மொக்கைச்சாமி என்பவன், கடவுளை நோக்கி கடுந்தவம் இருந்தான் கடவுள் தோன்றினார். என்ன வரம் வேண்டும்”னு கடவுள் கேட்டாராம். இவன் சொன்னாளாம். ‘கடவுளே. எதிரிகளின் அச்சுறுத்தல் ஏராளமாக உள்ளது. எனக்கு சாவே வரக்கூடாது’ ‘அவ்வளவு தானே.. அப்படியே ஆகுக!”ன்னு சொல்லிட்டு சிரிச்சுட்டே போய்ட்டாராம் கடவுள். மிகச் சுலபமாக வரம் பெற்ற மிதப்பில் மொக்கைச்சாமி அங்கிருந்து நகரை நோக்கிக் கிளம்பினான். அவன் நடை, உடை, பாவனையே மாறியிருந்தது. உலகில் தன்னை வெல்ல எவரும் இல்லை என்ற இறுமாப்பில் அவன் வந்த கொண்டிருந்தபோது. எதிரில் வந்த சாமியார் ஒருவர், இவனை விநோதமாகப் பார்த்து, ‘யாரப்பா நீ” ன்னு கேட்டார். அவன் சொன்னானாம். ‘மொக்கை மாமி” பாவம். அவனுக்கு ‘சா’வே வரல! கடவுளிடம் பெற்ற வரம் அப்படி! கடும் முயற்சியால் கிடைத்த வரத்தைச் சரியான வார்த்தைகளில் பெற்றுக் கொள்வதும்கூட புத்திசாலித்தனமான காரியம்தான். மொக்கை அதில் மொக்கை வாங்கி விட்டார். சரி, இப்போது வெற்றியாளர்களுக்கான அடிப்படை அம்சங்கள் சிலவற்றை அறிந்து கொள்வோம்.
வெற்றியாளர்கள் எதைச் செய்ய நினைக்கிறார்களோ அதற்கான செயல்திட்டத்தைத் தயாரித்து, உடனடியாகச் செய்து முடிப்பார்கள். அதேபோல செய்ய வேண்டாம் என முடிவெடுத்தால், கண்டிப்பாக செய்ய மாட்டார்கள். தோல்வியாளர்கள் ஒவ்வொரு வாய்ப்பிலும் பிரச்சனையை பார்ப்பார்கள். ஆனால் வெற்றியாளர்கள் ஒவ்வொரு பிரச்னையையும், புதிய சவாலாக, வாய்ப்பாகப் பார்ப்பார்கள். வெற்றியாளர்கள் அடுத்தவர்களின் வழிமுறைகள் சிறப்பாக இருந்தால், ஈகோ பார்க்காமல் அதனை ஏற்றுக் கொள்பவராக இருப்பார்கள். அதிலிருந்து புதிதாக கற்றுக்கொள்ளவும் தயாராக இருப்பார்கள்.
தோல்வியாளர்கள் முதல் தோல்வியிலேயே அம்முயற்சியிலிருந்து வெளிவந்து விடுவார்கள். ஆனால், வெற்றியாளர்கள் விடாமுயற்சியுடன் செயல்படுவதால், ஒவ்வொரு தோல்வியையும் வெற்றிக்கான படிக்கட்டுக்களாக மாற்ற முயற்சிப்பார்கள்.
வெற்றியாளர்கள், வெற்றி பெற்ற பிறரைப் பார்த்துப் பொறாமைப் படுவதைத் தவிர்த்து, அவர்களைப் பாராட்ட முன்வருவார்கள்.
வெற்றியாளர்கள் வேலையையும், ஓய்வையும் சரிசமமாக எடுத்துக் கொள்வார்கள். பொழுதுபோக்கு என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.
தங்களது கனவு நிறைவேற என்னவெல்லாம் தேவையோ அதனை செய்து முடிப்பதிலேயே, வெற்றியாளர்கள் எப்போதும் குறியாக இருப்பர். தங்களது எதிர்மறை எண்ணங்களை தவிர்த்துவிட்டு அடுத்த கட்டத்துக்கு செல்வதையே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.
தோல்வியாளர்கள் ஒரு விஷயத்தை ‘முடியாது’ என்பார்கள். ஆனால் வெற்றியாளர்கள் ‘சாத்தியத்திற்கு முடிவே இல்லை’ என்பார்கள்.
என்ன நீங்கள் வெற்றியாளரா இல்லை தோல்வியாளரா என்பதை தெரிந்து கொண்டீர்களா..? வெற்றியாளர்களாக இருப்பின் உங்களது செயலைத் தொடர்ந்து சிறப்பாக செய்யுங்கள், இல்லையென்றாலும் பரவாயில்லை… வெற்றியாளர்களாக மாறுவதற்கு முயற்சியுங்கள்.
– இராம்குமார் சிங்காரம், Motivational speaker in Tamil nadu