தொழில் தொடங்குகின்றபோது பங்குதாரர்களைச் சேர்த்துக் கொள்ளலாமா? வேண்டாமா? என்கிற கேள்வி எல்லோருக்கும் எழுவது இயற்கையே.
இன்றைய போட்டி மிகுந்த உலகில் தனித்தனியே ஒவ்வொருவரும் செயல்பட்டு மெதுவாக உழைத்து முன்னேறுவதை விட பலர் ஒன்றிணைந்து செயல்படுகின்ற போது இன்னும் விரைவாக இலக்கினை அடைய முடியும். எனவே பங்குதாரர்களைச் சேர்த்துக் கொண்டால் தொழிலில் விரைந்து முன்னேற முடியும் என்பது உண்மையே.
ஆனால் பங்குதாரர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் ? பங்குதாரர்களோடு இணைந்து தொழில்புரியும் மனப்பக்குவம் முதலில் உங்களுக்கு இருக்கிறதா? என்பதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் .
பங்குதாரர்கள் இரண்டு வகைப்படுவர். பணத்திற்காக மட்டுமே பங்குதாரர்களை சேர்த்துக் கொள்வது ஒரு வகை [ Investing Partner ]; தொழில்நுட்பம் தெரிந்து, தொழிலில் ஒரு அங்கமாக வகித்துக் கொள்வது [ Working Partner ] மற்றொரு வகை.
பொதுவாக பணம் வேண்டி ஒருவரைப் பங்குதாரராகச் சேர்த்துக் கொள்கின்றபோது அவர் கிட்டத்தட்ட ஒரு வங்கியாளரைப் போலவோ அல்லது ஒரு நிதி நிறுவனரைப் போலவோ அல்லது ஒரு வட்டிக்கடை அதிபரைப் போலவோதான் நடந்து கொள்வார். லாபத்தில் மட்டும் அதிகக் கவனம் செலுத்துவாரே தவிர, தொழிலின் போக்குகளைப் புரிந்து கொள்வதில் அக்கறை செலுத்த மாட்டார். அவரைப் பொறுத்தவரையில் லாபம் வந்தால் உடன் இருப்பார். நட்டம் வந்தால் விலகிச் செல்வார்.
இப்படிப்பட்டவரைச் சேர்த்துக் கொள்வதைவிட, உங்களோடு தொழிலில் அன்றாடம் ஈடுபடுபவரைப் பங்குதாரராகச் சேர்த்துக் கொண்டால் நல்ல பயன்கள் உண்டு. அவருக்குத் தொழிலின் நெளிவு சுளிவுகள் தெரியும். தொழிலின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பார், ஆர்வத்தோடு கடுமையாக உழைப்பார்.
இவற்றுக்கெல்லாம் மேலாக பங்குதாரர்களோடு இணைந்து தொழில் நடத்துவதற்கென்று ஒரு தனி மனப்பக்குவம் வேண்டும். அதாவது அதிகம் கோபம் கொள்ளக்கூடாது, எல்லா செயல்களிலும் வெளிப்படையான அணுகுமுறை வேண்டும். எந்த முடிவையும் பங்குதாரர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு மேற்கொள்ளவேண்டும். ஒரு சில நேரங்களில் உங்களது முடிவுகளை ஏற்றுக் கொள்ளாத போதிலும் அனுசரித்துச் செல்லும் குணம் வேண்டும். ஒரே மாதிரியான கருத்து, ஒருமித்த முடிவெடுக்கும் தன்மை, அனுசரித்துச் செல்லும் குணம் என அனைத்தும் தேவை. சுருங்கச் சொல்லின் கணவன், மனைவிக்குரிய உறவு போன்றது அது.
குறிப்பாக உடன் பிறந்தோரையோ, உறவினரையோ, நண்பர்களையோ பங்குதாரர்களாகச் சேர்த்துக் கொள்கின்ற போது அதிக கவனம் தேவை. ஏனென்றால், பங்குதாரர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்றுகின்றபோது பணமும் போய்விடும்; உறவும் போய்விடும். உங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் எழவில்லை என்றாலும்கூட உங்களது குடும்பத்தார் இடையே சிக்கல்கள் தோன்ற வாய்ப்புகள் அதிகம். எனவே, ஒத்துப்போகும் தன்மை உங்கள் குடும்பத்தாருக்கும் இருக்கவேண்டும்.
பங்குதாரர்களிடையே சிக்கல்கள் ஏற்படக் காரணம் ‘ஈகோ’ தான். எனவே, தொடக்கத்திலேயே பங்குதாரர்கள் அனைவரும் சமமானவர்கள் தானா, யாருக்கு என்ன பொறுப்பு என்பது பற்றியெல்லாம் முடிவு செய்து கொள்வது நல்லது. யார் தலைமை ஏற்க வேண்டும்? யார் திட்டமிட வேண்டும்? யார் செயல்பட வேண்டும்? என்று பணிகளையும் பொறுப்புகளையும் திட்டமிட்டுக் கொள்வது நல்லது.
பங்குதாரர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கு இன்னொரு முக்கிய காரணம் தகவல் தொடர்பில் ஏற்படும் தொய்வு. வாரந்தோறும் சந்தித்து அந்தந்த வாரம் நடந்தவற்றை அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
கம்பராமாயணத்தில் ராவணன் சீதையைக் கடத்தும் தவறான முடிவை மேற்கொண்ட போதும், அண்ணன் செய்வதே சரி என்று துணைபோன கும்பகர்ணனின் குணமே பங்குதாரர்களுக்கு தேவை. அப்படி முடியாது எனில் தனியே தொழில் தொடங்குவதே சிறந்தது.
பங்குதாரர்களாகச் செயல்படுகின்ற போது நீங்கள் செய்யக் கூடாத காரியங்கள் இதோ…
எதைச் செய்யக்கூடாது என்பதில் தெளிவாக இருந்து விட்டால், மற்றவை அனைத்தும் நண்மையிலேயே முடியும்.
உலகின் மிகப்பெரிய நிறுவனங்களான மைக்ரோசாஃப்ட், இன்போசிஸ், ஹெச். சி. எல் போன்றவையெல்லாம் பங்குதாரர்களுடன் இணைந்து தொடங்கப்பட்டவையே. பங்குதாரர்களோடு சேர்ந்து தொடங்கினால் மிகப் பெரிய வெற்றியைக்கூட எளிதில் எட்டிப்பிடிக்க முடியும்.