கருப்பிராயத்தில் ஆம்லெட் ஆகாமல் தப்பித்த முட்டைகளே வளர்ந்து, தந்தூரி சிக்கனாகின்றன. எதற்காக இந்த ஜோக் என்று பார்க்கிறீர்களா? முட்டை சம்பந்தமான கதையைத்தான் இப்போது பார்க்கப் போகிறோம்! ஒரு ஜோடிக் காக்கை, ஒரு ஆலமரத்தில் கூடுகட்டி வசித் வந்தன. பெண்காகம் குறிப்பிட்ட கால இடைவெளியில் முட்டைகள் இடுவதும், அவை தொடர்ந்து காணாமல் போவதும் தொடந் நடந்தது. திருடனைக் கண்டுபிடிக்க எண்ணியது காக ஜோடி. பென் காகம் முட்டையிட்டுவிட்டு மேலே கிளம்பிப் போவது போல் பாசாங்கு காட்டிவிட்டு, அருகிலிருந்த மரக்கிளைகளில் வந்து பதுங்கிக் கொண்டது. காகங்கள் வெளியே கிளம்பியதைக் கவனித்த மரத்தின் கீழ் இருந்து கருநாகம், மேலேறி வந்து, முட்டைகளைக் கொத்திக் குடித்து சென்றது. காகங்கள் அதிர்ந்தன. கள்வன் தங்கள் காலடியிலேயே இருப்பதறிந்து வருந்தின.
“இடத்தைக் காலிசெய்து விட்டு வேறு இடத்தில் குடிபோய் விடலாம் என்ற பெண் காகம், “சந்ததி தழைக்க வேண்டுமானால் கருநாகத்திடம் இருந்து முட்டைகளைக் காத்து, குஞ்சு பொரிக்க வேண்டும். சில காலமானாலும், வேறு மரத்தில் புதிய கூடு கட்டிக் குடியேறுவோம்.” என்று குமுறியது.
ஆண் காகம் சிந்தனை வயப்பட்டது. “இதற்கு ஒரு தீர்வு இருக்கிறது. நாகத்தைக் கொல்வோம்!” என்றது ஆண் காகம், “என்ன விளையாடுகிறீர்களா.. காகம் என்றைக்கு கொன்றிருக்கிறது…? அதுவோ கொடிய விஷம் கொண்டது. அருகில் சென்றாலே, உயிரைக் குடித்து விடும். எதற்கு வம்பு…?” என்று பெண் காகம் அஞ்சியது.
“நாகத்தைக் கொல்லும் வலிமையும் வல்லமையும் நம்மிடம் இல்லை. ஆனால், அதைக் கொல்லத் தூண்டும் புத்திசாலித்தனம் இருக்கிறது. சந்தர்ப்பம் வரும்வரை காத்திருப்போம்!” என்றது காகம்.
அன்று முதல் தாம் இடும் முட்டைகளை அருகிலேயே இருந்து பெண் காகம் காவல் காத்து வந்தது. காகம் இருப்பதறிந்து, நாகம் சில நாட்கள் வாலைச் சுருட்டிக் கொண்டு அமைதியாக இருந்தது.
இதனிடையே, பெரும் வணிகர் கூட்டம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தது. அவர்களின் உடமைகள் ஆற்றின் கரையில் இருக்க.. அதைக் கவனித்தது ஆண் காகம். அதில் விலை உயர்ந்த ரத்தின மாலையைக் கவ்வி எடுத்தது. வணிகர்கள் அதைக் கவனித்து விரட்டி வந்தனர். ஆண் காகம் அவர்களின் கண்ணில் படும் அளவுக்கு வந்தபின், ரத்தின மாலையை பாம்பின் புற்றுக்குள் தவறவிட்டது, வணிகர்கள் பாம்புப் புற்றை இடிக்கத் தயாரானார்கள். சீறிக்கொண்டு வெளியே வந்தது பாம்பு. வந்திருந்த வணிகர்கள், கட்டையை எடுத்து பாம்பை அடிக்கத்துவங்கினார்கள்.
பலமுனைத் தாக்குதலில் ஈடுகொடுக்க முடியாமல் அடிபட்டுச் செத்தது பாம்பு. புற்றைத் தரைமட்டமாக்கி, ரத்தின மாலையை எடுத்துச் சென்றனர் வணிகர்கள். மேலிருந்தபடி, காகங்கள் அளித்த நன்றிக் குரல் அவர்களுக்குக் கேட்டிருக்க வாய்ப்பில்லை. இது, குழந்தைகள் கதை மாதிரி இருந்தாலும், இதிலும் தொழில் சார்ந்த உண்மை இருப்பதை நீங்கள் மறுக்க முடியாது. ஒரே தொழிலில் ஒரே ஊரில் இருக்கும் இருதுருவ தொழிலதிபர்கள், மற்றவரை எதிர்கொள்ள புத்தி சாதுர்யம் தேவை.
வெறும் தொழில்திறன் மட்டும் வெற்றிக்கு உதவாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்காக, ஒருவரை அழிக்க வேண்டும் என்பது அர்த்தமல்ல… பணபலமும், தொழில் அறிவும் மிக்க பெரும் தொழிலதிபரையும், சிறிய தொழில் நிலையில் உள்ளோர் புத்திசாலித்தனமான திட்டங்கள் மூலம் எதிர்கொள்ள முடியும் என்பதே எடுத்துக்கூற விரும்பும் எளிய கருத்தாகும்.
– இராம்குமார் சிங்காரம், Motivational speaker in tamil nadu
1 Comment
Super sir