிவுடன் கேட்டிருந்தால், இந்தத் தகவலை அவனிடமே கூறியிருப்பீர்கள் அல்லவா.? தகுதியற்ற வீரன் மற்றும் அமைச்சரைக் கொண்டிருப்பது, எனக்குத்தான் வேலை வைக்கும் என்பதைப் புரிந்து கொண்டேன்…” என்று கூறி, அருவிப் பாதையை நோக்கி நகர்ந்தார் மன்னர். ஒரு வெற்றியாளனின், தலைமை வகிப்பவரின் முக்கியத் தகுதியே தனக்குக் கீழ் பணியாற்றுவோரை மிகச் சிறந்த புத்திசாலியாகத் தேர்ந்தெடுத்து, அவரைத் தகுதிக்குரியவராகத் தயார்படுத்துவது தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ‘கடலையை வீசி எறிந்தால், குரங்குதான் வரும். இதுவே முந்திரிப் பருப்பை வீசிப் பாருங்கள். தகுதியான ஊழியர் கிடைப்பார் என்பதை உணர்ந்து, ஊழியர்களின் தகுதிக்கேற்ப அவர்கள் மனநிறைவடையும்படி ஊதியம் அளித்துத் தக்கவைத்துக் கொள்வது வெற்றியாளர்களின் தகுதிகளில் ஒன்றாகும்.
– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker