பொதுவாக நாம் தோல்வியைச் சந்திக்கிறபோது என்ன சொல்வோம் தெரியுமா?
“நேரம் சரியில்லை“
“பார்ட்னர் கால வாரிட்டார்“
“கஸ்டமர் பணம் தராம ஏமாத்திட்டார்“
“பொருள் கெட்டுப்போச்சு“
“பேங்க் கடன் தரலை“
“கவர்மெண்ட் சரியில்லை”
“பொருளாதாரம் மந்தமா இருக்கு“
“லேபர் கிடைக்கலை“
இந்தக் காரணங்கள் அனைத்தும் உண்மையாகக்கூட இருக்கலாம். ஆனால், நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்… உங்கள் போட்டியாளருக்கும் இவை அனைத்தும் பொருந்துமல்லவா?
அவரால் மட்டும் எப்படி வெற்றி பெற முடிகிறது?
உண்மை என்ன தெரியுமா? தோல்விக்குக் காரணம் ‘நான்‘ தான் என்று ஏற்றுக் கொள்கிற பக்குவம் நமக்கு இல்லை.
புரிந்து கொள்ளுங்கள்… உங்களது ஒரு விரல், எதிராளியை நோக்கி ‘உன்னால்தான் தவறு‘ என்று சுட்டும்போது, மூன்று விரல்கள் உங்களை நோக்கி ‘அதற்கு நீயும் உடந்தை‘ என்று சொல்லிக்கொண்டேயிருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு விஞ்ஞானி உலகத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த ரோபோட் ஒன்றைக் கண்டுபிடித்தார். அந்த ரோபோட் பன்முகத் தன்மை கொண்டது. ஆடும், பாடும், சிரிக்கும், பேசும், நடக்கும், கம்ப்யூட்டரை இயக்கும், ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தும், வாகனம் ஓட்டும்… இப்படி எல்லா வேலைகளையும் செய்தது.
இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப்போன பத்திரிக்கையாளர்கள் கேட்டனர்.
“அப்படியானால் நமது வேலை வாய்ப்பெல்லாம் பறிபோய்விடுமா?”
அதற்கு அந்த விஞ்ஞானி, “ஆம்! உண்மைதான். இந்த ரோபாட்டை விட, தான் ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தவன் என்பதை மனிதன் உணராதவரை” என்றார் நக்கலாக.
உண்மைதான். நம் ஒவொருவருக்குள்ளும் ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த, பன்முகத் தன்மை கொண்ட ரோபோட்டின் திறன் இருக்கிறது. இந்த அருமை தெரியாமல் நாம் ஒரே இடத்திலேயே அமர்ந்து, ஒரே வேலையைச் செய்து பெஞ்சை தேய்த்துக் கொண்டு இருக்கிறோம்.
நாம் மாற வேண்டிய தருணம் வந்துவிட்டது. நாம் இப்போது செய்யக்கூடிய வேலையை விட, இன்னும் பெரிய சாதனைகளை உருவாக்கப் படைக்கப்பட்டிருக்கிறோம்.
ரோபோட்டுகளை கம்ப்யூட்டர் புரோகிராம்கள் இயக்குவதுபோல, மனிதர்களை இயங்குபவை எவை தெரியுமா? அவர்களின் ‘எண்ணங்கள்‘ தான்.
சிவாஜிராவ் ரஜினிகாந்த ஆனதற்கும், பரமக்குடி சிறுவன் கமல்ஹாசன் ஆனதற்கும், விராட் கோலி உலக சாதனைகள் நிகழ்த்தியதற்கும் காரணம், அவர்களின் எண்ணங்கள்தான்.
நீங்கள் மாற வேண்டிய நேரமிது. நீங்கள் பிறர் மீது குற்றம் சொல்வதைத் தவிர்த்துவிட்டு, உங்கள் மீது நம்பிக்கை வைக்கத் தொடங்குங்கள். உங்கள் எண்ணங்கள்தான் உங்களை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும் என்பதை உறுதியாக நம்புங்கள்.
உங்கள் இலக்குகளும், எண்ணங்களும் ஒரே நேர்கோட்டில் இருந்தால் உங்கள் வெற்றி நிச்சயம் சாத்தியப்படும். ‘100 கோடி ரூபாய் சம்பாதிக்க வேண்டும்‘ என்பது உங்கள் இலக்காக இருந்து, ‘இதெல்லாம் என்னால் முடியாது‘ என்பது உங்கள் எண்ணமாக இருந்தால், உங்கள் முன்னேற்றத்திற்கு நீங்களே எதிரி ஆவீர்கள். எனவே, இரண்டும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டியது அவசியம்.
இலக்குகள், துல்லியமாகவும் (Specific), அளக்கக் கூடியதாகவும் (Measurable), செயல் திட்டம் கொண்டதாகவும் (Action Plan), நடைமுறைச் சாத்தியம் உள்ளதாகவும் (Realistic), காலத்தோடும் (Time Line) இருந்தால், அவை நம்முடைய எண்ணங்களை நேர்மறையாக மாற்றும்.
இப்படி வரையறுக்கப்படும் இலக்குகளுக்கு SMART Goals என்று பெயர். உதாரணமாக, ‘நான் வீடு வாங்கப் போகிறேன்‘ என்று இலக்கினை வரையறுக்காமல், ‘நான் 2030 – ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி மாலை 6 மணிக்குள், திருச்சியில் 1200 சதுர அடி பரப்பளவு கொண்ட ஒரு வீட்டிற்குச் சொந்தக்காரனாவேன்‘ என்று வரையறுத்தால் அதனை அடைய எண்ணங்களும் கைகொடுக்கும்.
எனவே நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது எண்ணங்களை பயன்படுத்தினால் நீங்கள் வெற்றியாளராகலாம். இல்லையென்றால் உங்களுக்கு எதிரி நீங்கள் தான்.
– இராம்குமார்சிங்காரம், Tamil Motivational Speaker