ஒரு விவசாயி தன்னுடைய வயலில் புதிதாக பயிர்விட்ட சோளத்தை சில கொக்குகள் சேதப்படுத்திக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அன்று மாலையே ஒரு வலையை விரித்துவிட்டு வீட்டிற்குச் சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது, சில கொக்குகளுடன் ஒரு நாரையும் வகையில் சிக்கியிருந்தது.
விவசாயியை பார்த்தவுடன் அந்த நாரை, “நாள் ஒன்றும் அறியாத அப்பாவி; உன் சோளத்தை நான் தொட்டுக்கூட பார்க்கவில்லை. உனக்கு எந்தக் கெடுதலும் செய்யவில்லை. என்னைப் பார்த்தாலே தெரியும், எவ்வளவு பொறுப்பான பறவை என்று. என் பெற்றோருக்கு நான் நிறைய சேவைகள் ஆற்ற வேண்டியிருக்கிறது. என்னை தயவு செய்து விடுதலை செய்துவிடு” என்று கெஞ்சியது.
அதற்கு விவசாயியோ, “நீ சொல்வதெல்லாம் உண்ணம்தான். ஆனால் என் வயலை சேதப்படுத்திய கொக்குகளோடு நீயும் சேர்ந்திருப்பதால், உன்னை மட்டும் நான் தனியாக விடுவிக்க முடியாது. குணம் சரியில்லாதவர்களோடு சேர்ந்தது உன் தவறு” என்று
அனைத்துப் பறவைகளையும் வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.
ஆம்! நாம் இலக்கை அடைய வேண்டும்; பணம் சம்பாதிக்க வேண்டும்; வெற்றி பெற வேண்டும் என்று ஓடிக் கொண்டிருக்கும்போது நமக்கு உந்துதலாக விளங்குபவர்கள் நம்மை சுற்றியிருக்கக்கூடிய நண்பர்கள் வட்டாரமே !
என்னதான் நாம் நம்முடைய கொள்கையில் உறுதியாக இருந்தாலும்கூட, நம்முடைய சிந்தனையை ஆட்கொள்வதில் நம் நண்பர்களுக்கு பெரும் பங்குண்டு.
எனவே நம்முடைய நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வங்கிக் கணக்கை அவ்வப்போது சரிபார்ப்பதுபோல, நண்பர்களின் தரத்தையும் நாம் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
இதற்கு ஒரே வழி நீங்கள் யாருடன் அதிக நேரத்தை செலவழிக்கிறீர்கள் என்பதை ஆராய்வதுதான். அதாவது, நீங்கள் 100 பேரோடு பழகுகிறீர்கள் என்று வைத்து கொள்வோம். இதில் உங்களது 80 சதவீத நேரத்தை 20 பேரோடுதான் திரும்பத் திரும்ப செலவழிப்பீர்கள். இந்த 20 பேர்தான் உங்களது சிந்தனையை ஆக்கிரமிக்கக்கூடியவர்கள். இவர்களால் உங்கள் கனவை மெய்யாக்கவும் முடியும். பொய்யாகவும் முடியும்.
இதனால்தான் ஒத்த சிந்தனையுடைய மனிதர்களுடன் இருப்பது நல்லது என்று நம் பெரியவர்கள் சொல்வதுண்டு. ‘முதல்வனாயிரு; அல்லது முதல்வனோடிரு’ என்ற பழமொழியும் தோன்றியது இப்படித்தான்.
ஆம்! நீங்கள் யாரோடு பழகுகிறீர்களோ அவர்களது சிந்தனையே உங்களையும் தொற்றிக் கொள்ளும்.
நீங்கள் வெற்றியாளர்களைச் சுற்றியே எப்போதும் இருப்பது போன்று பார்த்து கொண்டால், ‘நாமும் வெற்றி அடைய முடியும்’ என்ற நம்பிக்கை உங்களுக்கு அதிகரிக்கும்.
ஒரு பேப்பர், பேனாவை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் தற்போது யாரோடு அதிக நேரத்தை செலவழிக்கிறீர்களோ அவர்களில் பத்து பெயரை எழுதுங்கள். அவர்களது குணங்களில் பெரும்பாலானவை உங்களிடத்தில் இருப்பதை நீங்கள் உணரலாம்.
அடுத்ததாக, உங்கள் இலக்கை அடைய உங்களுக்கு என்ன மாதிரியான குணம் கொண்ட மனிதர்கள் தேவை என்று எழுதுங்கள். உங்கள் சுற்றத்தில் இருக்கக்கூடிய அந்த குணமுடைய மனிதர்கள் ஐவரை பட்டியலிடுங்கள். இப்பொது இவர்களை எப்படி உங்களது நெருங்கிய நண்பர்களாக்கிக் கொள்ளலாம் என்று யோசியுங்கள்.
ஒருவேளை இந்த இரண்டு பட்டியலும் ஒன்றாக இருக்குமானால், நீங்கள உங்கள் இலக்கை நோக்கி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
ஒருவேளை இந்த இரண்டு பட்டியலும் வெவ்வேறாக இருக்குமாளால், காலப்போக்கில் நீங்கள் சார்ந்திருக்கும் வட்டத்தினரின் குணத்திற்கேற்ப உங்கள் வாழ்க்கையும் மாறி, நீங்கள் பணக்காரராக முடியாமல் போகலாம்.
– இராம்குமார் சிங்காரம், Tamil Motivational Speaker